Category Archives: அரசியல்/சமூகம்

இறந்து போன இதழியல் தர்மம்

இறந்து போன இதழியல் தர்மம்

சமீபத்தில், ஒரு தொலைக்காட்சி நிறுவனம் லஞ்சம் கேட்டதாக ஒரு நிறுவனத் தலைவர் அறிக்கை கொடுத்தது நினைவிருக்கலாம். ஏதோ இந்தப் பிரச்சினை இப்போதுதான் தோன்றியிருப்பது போல ஊடகங்கள் இதனை மூடி மறைக்க முயற்சி செய்து கொண்டுள்ளன. உண்மையில், ஜனநாயகத்தின் நான்காம் தூண் உளுத்துப் போய் வெகு நாட்களாகி விட்டன.

என் கண் முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு அரசு நிறுவன ஊழியர்கள் ஒரு முறை சம்பள உயர்வுக்காக வேலை நிறுத்தம் செய்தார்கள். அந்த ஊழியர்களின் கூட்டமைப்பின் தலைவர்களை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் சந்தித்து, ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், அவர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக பேரம் பேசியது.  ஊழியர்களின் தலைவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. “சம்பள உயர்வு கேட்பது என்பது  எங்கள் நியாயமான கோரிக்கை. அதனைச் செய்தியாக வெளியிட எதற்காக நாங்கள் பணம் கொடுக்க வேண்டும்? “ என்று  மறுத்து விட்டனர்.

அதன் காரணமாக,  அந்த ஊழியர்களின் போராட்டத்தை மிகக் கேவலமாகச் சித்தரித்தது அந்தத் தொலைக்காட்சி. அந்த ஊழியர்கள் நாட்டைச் சீர்குலைப்பதாகவும், அவர்கள் அனைவரும் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தேசத் துரோகிகள் என்றும் அந்தத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

எல்லா ஊடகங்களும் Corporate நிறுவனங்களிடம் இருந்து ‘விளம்பரம்’ என்ற பெயரில் கட்டாய வசூல் நடத்துகிறார்கள் என்பதுதான் உண்மை. என்றைக்கு அந்த Corporate  நிறுவனங்கள் பணம் தருவதை நிறுத்துகிறார்களோ, அந்த நிறுவனத்தைப் பற்றி இல்லாத, பொல்லாத செய்திகளை வெளியிடுவார்கள். அந்த நிறுவனத்தைப் பற்றி அவதூறாகச் செய்திகளைப் பரப்புவார்கள்.

சந்தாவில் வரும் பணத்தில் நடந்த ஊடகங்கள் இப்போது விளம்பரம் என்ற பெயரில் பணம் காய்க்கும் மரங்களாக மாறி வருகின்றன.  இதழியல் நிறுவனங்கள் லாப நோக்கிலான கம்பெனிகளாக மாறி வெகு காலம் ஆகி விட்டது. தங்களுக்கு இருக்கும் ‘கருத்து உரிமை’ என்ற அதிகாரத்தைக் கொண்டு யாரை வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கும் வேலையைச் செய்கிறார்கள்.

சில ‘தேசிய’ செய்தித் தாள்கள் செய்யும் கூத்து இன்னும் கேவலமானது.  தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்திற்கும் நதிநீர்ப் பிரச்சினை முற்றும்போது சென்னையில் வெளியாகும் செய்தித்தாளின் பதிப்பில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகவும், பெங்களூரில் இருந்து வெளியாகும் பதிப்பில் கர்நாடகத்திற்கு ஆதரவாகவும் செய்தி வெளியிடுகிறார்கள். ஒரே செய்தித்தாள், ஆனால் செய்தியில் அவர்கள் காட்டும் சார்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறும்.

2-ஜி – பிரச்சினையில் சில செய்தியாளர்கள், புரோக்கர்களாக மாறிச் செயலாற்றியதை நாடே பார்த்தது. ஆனால் அதே ஆட்கள், கொஞ்சம் கூட வருத்தமின்றி இன்றும் தங்கள் வேலையைத் தொடர்கிறார்கள். அவர்களின் இதழியல் தர்மத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

இன்று மக்களுக்கு செய்தி கேட்பது/பார்ப்பது என்பது ஒரு நோயாக மாறி இருக்கிறது. கொலை நடப்பதை ‘Live’ –ஆகக் காட்டினாலும் , எந்தவித உணர்வுமின்றி அதனைக் கண்டு களிக்கும் அளவிற்கு உணர்ச்சியற்ற காங்க்ரீட் தூண்களாக மக்களை இந்த ஊடகங்கள் மாற்றி வைத்திருக்கின்றன.

மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்தபோது அதை போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்பினார்கள். அங்கே தாக்குதலில் சிக்கிக் கொண்டவர்கள், தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த படைவீரர்கள் ஆகியோரின் உறவினர்களிடம் கேட்டுப்பாருங்கள், இந்த ‘Live Coverage’ எவ்வளவு துன்பமானது, அபத்தமானது என்பதை அவர்கள் சொல்வார்கள்.

கிரிக்கட் விளையாட்டையும் , மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் ஒரே மாதிரி ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளை வளர்த்து விடுவது நாம் அல்லாமல் வேறு யார்?

தீபாவளி வாழ்த்துக்கள்

மழை-1 துளி-15  (tamilodai.wordpress.com)

தீபாவளி வாழ்த்துக்கள்

விழித்த பின்னும் போர்வைக்குள்ளேயே இருக்கச் சொல்லித் தூண்டுகிற மிதமான குளிரோடும், கூரை நனைத்துச் செல்லும் லேசான தூறலோடும், காலைப் பிறாண்டி போர்வைக்குள் நுழைந்து ‘ருரு’ வென்று சத்தத்துடன் சூடு தேடும் பூனைக்குட்டியின் மென்மையோடும், ‘ச்சூ.. போ’ என்று செல்லமாய் விரட்டும் அம்மாவின் குரலுக்கு கீழ்ப்படிய மறுத்து அடுப்படியில் வந்து நிற்கும் ஆட்டுக்குட்டியின் அன்போடும்,
தரை தழுவிச் செல்லும் தங்கையின் பாவாடையைப் பிடித்து இழுக்கும் நாய்க்குட்டியின் குறும்போடும் தனக்கே உரித்தான சிறப்போடு வந்து நிற்கிறது தீபாவளி.

விற்காது கிடந்தவற்றுக்கு விலையை ஏற்றி 90 % தள்ளுபடி அறிவித்து கடை விரித்துக் காத்திருக்கும் வியாபாரிகளின் விவேகம் தாண்டி, சாராய வியாபாரியின் கதவு தட்டி தீபாவளி இனாம் கேட்கும் கடமையைக் காசுக்கு விற்றுப் பிழைக்கும் காவலர் மறந்து, நம் நாட்டின் பொருளாதாரம் போல் சுரண்டப்பட்டுச் சிறுத்துப் போன ‘ மெயின் ரோடு (?) ‘ கடந்து, ” நீ சின்ன வயசாயிருந்தப்ப குடகனாறு நெம்பி , அழகாபுரி டேம் ஒடஞ்சி ஒடியாந்த தண்ணியில நெம்பிக் கெடந்தது ” என்று நம் தாத்தா நினைவூட்டும் குளத்தின் வெடித்த தரைக்குள் கால் சிக்கிக் கொள்ளாமல் கவனமாய் நடந்து, கொஞ்சம் தூரம் என்னுடன் வரமுடியுமா உங்களால் ?
ஏதோ ஒரு கடவுள் எவனோ ஒரு அரக்கனைக் கொன்றதற்கு நன்றி செலுத்துவதாய் நமக்கு நாமே கற்பித்துக் கொண்டு , கொத்தடிமைகளாய் விரலகள் தேய, நகக்கண் உரிந்து புண்ணாக , கந்தகத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு படித்துத் தெரிந்து கொள்கின்ற வயதில் பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு, வயிற்றுப்பாட்டுக்கு வழியற்றுப் போய், பூங்காக்களின் மலர்களோடு மலர்களாய் பூத்து விளையாடும் வாய்ப்பற்று, ஒரு இராமானுஜமாய், ஒரு விவேகானந்தனாய், ஒரு அப்துல் கலாமாய், ஒரு பாரதியாய், தாசனாய் இன்னும் பலராய் இயல முடியாமல், கந்தகம் சுவாசித்துச் சிறிது சிறிதாய் செத்துக் கொண்டிருக்கும் சிறார்களின் உயிரின் மீது , நாம் பற்ற வைக்கும் நெருப்பின் வழியாக வெந்து தீய்வது நிச்சயமாய் நரகாசுரன் வடிவிலான தீமை அல்ல.

