Category Archives: நூல்கள்

நூல்கள் நுகர்வோம் -9

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

நூல்கள்     நுகர்வோம்-1 நூல்கள்     நுகர்வோம்-2 நூல்கள்     நுகர்வோம்-3
நூல்கள்     நுகர்வோம்-4 நூல்கள்     நுகர்வோம்-5 நூல்கள்     நுகர்வோம்-6
நூல்கள்     நுகர்வோம்-7 நூல்கள்     நுகர்வோம்-8
சென்ற பகுதியில் உழைப்பைப் பற்றி, ‘சப்தக் குழல்’  என்ற   சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் இன்னொரு கதை பற்றிச் சொல்லி இருந்தேன்.
‘மண்’  என்ற   தலைப்பில் இருக்கும் ஏழாவது கதைதான் அது.
ஒரு   வயது முதிர்ந்த ஏழைக் குயவர். மண் சட்டி செய்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.  பிளாஸ்டிக் வந்து பிழைப்பைக்   கெடுத்தபின்னாலும் வேறு வழியில்லாமல், தொழிலைத்   தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்.
ஒரு   நாள் , வண்டி நிறைய மண் சட்டிகளைப் போட்டுக்கொண்டு ஊர் ஊராகப் போய் ஒன்றும் விற்காமல்   நொந்து கிடக்கிறார்.   அப்போது ஒரு திரைப்படப் படப்பிடிப்பு   நடந்துகொண்டு இருக்கிறது. சினிமாக்காரன் ஒருவன் , இவரிடம் வந்து , சண்டைக்காட்சியில் உடைப்பதற்காக   எல்லாப் பானைகளையும் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறான்.
பெரியவர்   முடியாது என்று   சொல்லி விடுகிறார். கூட இருக்கும் பேரன் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.
ஏன் என்று கேட்கிறான் சினிமாக்காரன். இப்போது வசனத்தைப் பாருங்கள்.
“நீங்க   பானை சட்டிய உடைக்கறதுக்காகக் கேக்கறீங்க”  என்கிறார்   பெரியவர்.
“என்னைக்குனாலும்   உடையப்போறதுதானே?” என்கிறான்   சினிமாக் காரன்.
“மனுஷங்கூடச்   சாகப் போறவன் தான், அதுக்காகக் கொல்லுவமா? “ – பெரியவர்.
“கொள்ளி   வெக்கறதுக்கு நீங்க விக்கறது இல்லையா?” – சினிமாக்   காரன்.
“யாரும்   ஒரு வண்டிக் குடத்தை கொள்ளி ஒடைக்கறதில்லீங்க” என்று சொல்கிற பெரியவரை விநோத ஜந்து மாதிரிப் பார்த்துவிட்டுப்   போகிறார்கள்   சினிமாக்காரர்கள்.
கடைசியில் பானைகள் விற்காமல் , வண்டியைத் திருப்பிக்கொண்டு வெறும் பையோடு/ வயிறோடு   வீட்டுக்குப் போகிறார்   பெரியவர்.
பெரியவரைப்   பொறுத்தவரைக்கும் பானை / குடம் என்பது   ஒரு பொருள் அல்ல. அது அவருடைய வியர்வை – உழைப்பு. அதனை உபயோகத்துக்காக இல்லாமல் அழிக்கப்படுவதற்காக வாங்கப்படுகிறது என்று தெரியும்போது அவர் விற்கத் தயாராக இல்லை – வயிறு   காலியாக   இருக்கும்போது கூட.
மற்றோர் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதையைப் பார்ப்போம்.
எல்லா   ஆணுக்கு உள்ளேயும்   ஒரு மிருகம் இருக்கிறது. நாம் இன்னும் ஆடை கட்டிய மிருகமாகத்தான் இருக்கிறோம். அந்த   மிருகத்தின் ஆசைதான் பெண்களை நிர்வாணமாகப் பார்க்க வேண்டும் என்ற வெறி.
இந்த   மாதிரியான மனிதர்களின் மட்டமான மனதைப் பற்றி ஒரு   கதை இருக்கிறது.
“நிர்வாணம்” என்ற பெயரில் ஒரு   சிறுகதைத் தொகுப்பு, உடுவை தில்லை நடராசா என்ற ஈழத்து   எழுத்தாளர் எழுதியது. அதில் ஆறாவது கதை –“நிர்வாணம்”
இரண்டு   இளைஞர்கள் சினிமாப் பார்க்கப் போகலாம் என்று   திட்டம் இடுகிறார்கள்.   தெருவில் வரும்போது   அம்மணமான ஒரு சிறுமி பிச்சை கேட்கிறாள்.
