அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -4

முன் பகுதிகளைப் படிக்க:

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -1

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -2

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -3

இந்து மதம் குறித்தும், ஆன்மீக வழிமுறைகள் குறித்தும் இணையத்தில் நிறையப்பேர் எழுதுகிறார்கள். இவற்றில் முக்காவாசிப் பதிவுகள், வேறு யாரோ என்றோ எதற்காகவோ சொன்னதை, அப்படியே சிறிதும் ஆராயாமல், அப்படியே வாந்தி எடுப்பதாகத்தான் உள்ளன.  இங்கெ குழு மனப்பான்மையும் கொடிகட்டிப் பறக்கிறது. இவர்கள் தங்களுக்குள் மாற்றி மாற்றி முதுகு சொறிந்து கொள்கிறார்கள். உண்மை என்ன என்பதைப் பற்றி அறிவதற்கு எந்தவிதமான முயற்சியும் செய்வதில்லை.

‘அவரே சொல்லிட்டார்’ என்பதால் எல்லாம் உண்மையாகிவிடாது.  ‘அவர்’ தானும் தன் சுற்றமும் பிழைப்பதற்காக பல உண்மைகளைத் திரித்து, அதை மதக் கோட்பாடாக மாற்றி முதுகில் மிளகாய் அரைத்து வந்தது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

எனவே இந்து மதம் / சமய வழிமுறைகளைப் பற்றி எழுதுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  இன்றைய காலகட்டத்தில்  மக்களுக்கு ஆன்மீகத்தேடல் மிகுந்து இருக்கிறது. என்பவெ இப்போது எழுத வேண்டிய தேவை இருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். ஆனால் , பக்தியின் மேலீட்டாலோ,  தன் சாதியின் நலன்களை முன்னிறுத்திக் கொள்வதற்காகவோ, வரலாற்றைத் திரிக்கும் போக்கு வேண்டாம். ஏனெனில் நல்ல சுவையான உணவை உண்ணும்போது, திடீரென பல்லில் சிக்கும் ஒரு கல், முழு உணவையும் சந்தேகிக்க வைக்கும். தன் சுயநலத்துக்காக உள்ளிடும் ஒரு பொய் பல உண்மைகளைச் சந்தேகத்திற்கு உள்ளாக்கும்.

புராணங்களோ, உபநிஷத்துகளோ, ஆரம்பத்தில் நல்ல கருத்துக்களைச் சொல்வதற்காக வந்திருக்கலாம். மறுப்பதற்கில்லை. ஆனால், தங்களுடைய சுயநலத்துக்காகக் காலப்போக்கில் அவற்றை பொது மக்களிடம் இருந்து பிரித்து, மறைத்து, அதில் ஏகப்பட்ட இடைச்செருகல்களை உட்புகுத்தி, ‘இதிலே இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது’  என்று வெளியிடும்போது  அதன் பின்புலத்தில் இயங்கும் அரசியல் வெளிப்படுகிறது.

பலபேரின் பதிவுகளில் வெற்றுக்கூச்சல்  காதைப் பிளக்கிறது.  செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், வருந்தாமல், திரும்பத் திரும்ப  தவறை நியாயப்படுத்துவதிலேயே காலம் தள்ளுகிறார்கள்.  அதிகம் கேள்வி கேட்டால், நாத்திகன் என்றோ தி,மு.க அனுதாபி என்றோ முத்திரை குத்தி வெளியில் தள்ளுகிறார்கள். சுய விமர்சனம் என்பது கிஞ்சித்தும் இல்லை.

‘நாற்றம் வீசுகிறது’ என்று சொன்னால், உனக்கு மூக்கிலே கோளாறு என்று சொல்வார்கள்.  ‘அரசனின் புதிய ஆடைகள்’ போல , அங்கே கொலுவீற்றிருக்கும் சில துதிபாடிகள் , உனக்குத்தான் ஞானம் போதாது என்பது போல நம்மீது பாய்வார்கள்.

இந்த ஆர்ப்பாட்டங்களைத் தாண்டி, முழுமையான அறிவை அடைவதுதான் நம் இலக்கு.  இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

[முடிந்தது]

 

Leave a comment