சிந்திக்கச் சுரணையற்று, கல்வியைச் சம்பாதிக்கும் வழி காட்டும் கருவியாக மட்டுமே நினைத்துக் கற்று, தினமும் வம்பு வளர்த்து, அடித்துப் பிடுங்கி, நாற்காலிகளைத் தேய்த்து, வெந்ததைத் தின்று வாழ்ந்து மடிந்து போகும் நமக்குள் இருந்திருக்க வேண்டிய மனிதம்.
மிருகங்களிலிருந்து வேறுபடுத்துவதாகச் சொல்லிச் சொல்லி மார் தட்டிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் பகுத்தறிவு.
வள்ளுவரிலிருந்து வள்ளலார் வரை நம்முடைய கல்நெஞ்சுக்குள் கசிய வைப்பதற்காய் கத்திக் கத்தி வறண்டுபோன கருணை.
காட்டுக்குள் இலைகளால் மானம் மறைத்துத் திரிந்த நமக்கு நதிக்கரையில் அலையடித்துக் கொண்டுவந்து கொடுத்த நாகரீகம்.
மேற்கத்திய நாடுகளிலிருந்து இளைஞர்கள் தேடி வந்து கொண்டிருக்கும் நமக்கே உரித்தான இறையாண்மை.
புத்தன், ஏசு, முகமது கொட்டிக் கொடுத்த ஆன்மிக நெறி.

வெளிநாட்டு வங்கிகளில் பிச்சையெடுத்துக் கொண்டு வந்தும், எல்லா இந்தியனுக்கும் உணவளிக்கப் பணமற்று, ஒரு பருக்கைக்குக் கூட வழியற்றுப் பசியோடு செத்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களை மறந்து , இன்னும் சில நாட்களில் இந்த நாடு முழுமையுமாக பல நூறு கோடிக்கணக்கான ரூபாயை எரித்துச் சாம்பலாக்குவதற்குக் களிப்போடு காத்திருக்கும் நாம், உண்மையில் அந்த நரகாசுரன் என்ற பாத்திரமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோமல்லாமல் வேறென்ன ?

புராணக் கதைகளுக்குத் தவறாய் உரை எழுதுவதை விடுத்து, ஒரு ஏழைக்கு உணவும் உடையும் கொடுத்து நம் சக மனிதனாய் நடத்துவோம். இயலுமானால் ஒரு ஏழைக் குழந்தையின் வாழ்க்கையில் கல்வி தீபத்தை ஒளிர விடுவோம்.
நம் வீட்டுக்குள் தீபத்தை எற்றி வைப்பதற்குப் பெயரல்ல தீபாவளி.                 பசித்தவனின் அடுப்பில் நாம் ஏற்றி வைக்கும் தணல்தான் தீபாவளி.
அனைவருக்கும் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும்

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும்

கண்ணதாசன் எழுதிய ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலை நான் சிறு வயதில் படித்திருக்கிறேன். அதைத் திரும்பப் படிக்கும் ஒரு வாய்ப்பு பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பர் மூலம் வாய்த்தது. சிறு வயதில் படித்தபோது உண்டான ஒரு பிரமிப்பு இந்த முறை உண்டாக வில்லை. மாற்றாகப் பல கேள்விகள் எழுந்தன. பல பகுதிகளைப் படிக்கும்போது, தன்னுடைய சுய புராணத்தைப் பாடுவதற்கும், யாரோ சிலருடைய வில்லுக்கு அம்பாக மாறி யார் மீதோ கணை தொடுப்பதற்காகவுமே அவர் இதை எழுதியிருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

இந்த நூலைப் படிக்கும்போது ஏற்பட்ட எல்லா நெருடல்களையும் இங்கு எழுத முடியாது என்றாலும், சில கருத்துக்களுக்கான எதிர் வினைகளை இங்கு வைத்தே ஆக வேண்டும் என்றே நினைக்கிறேன். ஏனெனில் ‘கண்ணதாசனே சொல்லி இருக்கிறார்’ என்ற பரிந்துரையைக் கைக்கொண்டு இணையத்தில் சிலர் இந்து மத வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தான் விளம்பர மாடலாக நடித்த சாக்லெட்டில் புழு இருந்ததைப் பற்றி எப்படி ஒரு இந்தி நடிகருக்குக் கவலை இல்லையோ, அப்படியே தான் அவிழ்த்து விட்ட புழு(ளுகு)களைப் பற்றியும் கண்ணதாசன் கவலைப்படவில்லை. அங்கேயும் பணத்துக்கு விளம்பர மாடல். இங்கேயும் பணத்துக்காக இலக்கியச் சேவை!

எனவே அந்த நூலின் சில பகுதிகள் மீதான விமர்சனம் மட்டும் இங்கே.

எதிர்வினை-1-முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு:

கண்ணதாசன், தனது நூலின் இரண்டாம் பாகத்தில் , எட்டாவது தலைப்பில் ‘வள்ளுவர் ஓர் இந்து’ என்று வரிந்து கட்டிக் கொண்டு எழுதியிருக்கிறார்.

வள்ளுவர், திருக்குறள் நூலை அரங்கேற்ற இயலாமல் முட்டுக்கட்டைகள் பல போடப்பட்டன என்பதும், அவர் சாதி அடிப்படையில் பல நிந்தனைகளுக்கு ஆளானார் என்றும் , அவர் சாதி/வருண பேதங்களை எதிர்த்தவர் என்பதும் நமக்குக் கிடைக்கின்ற செய்திகள். அவரை அன்று வளர விடாமல் செய்த கூட்டம், அவர் எழுதிய நூல் உலகப் புகழ் பெற்ற பின்னால், அவருக்குச் சொந்தம் கொண்டாட எந்தவித வெட்கமும் இல்லாமல் திரிகிறது. பாரதி வாழ்ந்த காலத்தில் வசை பாடிய கும்பல், செத்த பின்பு அவரைத் தங்கள் ஆள் என்று சொந்தம் கொண்டாடியதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வள்ளுவர் வாழ்ந்த காலத்தையும், அவரது நூலில் இருந்த கருத்துக்களையும் வைத்து அவர் சமண மதத்தின் மீது பற்றுடையவர் என்று ஏற்கனவே நிரூபித்தாகி விட்டது. இன்றைக்கு சமண மதம் அதிகாரத்துடன் இல்லை என்பதாலும், சமண மதத்தை, இந்து மதம் தனக்குள் உள் வாங்கிக் கொண்டது என்பதாலும், சமண மத நூல்கள் அனைத்தும் இந்து மத நூல்களே என்று நிறுவி விடத் துடிக்கிறது ஒரு கூட்டம். விட்டால் சிலப்பதிகாரம், மணிமேகலை கூட இந்து மத நூல்கள்தான் என்றுகூட நாளைக் கதை விடக்கூடும். இந்த மாதிரி வேலைக்குக் கண்ணதாசன் துணைப் போவதுதான் வேடிக்கை.

வள்ளுவன் இந்து என்பதை நிரூபிப்பதற்காக கண்ணதாசன் திருக்குறளில் இருந்து ‘இறைவன்’, ‘கடவுள்’, ‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ போன்ற சில வார்த்தைகளை எடுத்துக் கொண்டு விளையாடுகிறார்.

இது மட்டும் அல்லாமல், தனது நூலின் 3-ஆம் பகுதியில், (அத்தியாயம்-9, பக்கம்-64)  “மகா நிர்வாணத்தை, இந்துத் தத்துவங்களில் இருந்தே பவுத்தம் எடுத்துக் கொண்டது” என்றொரு புருடா விடுகிறார்.

நாம் இங்கு உணர வேண்டியது – இந்து மதம் என்றொரு தனி மதம் இருக்கவேயில்லை. மக்கள் தங்கள் புரிதலுக்கும், பண்பாட்டுக்கும் இயற்கைச் சூழலுக்கும் தக்கவாறு பல்வேறு நம்பிக்கைகளை, வழிபாட்டு முறைகளைக் கைக்கொண்டிருந்தனர். நீத்தாரை வழிபடுதல், இயற்கையை வழிபடுதல் பெரிதும் பின்பற்றப்பட்டன.

பிற்காலத்தில் தன்னை உணர்ந்த (உணர்ந்ததாகச் சொல்லிக்கொண்ட) சிலர் இங்கும் அங்குமாய்ச் சிதறிக்கிடந்த பல நம்பிக்கைகளை, வழிமுறைகளை ஒன்று சேர்த்து, அதனை ஒரு மதமாகக் கட்டமைத்தனர் என்பதே உண்மை.

இந்தக் கட்டமைப்புக்கான அவசியம் ஏன் ஏற்பட்டது? அந்நியர்களின் படையெடுப்பால் மக்கள் தங்கள் மதத்தை மாற்றாதிருக்கும் பொருட்டும், அந்நியர்களுக்கு எதிராக மக்களை அணி சேர்க்கும் நோக்கத்துடனும் இது ஒரு மதமாகக் கட்டமைக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் புத்தம், சமணம் போன்று திரும்பவும் புதிய மதங்கள் இங்கு தோன்றுவதைத் தடுப்பதும் இதற்கான அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும்.

அவ்வாறு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த கோட்பாடுகளை ஒன்று சேர்த்து உருவாக்கும்போது, ஏற்கனவே உருவாகியிருந்த மாற்றுக் கோட்பாடுகளும் உள்வாங்கிக் கொள்ளப்பட்டன. இந்த உள்வாங்கும் (கபளீகரம் செய்யும்) தன்மையால்தான், இங்கே உருவான எல்லா மதங்களும் காணாமல் போயின.

எதிரிக்குப் பெண்ணைக் கட்டிவைத்து உறவாக்கிக் கொள்வது காலகாலமாய் , இந்தியாவில் இருந்த அரசர்களிடையே நடந்து வந்த தந்திரம்தான். அந்த வழிமுறை இந்து மதக் கட்டமைப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.