“பெரிய   கன்றாவியாக இருக்கு; அன்சகிக்கெபிள்”  என்று அருவருப்பு   அடைகிறார்கள் இளைஞர்கள்.
பிச்சை   கேட்கும் சிறுமியைத் துரத்தி அடிக்கறார்கள்.   அவள் விடாமல் தொந்தரவு செய்யும்போது, அவளைப் பிடித்துக் கீழே தள்ளி விடுகிறார்கள்.
“உதுகள்   உப்பிடித்தான், சில தாய் தகப்பன் தங்கடை விருப்பப்படி பெத்துத்தள்ளி   விடுகிறது…” இப்படியாகப் பேசிக்கொண்டே வரும்போது ஒரு ஆபாச ஆங்கில சினிமா   போஸ்டர் கண்ணில் படுகிறது.
“எப்பிடி   மச்சான், நல்ல படமா?” – ஒருவன் கேட்கிறான்.
“பைன்   ஷோவா இருக்கும் மச்சான். லாஸ்ற்   வீக் நான் ஒரு இங்கிலீஷ் படம் பார்த்தபோது சோர்ட்ஸ் போட்டுக் காட்டினவங்கள். ஹீரோயின் புல் நேக்கட்லை   ஒரு டான்ஸ். ஃபைன் மச்சான் ஃபைன்.”
“போன   மாதமும் அவளின்ர படமொண்டு பார்த்தனான். அவளின்ர   நேக்கட் டான்ஸ் பார்த்தாலே போதும், அதுக்கே   காசு குடுக்கலாம்”
என்கிறான் அடுத்தவன்.
“சரி மைச்சான்; றையுமாகுது.   கெதியாக நட; இல்லாட்டி டிக்கட்   எடுக்கேலாது”
இரண்டு பேரும் அவசரமாகத் தியேட்டருக்கு ஓடுகிறார்கள், “ஆபாசம், அன்சகிக்கெபிள்” என்று   கொஞ்ச நேரம் முன்னால் சொன்னதை மறந்துவிட்டு.
புத்தக   விவரம்:
தலைப்பு நிர்வாணம்     (சிறுகதைகள்)
எழுதியவர் உடுவை.     தில்லை நடராசா
பதிப்பகம் நியூ     செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
உரிமை ஆசிரியர்
முதல்     பதிப்பு அக்டோபர்-1991     (இலங்கை),2-ஆம்     அச்சு: பிப்-1994
ISBN 81-234-0247-3
விலை 20/-     (இருபது)
அணிந்துரை இல்லை
கிடைக்கும்     இடம் http://www.noolulagam.com/product/?pid=1721
தொடரும்.
துடிமன்னன்  

நூல்கள் நுகர்வோம் -8

முந்தைய   பதிவுகளுக்கான சுட்டிகள்:

 நூல்கள் நுகர்வோம்-1  நூல்கள் நுகர்வோம்-2  நூல்கள் நுகர்வோம்-3
 நூல்கள் நுகர்வோம்-4  நூல்கள் நுகர்வோம்-5  நூல்கள் நுகர்வோம்-6
 நூல்கள் நுகர்வோம்-7
உடல் உழைப்பைக் கேவலமாக நினைக்கும் மன நிலையை முந்தைய பதிவில்   பார்த்தோம். இந்த மன நிலையை ஏற்படுத்துவதில் பெற்றோர்தான் முன் நிற்கிறார்கள்.  அவர்கள் சொல்வது என்ன?  “நான் படற கஷ்டம் நீ படக்கூடாது”
பள்ளியில் ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? “நல்ல   மார்க் வாங்கலைன்னா ஆடு மேய்க்கப் போகணும்”. எந்த   மிருகத்தை மேய்ப்பது என்பது ஊர் ஊருக்கு / ஆசிரியரைப் பொறுத்து மாறும். சில ஊர்களில் கழுதை, சில ஊர்களில் எருமை, சில ஊர்களில் பன்றி.
மொத்தத்தில் எல்லா அறிவுரைகளுக்கும்   பொருள் என்னவென்றால்,
உடல் உழைப்பு கேவலமானது,
படிப்பதன் மூலமாதைத் தவிர்க்கலாம்.  
வேர்வை வெளியே வராமல் இருப்பதுதான்   நாகரீகம்.
இந்த மனநிலை இருப்பதனால்தான், காலையில் பனியன், ஜட்டி   நனைய இரண்டு   கிலோமீட்டர் வாக்கிங் / ஜாக்கிங் போவது இவர்களுக்கு நாகரீகமாகத் தெரிகிறது, அதே   சமயத்தில் வீட்டில்  இருந்து 300 அடி   தூரத்தில் இருக்கும் கடைக்கு ஹோண்டா சிட்டி காரில் ஏசி போட்டுக்கொண்டு சென்று, நடுச் சாலையில் பார்க்கிங் செய்து டிராபிக் ஜாம் ஆக்கி, ஒற்றை சிகரெட் வாங்கிக்கொண்டு வருவார்கள். ஏனெனில்   நடந்து போனால் அது கேவலம்.
