இறந்து போன இதழியல் தர்மம்

இறந்து போன இதழியல் தர்மம்

சமீபத்தில், ஒரு தொலைக்காட்சி நிறுவனம் லஞ்சம் கேட்டதாக ஒரு நிறுவனத் தலைவர் அறிக்கை கொடுத்தது நினைவிருக்கலாம். ஏதோ இந்தப் பிரச்சினை இப்போதுதான் தோன்றியிருப்பது போல ஊடகங்கள் இதனை மூடி மறைக்க முயற்சி செய்து கொண்டுள்ளன. உண்மையில், ஜனநாயகத்தின் நான்காம் தூண் உளுத்துப் போய் வெகு நாட்களாகி விட்டன.

என் கண் முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு அரசு நிறுவன ஊழியர்கள் ஒரு முறை சம்பள உயர்வுக்காக வேலை நிறுத்தம் செய்தார்கள். அந்த ஊழியர்களின் கூட்டமைப்பின் தலைவர்களை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் சந்தித்து, ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், அவர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக பேரம் பேசியது.  ஊழியர்களின் தலைவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. “சம்பள உயர்வு கேட்பது என்பது  எங்கள் நியாயமான கோரிக்கை. அதனைச் செய்தியாக வெளியிட எதற்காக நாங்கள் பணம் கொடுக்க வேண்டும்? “ என்று  மறுத்து விட்டனர்.

அதன் காரணமாக,  அந்த ஊழியர்களின் போராட்டத்தை மிகக் கேவலமாகச் சித்தரித்தது அந்தத் தொலைக்காட்சி. அந்த ஊழியர்கள் நாட்டைச் சீர்குலைப்பதாகவும், அவர்கள் அனைவரும் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தேசத் துரோகிகள் என்றும் அந்தத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

எல்லா ஊடகங்களும் Corporate நிறுவனங்களிடம் இருந்து ‘விளம்பரம்’ என்ற பெயரில் கட்டாய வசூல் நடத்துகிறார்கள் என்பதுதான் உண்மை. என்றைக்கு அந்த Corporate  நிறுவனங்கள் பணம் தருவதை நிறுத்துகிறார்களோ, அந்த நிறுவனத்தைப் பற்றி இல்லாத, பொல்லாத செய்திகளை வெளியிடுவார்கள். அந்த நிறுவனத்தைப் பற்றி அவதூறாகச் செய்திகளைப் பரப்புவார்கள்.

சந்தாவில் வரும் பணத்தில் நடந்த ஊடகங்கள் இப்போது விளம்பரம் என்ற பெயரில் பணம் காய்க்கும் மரங்களாக மாறி வருகின்றன.  இதழியல் நிறுவனங்கள் லாப நோக்கிலான கம்பெனிகளாக மாறி வெகு காலம் ஆகி விட்டது. தங்களுக்கு இருக்கும் ‘கருத்து உரிமை’ என்ற அதிகாரத்தைக் கொண்டு யாரை வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கும் வேலையைச் செய்கிறார்கள்.

சில ‘தேசிய’ செய்தித் தாள்கள் செய்யும் கூத்து இன்னும் கேவலமானது.  தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்திற்கும் நதிநீர்ப் பிரச்சினை முற்றும்போது சென்னையில் வெளியாகும் செய்தித்தாளின் பதிப்பில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகவும், பெங்களூரில் இருந்து வெளியாகும் பதிப்பில் கர்நாடகத்திற்கு ஆதரவாகவும் செய்தி வெளியிடுகிறார்கள். ஒரே செய்தித்தாள், ஆனால் செய்தியில் அவர்கள் காட்டும் சார்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறும்.

2-ஜி – பிரச்சினையில் சில செய்தியாளர்கள், புரோக்கர்களாக மாறிச் செயலாற்றியதை நாடே பார்த்தது. ஆனால் அதே ஆட்கள், கொஞ்சம் கூட வருத்தமின்றி இன்றும் தங்கள் வேலையைத் தொடர்கிறார்கள். அவர்களின் இதழியல் தர்மத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

இன்று மக்களுக்கு செய்தி கேட்பது/பார்ப்பது என்பது ஒரு நோயாக மாறி இருக்கிறது. கொலை நடப்பதை ‘Live’ –ஆகக் காட்டினாலும் , எந்தவித உணர்வுமின்றி அதனைக் கண்டு களிக்கும் அளவிற்கு உணர்ச்சியற்ற காங்க்ரீட் தூண்களாக மக்களை இந்த ஊடகங்கள் மாற்றி வைத்திருக்கின்றன.

மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்தபோது அதை போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்பினார்கள். அங்கே தாக்குதலில் சிக்கிக் கொண்டவர்கள், தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த படைவீரர்கள் ஆகியோரின் உறவினர்களிடம் கேட்டுப்பாருங்கள், இந்த ‘Live Coverage’ எவ்வளவு துன்பமானது, அபத்தமானது என்பதை அவர்கள் சொல்வார்கள்.

கிரிக்கட் விளையாட்டையும் , மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் ஒரே மாதிரி ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளை வளர்த்து விடுவது நாம் அல்லாமல் வேறு யார்?

Tagged:

Leave a comment