இந்து மதமானது சமண, புத்த மதங்களை உள்வாங்கும்போது, அதில் பயன்பாட்டில் இருந்த வார்த்தைகள், கடவுள் பெயர்கள் ஆகியவையும் உள்வாங்கப்பட்டன. சிவனின் பெயர்களாகச் சொல்லப்படும் பல வார்த்தைகள் ஏற்கனவே சமண மதத்தில் பயன்பாட்டில் இருந்தவையே. (எனக்கும் ஆள் பலம், படை பலம் இருந்தால், சிவனையே சமண சமயக்கடவுள் என்றொரு நூல் எழுதலாம் என்றொரு ஐடியா இருக்கிறது… )

IT துறையில் இருப்பவர்களுக்குத் தெரிந்த விஷயம் ஒன்று. COMPAQ என்றொரு வன்பொருள் நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனத்தை HP என்ற மற்ற நிறுவனம் வாங்கித் தனக்குள் சேர்த்துக் கொண்டது. அதுவரை COMPAQ என்ற பெயரில் வந்து கொண்டிருந்த பொருட்கள் எல்லாம் HP என்ற பெயரில் வர ஆரம்பித்தன். COMPAQ PROLIANT என்ற பெயரில் SERVER-கள் வந்து கொண்டிருந்தன. அவை பின்னால் HP PROLIANT என்ற பெயரில் வர ஆரம்பித்தன.

ஒரு 500 வருடம் கழித்து, PROLIANT என்ற வார்த்தையை வைத்து , அந்தப் பொருள் HP-க்குச் சொந்தமானது என்றோ, அதனை HP-தான் உருவாக்கியது என்றோ ஏதோ ஒரு கூட்டம் சொன்னால் அது எவ்வளவு பெரிய கூமுட்டைத்தனம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

இந்தக் காரியத்தை, சினிமாவில் பாட்டெழுதியதால் புகழ் பெற்ற கண்ணதாசன், தனக்கு சம்பந்தமில்லாத இன்னொரு துறைக்குள் புகுந்து செய்கிறார். இல்லை –இல்லை அவர் யாரோ ஒருவருடைய தூண்டுதலினால் அந்தக் காரியத்தைச் செய்கிறார். யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவருடைய நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரையைப் படித்தால் விளங்கும் .

கேரளாவில் கிறித்துவர்கள் கடவுளை ஈஸ்வரன் என்றே அழைக்கிறார்கள். 90% சர்ச்சுகளில், கோவில்களில் இருப்பது போலவே கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது. மேரி மாதா அல்லது ஏசுவின் சிலைக்கு சிலர் விளக்கேற்றியும் வழிபடுகிறார்கள். (எர்ணாகுளத்தில் கலூர் என்றொரு இடத்தில் செயின்ட் ஆண்டனி சர்ச் உள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை அன்று சென்று பார்த்தால் தெரியும்).

ஒருமுறை என் மலையாள நண்பர் ஒருவர் ‘SPIRITUAL’ என்ற தலைப்பில் ஒரு ஆடியோ சி.டி கொண்டுவந்தார். அதனைக்கேட்கும்போது அது இந்து மதச் சொற்பொழிவு போன்றே தோன்றியது. ‘ஈஸ்வரனின்’ கருணையைப் பற்றி அடிக்கடி சொன்னார்கள். இறுதியில் ‘ஆமென்’ என்று சொல்லி முடிந்தபோதுதான், அது கிறித்துவ மதச் சொற்பொழிவு என்றே கண்டுபிடிக்க முடிந்தது. ‘ஈஸ்வரன்’ என்ற வார்த்தையைக் கொண்டு, கண்ணதாசனின் லாஜிக் படி அதை இந்து மதம் என்று நாம் கூற முடியுமா?

தமிழ், பாலி போன்ற மொழிகளில் இருந்து ஏராளமான சொற்களை உள்வாங்கி ‘உருவாக்கப்பட்ட’ சமற்கிருதம், பின்னாளில் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற காரணத்தால், மற்ற மொழிகளுக்கு மூலமொழி என்று எவ்வாறு புனைந்து உரைக்கப்பட்டதோ, அதற்கு என்ன நோக்கமோ அதே முறையில்தான் வள்ளுவர் ஓர் இந்து என்ற புனைகதையும், அதன் நோக்கமும் ஆகும்.

தமிழ்நாட்டின் சாபக்கேடு என்னவெனில், தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதுபோல, இங்கு எழுதத் தெரிந்தவனெல்லாம் ஆராய்ச்சியாளன் ஆகி விடுகிறான். ஏற்கனவே இந்து மதத்தில் நிறைய அழுகிப்போய் நாற்றம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதைச் சரி செய்வதுதான் உண்மையான தொண்டாக இருக்க முடியும். திருக்குறளைப் படித்து அதில் சொல்லப்பட்ட அறநெறிகளைப் பயன்பாட்டில் கொண்டு வருவதன்மூலம் அதனைச் சாதிக்க முடியும். அதனை விட்டுவிட்டு, அந்த நாற்றத்தைப் புனுகு பூசி மறைத்துக் கொண்டு, வெட்டியாய் வள்ளுவனுக்கு மதச் சாயம் பூசுவது தவறு.

வள்ளுவன், புத்தன், ஏசு, காந்தி போன்றவர்களின் பணியைப் புரிந்து கொள்வதும், மனித இனத்தின் மீது அவர்கள் கொண்ட அன்பை உணர்ந்து போற்றுவதுமே நலம் தரும். மனித நேயம் கொண்டு, மனிதர்களின் கடைத்தேற்றத்துக்காக இயங்கிய  மாமனிதர்களை மதத்துக்குள் இழுப்பது சூரியனைக் குடத்துக்குள் அடக்க முயற்சிப்பது போல வீண் வேலை ஆகும்.

[தொடரும்]

வரலாற்றைப் புதைக்கும் வருங்காலங்கள்

/***

இன்றைக்கு நீ உட்கார்ந்து1950-ல் வெளிவந்த திரைப்படம் பார்த்தால் எப்படிப் பல காட்சிகள் பைத்தியக்காரத்தனமாக தோன்றுமோ அது போலவே சில வரலாற்று நிகழ்வுகளும் இருக்கும்.வரலாற்றை உண்மையான நோக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் நம் மனநிலையில் பின்னோக்கிப் பயணம் செய்து அந்தக் காலகட்டத்தில் இருந்த சூழ்நிலையை ஆராய்ந்து வரலாற்று நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

**/

இந்தக் கருத்தானது ‘பேரறிஞர் சொன்ன பெருச்சாளிகள் கதை’ என்ற முந்தைய பதிவில் நான் கூறிய கருத்தாகும்.  50 / 100 வருடங்களுக்கு முன்னால் இருந்த சூழ்நிலையைக் கணக்கில் கொள்ளாமல், இன்று 2012-ல் நமக்கு இருக்கும் மன நிலையை  அளவு கோளாகக் கொண்டு பழைய வரலாற்று நிகழ்வுகளை  அளக்கப் போனால் பெரிய தவறு ஏற்படும்.

ரஷ்ய நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட ‘லெனின்’ , இப்போது ஒரு ‘கொலைகாரன்’ என்று சித்தரிக்கப்பட்டு, மக்கள் அவருடைய சிலை மீது காறித் துப்புவதும் , செருப்பை எறிவதும் நடக்கிறது.  இன்றைய கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் பிரச்சினைகளுக்கு 100 வருடங்களுக்கு முன்னால், விடுதலைக்காகப் போராடி, ஜார் மன்னர்களிடம் இருந்து விடுதலை பெற்றுத் தந்த லெனின் எப்படிப் பொறுப்பாக முடியும்?

பார்க்க :  மங்கோலியாவில், லெனின் சிலை மீது ஷூக்களை எறியும் மக்கள்.

(பட உதவி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், செவ்வாய் – 16-அக்டோபர்-2012, பக்கம்-11)

மன்மோகன் சிங்கும் மான்டேக் சிங்கும் பொருளாதாரத்தை மாற்றுகிறேன் பேர்வழி என்று  அமெரிக்காவிடம் நாட்டை அடகு வைத்து, இந்தியாவை நாசம் செய்வதற்கு  மகாத்மா காந்தியோ நேருவோ  எப்படிக் காரணம் ஆக முடியும்?

அப்படியானால், நாடு நன்றாகப் போனால், பழைய தலைவர்களுக்கு விழா எடுப்பதும், நாசமாகப் போனால் அவர்களைச் செருப்பால் அடிப்பதும்  நாம் உண்மையான விழிப்புணர்வுடன் வாழவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

இன்றைய தி.மு.க-வின் செயற்பாடுகளை வைத்து அன்றைய அண்ணாவை விமர்சனம் செய்து தமிழ்-இந்துவில் கட்டுரை எழுதியவரும், அதற்குத் துதிபாடி (‘நீங்கதான் என் கண்ணத் தொறந்தீங்க’  என்று கூட ஒருவர் பின்னூட்டமிருக்கிறார்.) எழுதிய மக்களும் சிந்திக்க வேண்டும் என்பதற்குத்தான் இந்தப் பதிவு.