வயதுப் பையன், மதியம்   ஒரு மணிக்கு உச்சி வெய்யிலில் வேர்க்க   விறுவிறுக்க மைதானத்தில்   கிரிக்கெட் விளையாடுவான். அதே பையனை, ‘கண்ணா, எண்ணெய்   தீந்துடுச்சு, மொக்குக் கடைல போய் கொஞ்சம் வாங்கிட்டு வாடா”  என்று   அனுப்பிப் பாருங்கள். “போம்மா, ஒரே   வெய்யிலா இருக்கு, நம்மாள ஆகாது”  என்பான்.
நன்றாகப் பாருங்கள், ஒரே சூழ்நிலைதான். வாக்கிங்   / ஜாக்கிங் என்ற பேரில்  செய்தால் அது   நாகரீகம். அதே செயலை, ஒரு வேலையாக / வேலைக்காக செய்வதென்றால் அது அசிங்கம்.
நான்   ஏதோ கல்விக்கு எதிரானவனோ, எல்லாரையும் படிப்பதை விட்டுவிட்டுக் கோவணம் கட்டிக்கொண்டு (இப்பொது எல்லாம் பெர்முடாஸ்தான்)   ‘மண்ணைக் கொத்துங்கடா’ என்று சொல்கிற பழமைவாதியோ இல்லை. படிப்பது என்பது வேறு. அதை அறிவுக்காக செய்கிறோம். உழைப்பு என்பது வேறு.  இரண்டையும்   குழப்பிக்கொண்டு, ‘வொயிட்காலர் வேல கெடச்சாத்தான் போவேன், இல்லைன்னா   உக்காந்து கெடப்பேன்’  என்று   உருப்படாமல் போகிற  இளைஞர்களைப்   பற்றித்தான் கவலைப் படுகிறேன்.
இன்னும்    ஆழமாகத்   தோண்டிப் பார்த்தால் (சமுதாயத்துல   இருக்கும் எந்தப் பிரச்சினையத் தோண்டினாலும்)   நாறிக்கொண்டு   இருக்கும் ‘சாதி’ப் பிணம்தான் வெளியே வருகிறது.
வெளிப்படையாகச் சொன்னால்.   இப்போது எல்லோருக்கும் அவாளாக மாற ஆசை. முன்பு  இது குறைவாக இருந்தது. இப்போது அதிகமாக ஆகிவிட்டது.   அவாள் என்ன எல்லாம் செய்கிறார்களோ   அது எல்லாம் நாகரீகம், அதைக் காப்பி செய்தால்தான் நாமும் “மேலே “ வந்ததாக அர்த்தம் என்று நினைக்கிறார்கள். (அவாளுக்கு, அமெரிக்காக்   காரன் என்ன செயகிறானோ அவை எல்லாம் நாகரீகம்)
வெள்ளையாக இருந்தால் நாகரீகம்;  ஆங்கிலம்   கலந்து பேசுவதுதான் நாகரீகம்; வேர்வை   வராமல் இருந்தால் நாகரீகம்; காரில் போனால்   நாகரீகம்; வெளிநாடு போனால்   நாகரீகம்; கல்யாணத்தில் பந்தியில் 16 வகையான உணவுகளை வைத்துத் தின்ன   முடியாமல் கொண்டுபோய்க்   குப்பையில் கொட்டினால்   நாகரீகம்,…
கறுப்பாக இருந்தால் அசிங்கம்;  அரசுப் பள்ளியில்   படித்தால் அசிங்கம்; கம்பு, சோளம், ராகி   மாதிரியான சிறு   தானியங்கள் தின்றால் அசிங்கம்; வேர்த்தால் அசிங்கம்; மழையில் நனைந்தால்   அசிங்கம்; நடந்து போனால்   அசிங்கம்; மண் காலில்   பட்டால் அசிங்கம்; ‘எங்க   அப்பா விவசாயி’ என்று   சொன்னால் அசிங்கம்; சோற்றை விரயம் செய்யாமல் முழுதாகச் சாப்பிட்டால் அசிங்கம் (தரித்திரம் என்று நினைப்பார்களாம்); ‘சோறு’ என்று சொன்னால் அசிங்கம் (‘சாதம்’ என்று   நாகரீகமாகச் சொல்ல வேண்டும்!);……..
சமூகத்தின் அடித்தட்டில் பிறந்து, படித்து முன்னேறிய 99% பேர்   என்ன செய்கிறார்கள்? தங்களின் சொந்த பந்தங்களில்  இருந்து பிய்த்துக்   கொண்டு, முன்னேறிய வகுப்புகளுடன் போய்   ஒட்டிக்கொள்கிறார்கள்.   திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.   தான் இந்த (தாழ்த்தப்பட்ட) சாதியில் பிறந்தவன்    என்னும் கறையை எப்படியாவது வெட்டி எறிந்து விடவேண்டும் என்று நினைத்து, இன்னும் பழைய   நிலையிலயே இருக்கும் தன்னுடைய மற்ற உறவுகளை   ஒண்டக்கூட விடுவதில்லை.   எவ்வளவு தூரம் தள்ளிப்போக முடியுமோ   அவ்வளவு தூரம் தள்ளிப் போய்விடுகிறார்கள்.   வாய்ப்புக் கிடைத்தால், உயர்சாதிப்   பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சாதி   மாறிவிடுகிறார்கள்!
“விதிக்கு   விதி”  என்ற சிறுகதைத்   தொகுப்பைப் பற்றி போன பதிவில் பார்த்தோம்.   மேலே சொன்ன   சிச்சுவேஷன் தொடர்பாக அதில் ஒரு கதை, “ஒதுக்கீடு” என்ற தலைப்பில் இருக்கிறது.
கதைச்   சுருக்கம்:
ஒரு   தாழ்த்தப்பட்ட சாதி -ஏழைப் பையன், கஷ்டப்பட்டு   உழைத்துப்   படித்து, முன்னுக்கு   வந்தவன். பொறியியல் தேறி, நல்ல சம்பளத்தோடு   வேலையும் கிடைக்கிறது.   அவனைப் பற்றி  நன்றாகத் தெரிந்த   உயர்சாதிக்காரர் ஒருவர் இருக்கிறார். பரந்த மனசுக்காரர்.   சாதி-சமய பேதம் பாராட்டாத ஆள். அந்தப்   பையனுடைய சின்ன வயதில்   இருந்தே அவனுக்கு ஏறக்குறைய ஒரு வழிகாட்டியாக அவர்   செயல்படுகிறார்.   அவருக்குத் திருமண வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அந்தப்   பையனின்   நேர்மை , உழைப்பைப் பார்த்துவிட்டு, தன் பெண்ணை ஏன் அவனுக்கே மணம் செய்து வைக்கக் கூடாது என்று யோசிக்கிறார்.   அந்த விருப்பத்தை அவனிடம் சொல்கிறார்.   அப்போது அந்தப் பையன்   சொல்கிற வசனத்தைக் கீழே தருகிறேன்.
ரொம்ப நன்றி சார். நீங்க   என் மேல் வைத்திருக்கும் அன்பு, மதிப்பு   எல்லாவற்றிற்கும் நன்றி சார்.   ஆனா….
உங்க அன்பு பல விஷயங்களை உங்க கண்ல   இருந்து மறைச்சிடுச்சு சார்.
நீங்க மொத்தமா முன்னேறிட்ட சமூகம். நீங்க   சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசலாம். நாங்க ரொம்ப பின்னடைஞ்ச சமூகம் சார். சாதிங்கற   விஷயம்தான் எங்களுக்கு   மேலே வர்றதுக்கான ஒரே ஐடன்டி.
உங்க பொண்ணுக்கு உங்க சமூகத்துல   இருந்தே இஞ்சினியர் மாப்பிள்ளை கிடைப்பான். ஆனா   என்னை மாதிரி சமூகத்துல பிறந்து, சாதி   ஒதுக்கீட்டுல இடம் வாங்கி படிப்பு முடிச்சதும், சாதி   ஒழிக்கறேன் பேர்வழின்னு முன்னேறுன சமூகத்துல பொண்ணு எடுத்துக்கிட்டு   ஒதுங்கிட்டா, எங்க   சமூகத்துப் பொண்ணுங்களுக்கு எப்போ சார்   இஞ்சினியர், டாக்டர்   மாப்பிள்ளைங்க கெடைப்பாங்க?”
இதே கருத்தைத் தொடுகின்ற   இன்னொரு சிறுகதை இருக்கிறது. இந்தக் கதையை எழுதியவர்   சந்திரகாந்தன் என்ற எழுத்தாளர்.
இந்தக்   கதை , ‘சப்தக் குழல்’  என்ற   சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது. கதையோட பெயரும், தொகுப்போட   பெயரும் ஒன்றுதான். இந்தத் தொகுப்பில் மொத்தம் ஒன்பது கதைகள் இருக்கின்றன. அதில்   ஆறாவது கதையைப் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
வட்டன்   என்ற பெயரில் ஒரு தலித். சப்தக்குழல் என்ற ஒரு  இசைக்கருவியை   வாசிப்பதில்  கெட்டிக்காரர்.   இவரோட வாசிப்பில், புதிதாக ஊருக்குள்   வந்த மருதநாயகம் என்ற ஒரு   உயர்சாதிக்காரர்க்குக் காதல் வருகிறது. இரண்டு பேரும்   நண்பர்களாகிறார்கள்.