பேரறிஞர் சொன்ன பெருச்சாளிகளின் கதை

தம்பி!, தமிழ்-ஹிந்து  வலைத் தளத்தில் என்னைப் பற்றி விக்கிரமாதித்தன் வேதாளத்திற்குச் சொல்வது போல ஏதோ கதை சொல்லியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். செத்த பாம்பை நாம் அடிப்பதில்லை , இருந்தாலும், இப்போது இந்தக் கூட்டம் திரும்பவும் திரண்டு , இணையத்தில் பரவி, ஆராய்ச்சி என்ற பெயரில் ஈரை எறும்பாக்கி,எறும்பை எருமையாக்கி, பேனைப் பெருமாளாக்கும் வேலை செய்து வருகிறது என்பதைக் கண்டு வருகிறேன்.அய்யகோ, தம்பி , இவர்களின் அறியாமையைப் பற்றி என் சொல்வேன்! இவர்கள் ,தங்கள் உண்மையான எதிரிகள் யார் என்று அறியாமல், இருட்டில் இருந்து கொண்டு தன்னுடைய –யைத் தானே நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெளிச்சத்திற்கு வந்து அவர்கள் வாழ்வில் வெள்ளி முளைக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

/**“அட முட்டாள் வேதாளமே… ஒரு நாட்டையே முட்டாளாக்கிய ஒரு மனிதரைப் பற்றி ரொம்ப சீரியஸாக ஆராய்ச்சி செய்துகொண்டு அந்த முட்டாள் கும்பலில் ஒருவனாக ஆகிவிட்டாயே… உன்னையும் நீ கேட்கும் கேள்விகளையும் நினைத்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை. **/

தம்பி நாட்டை யார் முட்டாள் ஆக்கினார்கள் என்று நானிலத்தில் ஒரு குழந்தை கூட அறியும். ஒரு பெருச்சாளிக் கும்பல் இங்கு வந்தேறி நாட்டைக் குட்டிச் சுவராக்கியது என்று எல்லோருக்கும் தெரியும், ஆளும் மன்னன் எவன் ஆனாலும், அவன் பெயரில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தது இந்த கும்பல்தான் என்பதை மறந்து விடாதே.
/** நீ சொல்வதெல்லாம் அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து பள்ளி பாட புத்தகத்திலும் பொது ஊடகங்களிலும் செய்து வரும் பிரச்சாரம். உண்மைக்கும் நீ அடுக்கிய செய்திகளுக்கும் சற்றும் சம்பந்தமில்லை.” என்றான்.**/
தம்பி,உன்னிடத்தில் பணம் வாங்கிக் கோவில் கட்டி, உன்னையேத் தெருக்கோடியில் நிறுத்தி வைத்த கும்பலடா அது.நம்முடைய கலைகளையும், வித்தைகளையும் இவர்கள் நம்மிடம் இருந்தே கற்றுக் கொண்டு, அதனைத் நமக்கே எட்டாமல் செய்தவர்கள். தகுதி இருப்பின் யார் வேண்டுமானாலும் ஆசிரியர் ஆகலாம், குரு ஆகலாம், உள்ளத்தில் அன்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் அந்தணன் ஆகலாம் என்று இருந்த நிலையை மாற்றி, (திருக்குறள்-30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்.“ பொருள்: அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.) தன் இனத்தில் பிறந்தவன் மட்டுமே, தகுதி படைத்தவன் என்று கதை கட்டிப் பிரச்சாரம் செய்த கூட்டமடா அது. தான் மட்டும் பிரம்மாவின் தலையில் பிறந்தவன் என்றும் , நாமெல்லாம் ஏதோ கடனுக்குக் காலில் பிறந்தவர்கள் என்றும் பிரச்சாரம் செய்தவன் அவன், எனவே , தம்பி அவன் பசப்பு வார்த்தையில் மயங்கி விடாதே.இந்தக் கரையான்கள், தாங்கள் இருக்கும் வீட்டையே அரித்துத் தின்பவை என்பதை மறந்து விடாதே.இவர்களுடைய துரோகத்தை இங்கு எழுதினால், இரண்டு லட்சம் பக்கங்கள் எழுதினாலும் தீராது.நீ , நான் எழுதிய நூல்களைப் படி, (http://www.arignaranna.net/ilakiyam_main.asp) தெளிவு பிறக்கும்.
/***ஆரம்பம் முதல் அண்ணாதுரைக்கு சுயநலக் கொள்கை ஒன்றுதான் இருந்தது. < —–> ஈவேரா ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஆட்சியில் இருந்து பதவி சுகத்தை அனுபவிப்பது அண்ணாவையும் அவர் கோஷ்டியையும் வெறுப்பேற்றியது. இதேதடா… உருப்படாத கட்சியாக இருக்கிறதே என்று அண்ணாவும் அவர் தம்பிகளும் அடுத்த சில வருடங்களில் (1948), வெளியேறினர்**/
தம்பி, 1949-ஆம் ஆண்டு தி.மு.க-வை உருவாக்கினோம்.எனக்குப் பதவிதான் முக்கியம் என்று நினைத்திருந்தால், தனிக்கட்சி துவக்கியிருக்க வேண்டியது இல்லை.நான் காங்கிரஸில் சேர்ந்து அதைச் சாதித்து இருக்கலாமே. மேலும் 1949-லேயே தி.மு.க ஆரம்பிக்கபட்ட போதிலும், ஒரு கட்சியாக எல்லா உள்-கட்டமைப்புகளும் இருந்த போதிலும்1952 பொதுத் தேர்தலில் தி.மு.க போட்டியிட வில்லை. தி.மு.க-வின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட,தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை ஏற்றுகொண்ட சுயேச்சைகளுக்கு தி.மு.க ஆதரவளித்தது. தி.மு.க-வின் ஆதரவில் வெற்றி பெற்ற இந்த சுயேச்சைகள் துரோகிகளாக மாறிக் காங்கிரஸில் சேர்ந்துவிட்டனர்.மேலும் இராஜாஜியின் தலைமையிலான காங்கிரஸ், திமுகவைத் தொலைத்துவிட வேண்டி எல்லா வழிமுறைகளையும் கையாண்டது. (ஊழலை எதிர்த்த பாபா ராம்தேவ்,அன்னா ஹஜாரே போன்றோரை காங்கிரஸ் எவ்வாறு கையாண்டது என்பதை கண்கூடாகப் பார்க்கிறாயே). தேர்தல் அரசியலில் ஈடுபட்டால்தான் தன் இலக்கை அடைய முடியும் என்பதை உணர்ந்தபின்பு, 1957-ல் இருந்துதான் தி.மு.க தேர்தலில் கலந்து கொண்டது.
பதவிக்கு அலைந்தவன் அல்ல நான் என்பதை நீ அறிவாய். மன்னர் காலம் தொட்டு மக்கள் ஆட்சி வரை ஆட்சி நடத்தியது யார் என்பதை நீ அறிவாய். ஆங்கிலேயனின் அடிவருடிகளாக இருந்து அதிகாரம் செலுத்தியது யார் என்பதை நாடே அறியும். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வெற்றி பெறுவது போல ஒரு நிலை ஏற்பட்டபோது அவசரம் அவசரமாக ஆங்கிலத்தைத் தூக்கி எறிந்து விட்டு ஜெர்மன் மொழி படிக்க அலைந்த கூட்டமடா இந்த பெருச்சாளிக் கூட்டம்.

/**

தனியார் துறை நிறுவனங்கள் வளராத வளரமுடியாத காலம் அது. அரசியல் கூட்டங்களுக்கு மிக எளிதாகவே கும்பல் கூடியது. மக்கள் கொள்கை முழக்கங்களில் மயங்கினார்கள். அப்போது கவிந்தது தான் திராவிட கழக இருட்டு. அன்றைய நிலையைப் சரியாக பயன்படுத்திக் கொண்டது அண்ணாதுரையின் அரசியல் தந்திரம். **/
தம்பி, 1962-க்குப் பிறகுதான் பெரும்பாலான அரசு நிறுவனங்கள் தமிழ் நாட்டில் உருவாகின. அதுவரை தனியார்தான் – காங்கிரசில் இருந்த பண முதலைகள்தான்– எல்லாத் துறையிலும் கோலோச்சிக் கொண்டிருந்தனர். தனி மனிதர்களின் கையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இருக்க பலர் கொத்தடிமைகளாக இருந்தனர்.பொருளாதார ஏணியில் ஏழைகளை ஏற விடாமல் நசுக்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது.பஞ்சத்தில் அடிபட்டுக் கிடந்த மக்களை எலிக்கறி தின்று பிழைக்குமாறு சொன்னார் இராஜாஜி. எனவே ஏற்கனவே தேவையான இருட்டு தமிழ்நாட்டில் இருந்தது. புதிதாக திராவிட இருட்டு வந்து மூடியது என்பது கற்பனைக் கதை.
/**

ஈவேராவின் திராவிடர் கழகத்திலிருந்து கொள்கைக்காக வெளிவந்த பின்னால் தாய்க் கழகத்தின்கொள்கைகள் ஒவ்வொன்றையும் கழற்றி விட்டுக் கொண்டே இருந்தார். “ஒன்றே குலம். ஒருவனே தேவன்”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” போன்ற அண்ணாவின்இறைக் கொள்கை விளக்கத்தில்தி.கவின் கடவுள் மறுப்பு கழன்றது. **/

தம்பி , உன் வீட்டுக்குள் விஷப்பாம்பு புகுந்து விட்டால் நீ என்ன செய்வாய், கைக்கு எந்த ஆயுதம் கிடைக்கிறதோ அதை வைத்துத் தானே நீ போராடுவாய்?அந்த விஷப்பாம்பு நீ வழிபடும் சிலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டால் நீ என்ன செய்வாய்?சிலையை உடைத்துப் பாம்பை நசுக்குவாய் இல்லையா? பாம்பை நசுக்குவதுதான் இலக்கு, இங்கே சிலை உடைப்பு என்பது கருவி / ஆயுதம்.அப்போதைக்கு அந்த ஆயுதம் தான் கைக்குத் தோதாக இருந்தது.இலக்கை நோக்கி முன்னேறு,கருவியிலேயே கவனம் வைத்தால் இலக்கை அடைய முடியாது என்று பெரியவர் ஒருவர் சொல்லி இருக்கிறாரே. பாம்பை அடித்த பின்னால் கருவியை மாற்ற வேண்டும் அல்லவா?கடவுள் மறுப்பு என்பது என்ன? மனிதனை மலத்துக்குள் அமுக்கிக் கொண்டு ஆண்டவனைத் தொழுவதில் என்ன பயன் ? கடவுள் மறுப்பு என்பது புதியது இல்லையே? புத்தர் காலத்தில் இருந்ததுதானே ? ‘ஆண்டவன் மறுப்பும் ஆன்மீகமே’ என்றொரு புத்தகமே உண்டுதானே ?

/**

1962தேர்தலில் ராஜாஜியுடன் கூட்டு வைத்தபோது பார்ப்பனர் எதிர்ப்பும் கழன்றது. அதே தேர்தலில் ஓட்டுக்காக தன் பெயரை வாக்காளர் பட்டியலில் “அண்ணாதுரை முதலியார்” என்று பதிவு செய்ய முயன்றதில் சாதி ஒழிப்பும் சந்தர்ப்பத்துக்கு கழற்றி விடப் பட்டது.

**/

தம்பி, சாதிப்பெயரைப் பயன்படுத்துவது திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தபின்தான் படிப்படியாகக் கைவிடப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை. நான் வாக்காளர் பட்டியலில் முதலியார் என்று இட்டால்தான் நான் முதலியார் என்று மக்களுக்குத் தெரியுமா ? என்னுடைய சாதியை,என்னைக்காட்டிலும் அதிகமாகப் பயன்படுத்தியவர்கள் இவர்கள்தானேடா. தந்தை பெரியார் தன்னை நாயக்கர் என்று சொல்லிக் கொள்ளவில்லை, இவர்கள்தானேடா மூச்சுக்கு முன்னூறு தடவை ராமசாமி நாயக்கர் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்!! இன்னும் இந்தக் கூட்டம் மட்டும் அந்தப் பழக்கத்தைக் கைவிடவில்லை. விகடனில் கவிஞர் வாலி ‘நினைவு நாடாக்கள்’ என்ற ஒரு கட்டுரைத் தொடர் எழுதினாரே, அதில் தன் வாழ்க்கையில் சந்தித்த பலரைப் பற்றிச் சொல்லும்போது அவர்களுடைய சாதிகளைக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. சக்தி விகடனில் சித்தர்களைப் பற்றி ஒரு தொடர் வந்தது. ஒவ்வொரு சித்தரைப் பற்றிச் சொல்லும்போதும் மறக்காமல் அவர் என்ன ஜாதியில் பிறந்தார் என்பதையும் குறிப்பிட்டார்கள். இதைப்பற்றி மேலே விவரிப்பது இங்கு வேண்டாம் என்பதால் விட்டுவிடுகிறேன். கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?
/****
அண்ணாவின் நாவல்கள் நாடகங்களைப் பற்றி கேட்டாய்.அண்ணாவை விட பல மடங்கு அதிகமாக நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதியவர்கள் இருக்கிறார்கள். சினிமாவிற்கு வசனம் எழுதுவதும், நாவல் எழுதுவதும் பெரிய சாதனை அல்ல. அதற்கு எல்லாம் பேரறிஞர் என்ற பட்டம் கொடுப்பது தகாது. இத்தனைக்கும் அண்ணா எழுதியதில் பலதும் சொந்த சரக்கல்ல – பலவும் தழுவல்கள் தான். ****/
தம்பி, இராமாயணத்தை வர்க்கு வரி காப்பி அடித்து இராஜாஜி,சக்கரவர்த்தித் திருமகன் என்று நூலை எழுதினார். அவர் பதவியில் இருக்கும்போது , அந்த நூலுக்குத் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி 1958-ல் சாகித்ய அகாடமி பரிசும் பெற்றார்.அதென்ன அவருடைய சொந்தச் சரக்கா ? காப்பி அடித்து எழுதிய அவருக்கே‘மூதறிஞர்’ என்று பட்டம் கொடுத்து முகம் இளித்துக் கொண்டு கிடந்தார்களே, மறந்து விட்டாயா ? மற்றொருவர் (சு. சமுத்திரம்) மாங்குமாங்கென்று தன் உயிரை மையாக்கி எழுதி 1990 சாகித்ய அகாடமி விருது பெற்றார். உடனே இந்தக் கும்பல் “சாகித்ய அகாடமியிலும் இட ஒதுக்கீடு” என்று கொக்கரித்ததே, மறந்து விட்டாயா?

/**யேல் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுக்கவில்லை – அது வெறும் புரளி.டூரிஸ்டுகள் போவது போல அண்ணாவும் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து விட்டு வந்திருக்கிறார் – அவ்வளவு தான். **/

தம்பி,நான் யேல் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றேன் என்று கூறவில்லை. கட்டுரையாளர் தானாக இட்டுக்கட்டி தன்னைத் தானே சிறுமைப்படுத்திக் கொள்கிறார். அங்கே படிக்கப் போக வேண்டும் என்று G-MAT, GRE என்று எழுதிக் குவிக்கும் கூட்டமும் இருக்கிறது தானேடா, அப்படி இருக்கும்போது அங்கே மாணவர்களிடத்துப் பேசக் கூப்பிடுவது என்பது எளிதான காரியமா ?
[From Wikipedia: He proceeded on a world tour as an invitee of the Yale University’s Chubb Fellowship Programme and was also a guest of the State Department in the U.S.A. in April–May 1968. He was awarded the Chubb Fellowship at Yale University, being the first non-American to receive this honour.[16] The same year he was awarded an honorary doctorate from Annamalai University ]
‘டூரிஸ்ட்’மாதிரி போய்விட்டு வந்தார் என்பது கட்டுரையாளரின் கயமத்தனத்தின் உச்சம். ஏன், இதை எழுதியவர் போய் விட்டு வருவதுதானே, எல்லோருக்கும் பொதுவான கோவிலில் உள்ளே விடாமல் தள்ளிய கூட்டம்தானேடா இது. அப்படி இருக்கும்போது தகுதி உள்ளவர்கள் போகும் பல்கலைக் கழகத்துக்கு நான் போய்விட்டு வந்ததில் இவருக்கென்ன வயிற்றெரிச்சல்?