மருதநாயகம்   கொடுத்த அறிவுரையால் , வட்டன்   தன் மகனைப் படிக்க வைக்கிறார்,  மகன் உதவிப்   பேராசிரியர் ஆகி விடுகிறான்.
உதவிப் பேராசிரியர் ஆன   கையோடு தன் ‘கருப்பன்’ –என்ற பெயரை , கே.அப்பன்    என்று மாற்றிக் கொள்கிறான். படித்த ஒரு அய்யராத்துப் பெண்ணைத் திருமணம்  செய்துகொண்டு, ஊரில் இருந்தும், தன்னுடைய உறவுகளில் இருந்தும் ஒதுங்கிக் கொள்கிறான்.
தான்   ஒதுங்கியது மட்டும்   இல்லாமல், தன்னுடைய தந்தையும் ஒதுங்கிக் கொள்ல வேண்டும்   என்று கட்டாயப்படுத்துகிறான்.   முக்கியமாக, வட்டன், தனக்கு   விருப்பமான அந்த சப்தக்குழலை  எடுத்து வாசிக்கக் கூடாது என்று தடை போட்டு வைக்கிறான்.   அவனைப் பொறுத்தவரை   அதை வாசிப்பது என்பது அவமானம்,   இழிவுக்கு அடையாளம்.
இந்த   சூழ்நிலையில், மருத   நாயகம், தனது இறுதி   ஊர்வலத்தில், வட்டனுடைய சப்தக்குழல் கேட்க வேண்டும் என்று வட்டனிடம் ஒரு சத்தியம் வாங்கி  வைக்கிறார்.
மருத   நாயகம் செத்துப் போகிறார், இறுதி   ஊர்வலத்தில் வாசிப்பதா இல்ல மகனுக்கு பயந்து பேசாமல் இருப்பதா என்ற மனக்குழப்பத்தில் வட்டன்   கஷ்டப்படுகிறார்.
கடைசியில் வாசிப்பது   என்று முடிவு செய்து, தன்னுடைய மற்ற உறவினர்களோடு சேர்ந்துகொண்டு   வாசிக்க ஆரம்பிக்கும்போது, மகன்   வந்து தடுக்கிறான்.   அப்போது அவனை சமாதானப் படுத்துகிற இன்னொரு இளைஞன் (மருதநாயகத்தின்   உறவினன்) சொல்கிற வசனத்தைப் பாருங்கள்.
உங்க அப்பா வாசிக்கறத மட்டும்   நிறுத்தணுனு நெனைக்கற   நீங்க, உங்களோட மற்ற உறவினர்களைத்   தடுக்கலியே. அது ஏன்?
நீங்க மட்டும் இல்லை , உங்கள   மாதிரி பலபேர், படிப்பைக் கொண்டோ, பணத்தைக்   கொண்டோ மேல் வந்த பின்பு, தன்னையும்   தன் குடும்பத்தச் சேந்தவங்களயும்   மட்டும் அடிமைத்தனம், இழிவு   இதியாதிகள்ள இருந்து விடுவிச்சுட்டாப் போதும்னு   நெனைக்கறாங்க.
இன்னும் உரிமைகள் மறுக்கப்பட்டு, அதே   சகதியில் உழன்று   கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பற்றி அவங்க கவலைப் படுறதே இல்லை.   அவங்க மட்டும் பிறரோடு சமமா உட்கார்ந்துட்டாப் போதும், மேல்   ஜாதிக்காரங்க மத்தியில அந்தஸ்தோடு   உலவி வந்திட்டாப் போதும்னு நெனைக்கறாங்க.
தங்களைச் சார்ந்தவங்களை விட்டு   விலகிப் போகத்தான் விரும்புறாங்க.   ஏதோ இவங்களோடு தங்களுக்குச் சம்பந்தமே இல்லைனு காட்டிக்க முயற்சி   பண்றாங்க. தன் பழமைய   மறந்துட்ட மாதிரி, அத   நினைவூட்டவே விரும்பாத மாதிரி நடந்துக்கறாங்க.
அப்போது   கே.அப்பன் , “அப்போ இந்தத் தொழில் இழிவு இல்லைன்னு   சொல்ல முடியுமா” என்று கேட்கிறான். அதற்கு பதில் சொல்கிறான் அடுத்தவன்.