/***

அண்ணாதுரையின் மனப் பிறழ்வுக்கு ஒரு உதாரணம் கம்பரசம் என்கிற அவரது புத்தகம். அந்த புத்தகத்தில் அவர் பனிரெண்டாயிரம் பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்தில் இருந்து ஒரு முப்பது நாற்பது பாடல்கள் மட்டும் எடுத்து எழுதி கம்பராமாயணம் மொத்தமும் ஆபாசம் என்று நிறுவ முயற்சித்திருக்கிறார்.
**/
தம்பி,இதற்கு விளக்கமாக கம்பரசம் என்ற நூலில் இருந்து ஒரு பகுதி (http://www.viduthalai.in/)தருகிறேன். (கொங்கை, அல்குல் இரண்டுக்கும் உனக்கு அர்த்தம் தெரியும் என நம்புகிறேன்)
ஒரு காட்சி:
இயல்வுறு செயல்வினாவா யிருகையு மெயினர் தூண்டத்
துயல்வன துடுப்பு வீசித் துவலை கண் மகளிர் மென்றூ
கயல்வுறு பரவை யல்கு லொளி புறத்தளிப்ப வுள்ளத்
தயர்வுறு மதுகை மைந்தர்க் கயா உயிர்ப் பளித்த தம்மா!
இராமன் காட்டுக்குச் சென்றதாலும் தசரதன் மரணம் எய்தியதாலும், அயோத்தியில் இருந்த வீரர்கள் அனைவரும் சோகத்துடன் வெம்பிக் கிடந்தார்கள். அவர்களின் சோகத்தைக் குறைப்பதற்காக கங்கையின் அக்கரைக்குப் படகில் சென்று இராமனைக்கண்டு திரும்புகிறார்கள். அந்த சமயத்தில் படகில் அவர்களுடன் சில பெண்களும் இருக்கிறார்கள். அப்போது வீரர்களின் மன அயற்சி இராமனைக் கண்டதால் தீர்ந்ததா இல்லை வேறு ஏதாவது காரணமா என்பதை இந்தப் பாடல் சொல்கிறது.
வீரர்கள் துடுப்பினை வேகமாகப் போடும்போது தெறித்து விழும் நீர்த் துளிகள் பெண்களின் மீது விழுகின்றன, அவர்கள் உடை நனைந்து அல்குல் (மறைவிடத்தின்)ஒளி தெரிகிறது. அதனைக் கண்டு வீரர்கள் தங்கள் மனச்சோர்வு நீங்கப்பட்டார்கள் என்பது இப்பாடலின் பொருள்.
காட்சி2:கம்பன் படம் பிடிக்கும் ஒழுக்கம்
அனுமனை இராவணனிடம் அகப் பட்ட சீதையிடம் தூது அனுப்புகிறான் இராமன். தன் மனைவி சீதை எப்படி எப்படியெல்லாம் இருப்பாள்? அவளை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி என்பதுபற்றி இராமன், தூது செல்லும் குரங்காகிய அனுமனிடம் கம்பன் கூறும் காட்சி இதோ:
வாராழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள் தன்
தாராழிக்கலைசார் அல்குல் தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தங்கும், பாந்தமும் பணி வென்றோங்கும்
ஓராழித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?
இராமபிரான் சொல்கிறார் அனு மானிடம்: தக்கவனே, என் மனைவி சீதை இருக்கிறாளே, அவளுடைய கொங்கைகள் (மார்பகங்கள்) நிறைந்த குடம் போன்றன! அவளுடைய அல்குலோ (பிறப்புறுப்பு),சீரான வட்ட வடிவமான கடலுக்குஉவமை என்று.
உலகிலே உள்ள, எந்தப் பித்தனும் வெறியனுங்கூடத் தன் மனைவியின் கொங்கையையும் மறைவிடத்தையும், வேறொருவனிடம் வர்ணிக்கமாட்டான்.அங்ஙனம் வர்ணிக்கும் கதாநாயகனை எந்த நாட்டு இலக்கியத்திலும் எந்தக் கவியும் சித்திரிக்கவில்லை.ஹோமர் முதற் கொண்டு பெர்னாட்ஷா வரையிலே எடுத்துப் பாருங்கள்! மதனகாமராஜன் கதை முதற்கொண்டு மன்மத விஜயம் என்பன போன்ற காமக்கூத்து ஏடுகளையும்கூடப் பாருங்கள் .
சீதையின் உள் உறுப்புகளைக் கண்டுபிடிக்கும் வேலையை பிரம்மச் சாரியாகிய அனுமனிடம் ஒப்படைக் கிறான் கணவனாகிய இராமன்! என்னதான் கற்பனைவளம், இலக்கிய ரசனை என்றாலும் இப்படியா?
/** இதனால் சிறுமைப் படுவது கம்பன் அல்ல, அண்ணாதுரைதான். **/
இப்போது சொல், யார் சிறுமைப்படுவது? கம்பனுக்கு இது சிறுமை அல்லவா? கடவுளின் அவதாரம் என்று உரைத்துத் திரிகிறார்களே,அந்த இராமனுக்கு இது சிறுமை அல்லவா?
/** அண்ணாதுரைக்கும் ஒரு நடிகைக்கும் கள்ளத் தொடர்பு என்று ஊருக்கெல்லாம்தெரிந்து சட்ட சபையிலேயே கேள்வி எழுப்பப் பட்டது. கடமை கண்ணியம் என்றெல்லாம்ஊருக்கு உபதேசம் செய்த இந்த மகான் அதற்கு பதில் அளிக்கும் போது சொன்னது:“[……] ஒன்றும் படிதாண்டாபத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல. [………] என்பவள் ஒரு பேனா மைக்கூடு– அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்நானும் பயன்படுத்தினேன்”. கண்ணியம் என்பது அறவே அண்ணாவிடம் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. **/
தம்பி,காந்தியை மகாத்மா என்று ஏன் சொல்கிறார்கள், ஏன் எனில்அவர் தான் செய்த காரியங்களை மறைக்காமல் ஒத்துக்கொண்ட துணிவு கொண்டிருந்ததுதான். தந்தையின் பிணம் வெளியே கட்டிலில் கிடக்கும்போது, பக்கத்து அறையில் கட்டிலில் மனைவியைப் புணர்ந்தேன் என்று ஒத்துக் கொண்டவர் அவர். தனது பிரம்மச்சரியத்தைச் சோதிக்கும் பொருட்டு இளம் பெண்களுடன் நிர்வாணமாகத் தூங்கினேன் என்று வெளிப்படையாக அறிவித்தவர் அவர். ஒரு மனிதன் தன் செயல்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் பக்குவம் உள்ளபோதுதான் அவன் பெரிய மனிதன். நான் பிரம்மச்சாரி என்று என்றுமே சொல்லவில்லையே, என் ‘கள்ளத்’தொடர்பு பற்றிக் கேள்வி எழுப்பும் இவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.
தன்னை பிரம்மச்சாரி என்று அறிவித்துக் கொண்ட ‘பெரிய’ மனிதர்‘அடக்க’ முடியாமல்‘காம’த்தைத் தேடி தெருக்’கோடி’ வரை ஓடிப் போனாரே. நாறிக் கிடந்தவரை நாசூக்காய், காதும் காதும் வைத்த மாதிரி திரும்பிக் கூட்டி வந்தார்களே!, கடவுளைக் காண்பிக்கிறேன் பேர்வழி என்று கூப்பிட்டுக் கலவியில் ஈடுபட்ட கதைகள் தான் நாடே அறியுமே, (http://suunapaana.blogspot.in/2009/08/blog-post.html) , திறந்த புத்தகமாய் வாழ வேண்டியவர் பல புத்தகங்களைப் படுக்கையில் போட்டுப் புரட்டினாரே, அங்கே போய் இவர்கள் கண்ணியத்தைப் பற்றிக் கேள்வி கேட்கட்டுமே ! இவர்கள் கண்ணியத்தைப் பற்றிப் பேசுவது கசாப்புக் கடையில் கறிவெட்டிக் கொண்டே ஜீவ காருண்யம் பேசுவது போல!
/** பல தந்திரங்கள்செய்து ஆட்சியைப் பிடித்தபின்என்ன ஆனது என்றால், அண்ணாவின் ஆட்சியில்தான் கீழ்வெண்மணி என்கிற ஊரில் சாதி வெறியால் நாற்பது விவசாயக் குடும்பங்களைஉயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்டார்கள். இவர்களின் சாதி ஒழிப்பு கொள்கைகளும்,ஆட்சியில் சட்டம் ஒழுங்கும்சிறந்து விளங்கிய லட்சணம் அது. **/
தம்பி , தேர்தலில் வென்றுதானே ஆட்சியைப் பிடித்தோம், இதில் தந்திரம் செய்ய என்ன இருக்கிறது? ஏன் இவர்கள் மந்திரம் சொல்லித் தடுத்து நிறுத்த வேண்டியதுதானே? கீழ் வெண்மணியில் நடந்தது(http://devendrarkural.blogspot.in/2011/12/blog-post_29.html ) ஒரு வர்க்கப்போராட்டத்தின் விளைவு, அது ஆழ்ந்த வருத்தம் தரும் விஷயம்தான். நான் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்குள் நிகழ்ந்தது அது. அதில் என்னைத் திணிப்பதும்,என்னை அதற்குப் பொறுப்பாக்குவதும் எப்படி நியாயம் ஆகும்? சாதியை நானா உருவாக்கினேன்?தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், இடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்று வருணத்தை உருவாக்கியது யார் ? அப்படி சாதியை உருவாக்கி,சாத்திரத்தைத் திரித்த திருட்டுப் பெருச்சாளிகளுக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லையா?
/** இவ்வாறு பிழைப்பு நடத்தினாலும்அக்காலத்தில் தமிழகத்தில் அண்ணாவுக்குமயங்காதவர் குறைவே. **/
ஆஹா! மயக்குவதற்கு நான் என்ன மோகினியா?
/** நாடு முழுவதையும் முட்டாளாக்கிவிட்டு அண்ணா போய் சேர்ந்தார். **/
யார், நான் முட்டாள் ஆக்கினேனா? மூவாயிரம் வருடமாய் நம்மை முட்டாள் ஆக்கி வைத்த ஓநாய்க்கும்பல்,திடீரெனத் தன் பிடி தளர்வதைக் கண்டு போடும் வெறிக்கூச்சல்தானே இது?

/** தன் பிள்ளைகளுக்குபதவி என்றால் துள்ளி எழுந்து தில்லி சென்று மத்திய அரசை மிரட்ட முடிகிறது. ஆனால் இலங்கையில் தமிழன் இனமே அழிந்து கொண்டு இருக்க, அந்த மக்களை பற்றி சற்றும் கவலையின்றி, ஒப்புக்குமத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும்,கொடநாட்டிலும்,கோவாவிலும் ஓய்வேடுப்பதுமாக அரசியல் வளர்ந்திருக்கிறது. **/

தன் பிள்ளைகள் நோகாமல் நுங்கு தின்ன வேண்டும் என்பதற்காக் சாத்திரங்களைத் திரித்து, பொய்யையும் புரட்டையும் உட்செலுத்தி, நாங்கள் மட்டுமே உட்கார்ந்து தின்போம், நீங்கள் எல்லோரும் போய் உழைத்து வந்து கொட்டுங்கள் என்று சட்டங்களை உருவாக்கியவன் யார், இந்த சொம்பேறிக் கூட்டம்தானேடா?