தொழில்ல   எது இழிவு? அப்படீன்னா   உழைப்பே இழிவா? உடல்   உழைப்பு இழிவுன்னு கருதிய ஒரு காலகட்டத்தின் கருத்தோட்டம் அது. உழைக்காமல்   உட்கார்ந்து சாப்பிடுவதே   உன்னதம் என்று கருதப்பட்ட காலத்தின் கண்ணோட்டம் அது.
இப்படியே   நீளமாகப் போகிறது, வசனம்.
முழுமையாகப் புரிந்துகொள்ள, கதையைப் படித்தால்தான்   நன்றாக இருக்கும்.   தமிழ்நாட்டில் இருக்கும் நூலகங்களில் இந்தப்   புத்தகம் கிடைக்கும். இதே தொகுப்பில் இருக்கும் மற்ற கதைகளையும் படியுங்கள்.
தலைப்பு சப்தக்குழல்
எழுதியவர் சந்திரகாந்தன்
பதிப்பகம் நியூ     செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
உரிமை ஆசிரியர்
முதல்     பதிப்பு ஆகஸ்ட்-1994
ISBN 81-234-0284-8
விலை 22/-     (இருபத்து இரண்டு)
அணிந்துரை இல்லை
கிடைக்கும்     இடம் http://www.noolulagam.com/product/?pid=1692

-உழைப்பைப் பற்றி, இதே   தொகுப்பில் இன்னொரு கதை இருக்கிறது, அதனை அடுத்த பதிவில் பார்ப்போம்.

[தொடரும்]

-துடிமன்னன்

நூல்கள் நுகர்வோம் -7

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

  1. நூல்கள் நுகர்வோம்-1
  2. நூல்கள் நுகர்வோம்-2
  3. நூல்கள் நுகர்வோம்-3
  4. நூல்கள் நுகர்வோம்-4
  5. நூல்கள் நுகர்வோம்-5
  6. நூல்கள் நுகர்வோம்-6
ஒருநாள்   மழை பெய்து  ஓய்ந்த நேரத்தில்  நானும்   நம் நண்பர் ஒருவரும் வண்டியில் போய்க் கொண்டு இருந்தோம். அந்த வழியில் ஒரு மரக் கிடங்கு இருக்கிறது. பெரிய பெரிய மரங்களை அங்கே  இருப்பு வைத்திருப்பார்கள். ஒரு   பக்கத்தில் மரத்தைப் பிளந்துகொண்டு இருப்பார்கள். இன்னொரு புறத்தில் மரத்தை வண்டியில்   ஏற்றி அல்லது இறக்கிக் கொண்டு இருப்பார்கள்.
நாங்கள்   போன நேரத்தில்  40 வயதுள்ள ஒருவர் மரம் உடைத்துக் கொண்டு இருந்தார். வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்த நம்   நண்பர் , “அய்யோ, பாவம்.   இப்படிக் கஷ்டப்படுறாரே “  என்று   சொன்னார். நானும் , “ஆமா, கஷ்டந்தான்”  என்றேன்.
அந்த   நேரத்தில் நான் அப்படிச் சொன்னாலும், நான்   சொன்னது சரிதானா, உடலால்   வேலை செய்கிற ஒருவனைப் பார்த்துக் கஷ்டப்படுவதாக எண்ணும் எண்ணம்   சரிதானா  என்ற குழப்பம் வந்தது.
நீங்கள்   ஒரு பொதுவுடமைச் சார்பு / சிந்தனை உள்ள ஆளாக   இருந்தால், நிச்சயமாக  ‘அந்த ஆள் கஷ்டப்படுறான், அவன   சமுதாயம் சுரண்டுது ‘ என்று சொல்லி விடுவீர்கள்.   ஆனால் அதில் உண்மை இருக்கிறதா?
மேலோட்டமாகப்   பார்த்தால், நம் எண்ணம் சரி என்று தோன்றினாலும், கொஞ்சம்   ஆழமாக யோசித்தால் நம் எண்ணம் தவறு என்பது தெரிய வரும். இப்படிச் சொல்வதனால் என்னை   முதலாளித்துவ அடிவருடி என்றோ, பூர்ஷ்வா என்றோ சிலர் சொல்லலாம்.
உடல்   உழைப்பு எனக்கு ஒன்றும் புதியது கிடையாது. நான்   விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். ஏர் ஓட்டுவது தவிர மீதி எல்லா விவசாய வேலைகளையும்   செய்திருக்கிறேன். பத்தாவது படிக்கும்போது கிணற்றில்  மண் அள்ளி இருக்கிறேன்.   (அப்போது 20 ரூபாய் சம்பளம் கிடைத்தது). கிணற்று   மண் ஈரமாக இருக்கும். அதை சுமப்பது எவ்வளவு கஷ்டம்  என்பது சுமந்தவர்களுக்குத்தான்  தெரியும்.
இந்த   வரலாறெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், நான்   இப்படியெல்லாம் உழைத்திருக்கிறேன் என்று பீற்றிக் கொள்வதற்காக அல்ல. உடல் உழைப்பைப்   பற்றிக் கருத்து சொல்வதற்கு எனக்குத்  தகுதி இருக்கிறது என்பதை உணர்த்தத்தான்.
நன்றாக   யோசித்துப் பார்த்தால், நம் உடம்பே, உடல்   உழைப்புக்கு ஏற்றவாறுதான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தொழிற்புரட்சி வந்து   எல்லாம் இயந்திரமயமாக ஆகிற வரைக்கும் (இந்தியாவில் 1970-75   வரைக்கும்) , கிராமத்தில்   எல்லோருமே  விவசாய வேலைகள் செய்து உடல் உழைப்பால்தான் வாழ்ந்துகொண்டு   இருந்தார்கள்.
15-20 ஏக்கர்   நிலம் இருக்கிற பண்ணையாராக இருந்தாலும், அவர்களின் மொத்த   குடும்பமும், மற்ற வேலைக்காரர்களோடு சேர்ந்து நிலத்தில் இறங்கி வேலை   செய்வார்கள்.   மத்திய தரக் குடும்பத்தில் சைக்கிள்   இருப்பதே லக்சரியாக இருந்த காலம் அது.  அப்போது யாராவது “அய்யோ, வெய்யில்ல   கஷ்டப்படுறமே”  என்று புலம்பியது   இல்லை.
அவ்வாறு   இருந்த நிலையில்  இந்த மனமாற்றம்  எப்படி – எப்போது ஏற்பட்டது?
எப்போது, பணம்   இருப்பவன் உடம்பை வளைத்து உழைக்கத் தேவையில்லை, படித்தவன்   குனிய நிமிரத் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டதோ, அப்போதே   உழைப்பு  என்பது கேவலமானது, வேறு   வழி இல்லாத ஏழைகளுக்கானது  என்ற எண்ணம் வர   ஆரம்பித்தது. காட்டை விற்றாவது கார் வாங்கி  புகை விட்டுக்கொண்டு (அடுத்தவன்   மனதிலும்தான்) போக வேண்டும் என்ற எண்ணம் வலுவாக ஏற்பட்டு விட்டது.
வெய்யிலில்   போய்க் காட்டில் இறங்கி வேலை செய்வது கேவலம்   என்று  எல்லாரும் நினைக்க ஆரம்பித்தார்கள். சம்பளம்  குறைவாக இருந்தாலும்   பஸ் ஏறி நகரத்துக்குப் போய் சாயப்பட்டறையில் 10 மணி   நேரம் சந்தோஷமாக வேலை செய்துவிட்டு வந்த   நபர்களை நான் அறிவேன். ஏன் என்று கேட்டால் அதுதான் நாகரீகம் என்று பதில்   சொன்னார்கள்.
உடல்   உழைப்பு கேவலமானது, அதிலும், வெய்யில்   மழையில்  நின்று வேலை பார்ப்பது அதை விடக் கேவலமானது, விவசாயம்   பார்ப்பது மகாக் கேவலமானது  என்ற விஷக் கருத்து மிக வேகமாகப் பரவிவிட்டது. (முக்கியமாக 1980-க்குப் பின்னால்.)
நல்ல   வாய்ப்பு, தண்ணீர் வசதி இருந்த விவசாயிகூட, தன்   பிள்ளைகள் மண்ணில்  இறங்கிக் கஷ்டப்படக்கூடாது  என்று  சொல்லிச் சொல்லி  மூளைச் சலவை செய்து  ஃபைனான்ஸ் , ரியல் எஸ்டேட் என்று திருப்பி விட்டார்கள்.
கல்வி   அறிவை அதிகரிக்க வேண்டும்  என்ற அரசாங்கத்தின்  திட்டம்   இருமுனைக் கத்தியாக மாறி விட்டது. படித்தவர்கள் எல்லாம், தாங்கள்  சமுதாயத்தில்   “மேலே” வந்துவிட்டதாகவும்,    இனி  உடல் உழைப்பு செய்வது அசிங்கம் என்றும் எண்ணத் தலைப்பட்டனர்.
படித்த   ஏழையும் நகரத்தை நோக்கித்தான் ஓடுகிறான்.
 “படித்த”  என்று சொன்னால்  ஏதோ டிகிரி படித்தவன் என்ற அர்த்தம்  கிடையாது. 8-ஆவது   ஃபெயில் ஆகி இருந்தாலும், ‘சார்’ வெயிலுக்கு வரமாட்டார்.  நிழலில்தான் வேலை பார்ப்பார்.   அப்படி ஒரு வேலை  கிடைக்கவில்லை என்றான், ‘அப்பன்   ஆயி’ காசில், உட்கார்ந்து தின்று கொண்டு, ஏதாவது ஒரு   நடிகனுக்கு ரசிகர் மன்றம் வைத்துக்கொண்டுக் காலத்தை ஓட்டுவார்.