/**அண்ணாதுரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளைஅரசு செலவில் “விழுந்தால்வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு”என்று பிரச்சாரம் செய்து விற்றது. **/

ஆராதனைத் தட்டிலே சில்லறை போடு,கடவுள் உனக்குக் கண் திறப்பார்,எடைக்கு எடை எனக்குப் பொருள் கொடு , கடவுள் உனக்குக் கருணை காட்டுவார், எனக்குச் சோறு போடு, புண்ணியம் சேரும் என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுத் திரிவது மட்டும் லாட்டரி இல்லையா ?
/**கோஷ்டி மோதலும், தமக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை விட்டு அடிப்பதும்,எதிர்ப்பவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவதுமான இன்றைய வளர்ச்சிக்கும் அண்ணாவின்அரசியலே ஆரம்பமாக இருக்கிறது. **/
யார் தலைமையில் ஆட்சி நடந்தாலும்,உண்மையாக ஆட்சியை நடத்துவது இந்தக் கும்பல்தான். இந்தியாவில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற எல்லாத் தீமைகளும் இவர்களிடம் இருந்தே தொடங்குகின்றன. தகழியின் ‘செம்மீன்’படித்திருக்கிறாயா?. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அதுவரை ஆங்கிலேயனின் அடிவருடிகளாக இருந்த இவர்கள் திடீரென் தேசபக்தர்களாக மாறி, உண்மையானா தேச பக்தர்களை கோஷ்டி அரசியல் செய்து குழியில் தள்ளிய இரகசியம் புரியும்.
இன்றைய திமுகவின் செயற்பாடுகளை வைத்து அன்றைய காலகட்டத்தை மதிப்பிடுவதோ என்னுடைய செயல்களுக்கு தவறான விளக்கம் அளிப்பதோ எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. ஊழலையும், கொள்ளையையும் ஏற்படுத்தியது நான்தான்,திமுகதான் என்று கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல.உண்மை என்ன என்று எல்லோரும் அறிவார்கள். யார் இந்தியாவை அடகு வைத்தார்கள் என்பதை நாடறியும். சுதந்திரத்திற்குப் பின் ஒரு குடும்பம் நாட்டையே தன் சொத்தாக மாற்றிக் கொண்டது என்பதையும் நீ அறிவாய்.எப்போது கோவில் கருவறை இருட்டாக்கப்பட்டதோ , உன் கடவுளை அவர்கள் திருடிக்கொண்டார்களோ அப்போதே ஊழல் தொடங்கி விட்டது என்பதை உணர்ந்து கொள்.

/**சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்துகொள்கை முழக்கம் செய்தார்களோ,அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய அரசாங்க பதவியிலிருந்து,மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது.இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.**/

அடடா? இவர்களுக்கு உடம்பில் எங்கே எரிகிறது என்பதற்கு இதுதானே சாட்சி!
/**இவ்வாறு விக்ரமன் பதிலுரைக்க, மூடர்கள் கையில் சிக்கி சீரழிந்து போய்க்கொண்டிருக்கிற தமிழ்நாட்டுக்கு சுடுகாடு மேல் என்று வேதாளம் பறந்தது. **/
தம்பி,இவர்கள், நம்மிடமே பிடுங்கித் தின்று விட்டு நடுரோட்டில் குசு விட்டுக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.நம்மைக் கண்டாலே தீட்டு என்று நாகரீகம் பேணி, நம்மை துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு சந்துக்களில் போக மட்டுமே அனுமதித்தார்கள். அப்படி இருக்கும் தமிழ்நாடுதான் பூங்கா என்று இவர்கள் நினைத்தால் எல்லோரும் எரிந்து சாம்பலாய் சமமாகிக்ப் போகும் சுடுகாடு எவ்வளவோ மேல். எனவே அப்படிப்பட்ட சுடுகாடாகத் தமிழ் தமிழ்நாட்டை ஆக்குவதுதான் நமது நோக்கமே.
சுடுகாட்டு எலும்புகளைச் சோதித்துப் பார்த்ததிலே
வடநாட்டு எலும்புஎன்று வந்தஎலும்பு இல்லையடி
தென்னாட்டு எலும்புஎன்று தெரிந்தஎலும்பு இல்லையடி
எந்நாட்டு எலும்பென்றும் எழுதிவைக்க வில்லையடி
ஒருநாட்டு மக்களுக்குள் ஓராயிரம் பிரிவை
எரியூட்ட வில்லைஎனில் எந்நாளும் துன்பமடி   
(இனமேது-4ஆம்தொகுதி)– கண்ணதாசன்
இன்னும் எவ்வளவோ எழுதலாம், ஆனால் இந்தக் கூட்டம் திருந்தப் போவதில்லை. ‘அப்னே பேர்மே குலாடி மார்னா’ என்றொரு பழமொழி இந்தியில் உண்டு. தன் காலில் தானே காயம் செய்து கொள்வது என்பது இதன் பொருள். அதன்படி இந்த ஏய்ப்பர்களின் கூட்டம்,தாங்கள் செய்து வந்துகொண்டிருந்த சீரழிவுகளை மறைத்துவிட்டு, ஏதோ இவர்கள்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வந்திருக்கும் புண்ணிய ஆத்மாக்கள் போல வேஷம் போடுகிறார்கள்.
தம்பி,இவர்கள் பெரிய ஒழுக்கவாதிகள் போல எல்லோரும் சமம் என்று எழுதுவார்கள். கொஞ்சம் நெருங்கிப் போனால், சட்டையைத் திறந்து காட்டுவார்கள். (ரோட்டில் வரும் பைத்தியம் திடீரென ஆடை அவிழ்ப்பது போல), எனவே நீ எப்போதும் விழித்திரு.
தம்பி ஒன்றை நினைவில் கொள். அரிசி குடவுனில் புகுந்த பெருச்சாளிகள் போல இந்தக் கூட்டம் இங்கே பல்லாயிரம் வருடங்களாகத் தின்று கொழுத்து வருகிறது. எங்கே சந்து கிடைத்தாலும் நுழைந்து அங்கு மற்றவர்களை நசுக்கிக் கோலோச்சுவது இவர்கள் இயல்பு. இணையத்திலும் புகுந்து தவறான தகவல்களைக் கொடுத்து மக்களைத் திசை திருப்புவதும், தங்கள் மீது விமர்சனம் வரும்போது தனி மனிதத் தாக்குதலில் இறங்குவதும் இவர்களுக்குக் கைவந்த கலை. தனிப்பட்ட முறையில் இவர்கள் எப்படிப் பழகினாலும், தமிழ், தமிழ் நாடு என்று வரும்போது மட்டும் இவர்கள் மனதில் இருக்கும் சாக்கடையை வெளிப்படுத்தத் தயங்க மாட்டார்கள், ‘இவரா இப்படிப் பேசுகிறார்’ என்று சிலசமயம் நம்மை நினைக்க வைப்பார்கள்.
தம்பி, இவர்கள் தமிழ் என்பதும் இந்து என்பதும், அக்கறை காட்டுவதெல்லாம் ஒரு பூசி மெழுகல்தான்.
தமிழுக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து கொடுக்கப்பட்டபோது இந்த கும்பல் குய்யோ முறையோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பியது. நீ http://www.badriseshadri.in/2004/09/blog-post_29.html என்ற சுட்டியைப் படி, இவர்களுடைய அடிப்படைக்கட்டுமானம் புரியும். இதற்கு நீ அளித்த மறுவினை ஓடையில் (http://odai.blogspot.in/2004/05/blog-post_29.html) பத்திரமாக இருக்கிறதுதானே. இது தொடர்பான இந்தப் பதிவையும் படி http://paarvai.blogspot.in/2004/05/blog-post_29.html
தம்பி, இன்று இந்து மதத்தின் மறுமலர்ச்சி என்ற பெயரில் இவர்கள் திரும்பக் கிளம்பி இருக்கிறார்கள். இவர்களுக்காக, எவன் பெண்டாட்டியாவது பேராசைப்பட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டால், உன் சகோதரனின் பெண்டாட்டியின் தாலியை அறுத்து உதவி செய்ய நீ ஒன்றும் சுக்ரீவனைப் போன்ற வானரம் இல்லை.
இந்தக் கும்பலுக்குத் தேவைப்படுவதெல்லாம் ஒரு மூளையற்ற வானரப்படைதான்.இவர்கள் தமிழ் என்றும் ஹிந்து என்றும் தூண்டில் போடுவதெல்லாம் வானரப்படைக்கு ஆள் சேர்க்கத்தான்.அதை நினைவில் வை.
மேலோட்டமாகப் பார்த்தால், இவர்கள் இந்து மதத்தைக் காப்பாற்றும் கடமை வீரர்களாகத் தெரிவார்கள். (இந்து எனபதே ஆங்கிலேயன் என்ற வண்டு உருட்டிய மல உருண்டைதான்). இவர்கள் நடத்தும் பத்திரிக்கை,தொலைக்காட்சி எல்லாம் கூர்ந்து கவனித்தால் இவர்கள் இந்து மதத்துக்குள் ஒரு குறிப்பிட்ட கடவுளையும் அது சார்ந்த புனைவுகளையும் மட்டுமே தூக்கிப் பிடிப்பது தெரியும். ஆனால் இங்கே இருக்கும் சில அப்பாவி மூஞ்சூறுகளுக்கு இந்த உண்மை தெரியாது. இந்தப் பெருச்சாளிக் கூட்டம் தன் இனத்தைச் சேர்ந்த மூஞ்சூறுகளின் மீது ஏறி மூதிரம் பெய்யவும் தவறுவது இல்லை. இவர்களுக்குக் கடவுள், மதம் எல்லாம் பிழைப்பிற்கான வழி. இரமணரை ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள், வள்ளலார், வாரியார் என்றால் முகம் சுழிப்பார்கள்., தியாகராஜர் என்பார்கள், திருநாவுக்கரசரை ஏற்க மாட்டார்கள்.கம்ப ராமாயாணம் என்பார்கள், சிலப்பதிகாரத்தைப் பற்றியோ பெரிய புராணத்தைப் பற்றியோ மூச்சு விடமாட்டார்கள். திருப்பாவை திருப்பாவை என்று அளப்பறை செய்வார்கள், திருவெம்பாவை குறித்து வாய்திறக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் வாழும் இந்துக்களில் 95% நாட்டார் (குல) தெய்வங்களை வழிபாடும் செய்பவர்கள். ஆனால் இந்த நாட்டார் தெய்வங்களை இந்தக் கும்பல் ஏற்றுக் கொள்வதில்லை.
தம்பி, இன்றைக்கு நீ உட்கார்ந்து1950-ல் வெளிவந்த திரைப்படம் பார்த்தால் எப்படிப் பல காட்சிகள் பைத்தியக்காரத்தனமாக தோன்றுமோ அது போலவே சில வரலாற்று நிகழ்வுகளும் இருக்கும்.வரலாற்றை உண்மையான நோக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் நம் மனநிலையில் பின்னோக்கிப் பயணம் செய்து அந்தக் காலகட்டத்தில் இருந்த சூழ்நிலையை ஆராய்ந்து வரலாற்று நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா மனிதர்களும் பிறந்தது முதல் ஒரே கொள்கையைப் பிடித்துக் கொண்டு வாழ்வதில்லை. கால மாற்றத்திற்கு ஏற்றவாறு,தங்கள் அனுபவத்தின் மூலம் கற்ற பாடங்களால் மனிதர்கள் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்கிறார்கள். இதில் தலைவர்களும் விதிவிலக்கல்ல.
இங்கே நான் குறிப்பிட விரும்புவது என்னவெனில் பெரியாரோ / நானோ , எங்களுடைய அரசியல் வளர்ச்சியானது சில குறிப்பிட்ட பெருச்சாளிக் கூட்டத்திடம் இருந்து மக்களை விடுவிக்க மட்டுமே ஏற்பட்டது. எங்களுடைய தாக்கம் ஒரு சுனாமி போல. அதில் பெருச்சாளிகளோடு சேர்ந்து சில மூஞ்சூறுகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் மறுப்பதற்கில்லை.ஆனால் அந்த காலகட்டத்தில் – நேரத்தில் எங்களுடைய வரலாற்றுத் தேவை இருந்தது. அதை நீ மறந்து விடாதே.
ஆன்மீகம் என்பது ஒன்றுபடுதலை(Integration)நோக்கிய பயணம். ஆனால் இவர்கள் செய்வது Differentiation. இவர்கள் எப்படி புத்த மதத்தில் இருந்து நிறைய விஷயங்களை கிரகித்துக்கொண்டு அம்மததினரை தாழ்த்தப்பட்டவர்களாக மாற்றினார்கள் என்பதை அறிவோம். இன்னும் எத்தனையோ இருக்கிறது,நாறும் என்பதால் நாகரீகம் கருதி நிறுத்திக் கொள்கிறேன்.
உனக்குக் கடவுள் தத்துவத்தில் நம்பிக்கை இருந்தால் அந்தக் கடவுளை நீயே தேடிக் கண்டடை. அதுதான் வழி. இந்த ஏஜண்டுகளிடம் சிக்கிக் கொள்ளாதே. உன் முதுகில் ஏறி மூத்திரம் பெய்வதில் இவர்கள் கில்லாடிகள் என்பதை மறந்து விடாதே. இந்த கும்பலுக்கு அப்பாலும் இந்து மதம் இருக்கிறது , இவர்களுக்கு அப்பாலும் சுயநலமற்ற குருமார்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். அவர்களைத் தேடிக் கண்டடை.

கேள்வி-7

Wednesday, April 28, 2004

கேள்வி-7

தொ(ல்)லைக்காட்சியில் இராமாயணம்/மகாபாரதத் தொடர்கள் பார்த்தபோது எழுந்த கேள்வி. இராமனுடைய/கண்ணனுடைய/கிருஷ்ணனுடைய எதிரிகளாக வருபவர்கள் அனைவருமே சிவ பக்தர்களாக,திருநீறணிபவர்களாகவும், ஆதரவாளர்கள் அனைவருமே நாமமிடும் வைணவர்களாகவும் இருப்பது எப்படி? இந்தக் கதைகளெல்லாம் சைவத்தை எதிர்ப்பதற்காக வைணவர்கள் கட்டமைத்த ஒருதலைப்பட்சமான புனைவுகள்தான் எனக்கொள்ளலாமா?

கேள்விகள் 4-6

2004-ல் நான் பி-லாக்கரில் இட்ட பதிவுகளை இங்கு தொகுத்துத் தருகிறேன்.

Monday, April 19, 2004

கேள்வி-4

 
தமிழக அரசு ஊழியர்கள் யாரும் அரசின் அனுமதி இல்லாமல் (அரசுக்கு தனது படைப்புகளை அனுப்பி சரிபார்த்தபின்பே வெளியிட வேண்டும், படத்தை censor-க்கு அனுப்புவது போல) இதழ்களில்/செய்தித்தாள்களில் எழுதக்கூடாது என்ற அரசாணையை ஏன் தமிழ்நாட்டில் (செய்தித்தாள்கள் உள்பட) யாரும் எதிர்க்கவில்லை? எழுத்துரிமை மீதான இந்தக் கத்தியை முன்பு இந்திரா காந்தி கொண்டு வந்த போது எதிர்த்த கலைஞர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் இன்று அமைதி காப்பது ஏன்? எழுத்தாளர்களும் ஏன் எதிர்க்கவில்லை?
 

Saturday, April 24, 2004

கேள்வி-5

 
ஈழம் பற்றி இங்குமங்கும் இணையத்தில் சிதறிக்கிடக்கும் செய்திகள் பல. 1948 லிருந்து ஈழத்தின்/ஈழப் போராட்டத்தின் வரலாற்றை முறையாக,முழுமையாகத் தொகுத்து வைத்திருக்கும் இணையத்தளம் ஏதேனும் இருக்கிறதா? (நூல்கள் இருந்தாலும் கிடைக்கும் முகவரி அளியுங்கள்)

 

Monday, April 26, 2004

கேள்வி-6

 
NDTV-யில் நேற்று ஒரு நல்ல நிகழ்ச்சி வந்தது. நடுத்தர வர்க்கம்/இளைஞர்கள் அரசியல்/தேர்தலில் இருந்து விலகிப் போகிறார்களா என்ற தலைப்பில். தெற்கு மும்பையில் போட்டியிடும் ஒரு 27 வயது நிரம்பிய பாஸ்டன் பல்கலைக்கழகத்திலிருந் து படித்துத் திரும்பிய வேட்பாளர், புனேயில் சுயேச்சையாக நிற்கும் ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஒரு பத்திரிக்கையாளர் என மூவரைச் சரமாரியாகக் கேள்வி கேட்டார் ராஜ்தீப். பார்வையாளர்களாக இருந்தவர்களில் நிறையப் பேர் கல்லூரி மாணவர்/மாணவியர்கள். இந்த மாதிரி உருப்படியான நிகழ்ச்சிகள் படித்தவர்கள் /அறிவாளிகள்/சிந்தனையாளர்கள் அதிகம் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ்நாட்டில் இருக்கும் தொலைக்காட்சிகளில் ஏன் வருவதில்லை?

கேள்விகள் 1-3

2004-ல் நான் பி-லாக்கரில் இட்ட பதிவுகளை இங்கு தொகுத்துத் தருகிறேன்.

Friday, April 16, 2004

கேள்வி-1

 
பெண் எழுத்தாளர்கள் நிறையப் பேர் தங்கள் பெயரில் ஆண்களின் பெயரையும் சுமப்பது ஏன்? (திசைகள் மார்ச் பெண்கள் சிறப்பிதழ் படித்து எழுந்த கேள்வி)
 

கேள்வி-2

 
சேவாக் 300 அடித்ததற்குத் தாண்டித் தாண்டிக் குதித்து வலைப் பதிந்த நண்பர்கள் லாரா 400 அடித்ததைப் பற்றி மூச்சு விடாதது ஏன்? இவர்கள் கிரிக்கெட்டை நேசிக்கிறார்களா அல்லது இந்தியா விளையாடும் கிரிக்கெட்டை மட்டும் நேசிக்கிறார்களா? (பத்ரி தவிர மற்ற அனைவருக்குமான கேள்வி)
 

கேள்வி-3

 
நவீனத்துவம்,பின் நவீனத்துவம் என்றால் என்ன? இந்த பூச்சாண்டிகளால் சாதாரண மக்களுக்கான இலக்கியத்துக்கு என்ன பயன்?