நம்  குழந்தைகள் படிக்கும் பாடத்திட்டமே விவசாயத்தை அங்கீகரிக்கவில்லை.   விவசாயம் ஒரு பாடமாக இல்லை. உயிரியல் பாடத்தில் வருகின்ற முக்கால்வாசித் தாவரங்கள்   இந்தியாவில்  கிடையாது. நாம்  தினமும் உண்ணும் தக்காளி, அரிசி, கத்தரிக்காய்   இதெல்லாம் எப்படி வளர்கிறது  என்று  பாடப்புத்தகத்தில் கிடையாது.
கேரளாவில்   “பணி கிட்டி”  என்றொரு சொற்றொடர் இருக்கிறது. ஏதாவது சிக்கல் உருவானால் , கொஞ்சம்   சிரமமான  நிலை ஏற்பட்டால்  இந்த வார்த்தையை உபயோகம்   செய்கிறார்கள். (எடுத்துக்காட்டாக, வண்டி ஓட்டிப்   போய்க்கொண்டு இருக்கும்போது  சாலையில் டைவர்சன்   போர்டு  வைத்து இருந்தால் – அதனால் வழி மாற்றிப் போக வேண்டி வந்தால் / பக்கத்து   சீட்காரன் விடுமுறையில் போய், அவனுடைய   வேலையை அவசரமாகச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்).
“ பணி கிட்டி”  என்ற   வார்த்தைக்கு நேரடி அர்த்தம் “வேலை   இருக்கு”/ “வேலை   வந்து விட்டது”. இந்த   வார்த்தைப் பிரயோகத்துக்குப் பின்னால் ஒரு   சமூகத்தின்  மனப்போக்கே  அடங்கி இருக்கிறது.
இதனால்   புரிய வேண்டியது என்னவென்றால்,  எப்போதெல்லாம் செய்வதற்கு   ஏதாவது வேலை இருக்கிறதோ, அப்போது நாம் சிரமத்தில் இருக்கிறோம் (!?). நோ   வெலை, நோ சிரமம். இதனால்தான் கென்யாவில்  கேக் கிடைக்கவில்லை என்று   ஸ்ட்ரைக்  செய்தால், அதற்கு ஆதரவாக  கேரளாவிலும்   ஸ்ட்ரைக் செய்கிறார்கள். முக்கியமாக வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைதான்   ஸ்ட்ரைக் நடக்கும். வியாழக்கிழமை அன்றைக்கு மதியத்தில்   இருந்தே சாராயக்கடையில் கூட்டம் தள்ளி   வழியும்.
‘நூல்கள் நுகர்வோம்’ தொடருக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன தொடர்பு  என்று நீங்கள் முனகுவது   கேட்கிறது.  தொடர்பு இருக்கிறது, அதை விளக்கமாகப் பார்ப்போம்.
பி.என்.மாறன்   என்ற எழுத்தாளர் பெ.நாயகி  என்ற புனை பெயரில்   நிறையக் கதைகள் எழுதி இருக்கிறார். அவருடைய சிறுகதைத்   தொகுதிகளில்  ஒன்று  “விதிக்கு ஒரு விதி”. இது   பாவை பளிகேஷன்ஸ் வெளியிட்ட நூல். இந்த நூலில்  20 சிறுகதைகள்   இருக்கின்றன.
இந்தத் தொகுப்பில்  9-ஆவது கதை, “அவங்க உழைப்பு   பூத்திருக்கு”.  அந்தக் கதையின் சுருக்கம் என்னவென்று பார்ப்போம்:
ஒரு   பண்ணையாரிடம் கூலிக்கு வேலை செய்கிற பெற்றோர். அவர்களுக்கு   மகனாகப் பிறந்து, படித்துப்   பதவிக்கு வந்தவன் மோகன். வேலை கிடைத்ததும், தன்   பெற்றோரைத் தன்னிடம்  வந்துவிடுமாறும்  இனி கூலிக்கு உழைக்க வேண்டாம், அந்தப்   பண்ணையாருக்கு அடிமைத் தொழில்   செய்யவேண்டாம் என்றும் சொல்கிறான். பெற்றோர் கேட்கவில்லை. இதுவரை பட்ட கஷ்டம்   போதும், இனிமேல்   கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை.
அப்போது   மோகனின் மேலாளர், மோகனின் எண்ணத்தில் தவறு இருக்கிறது என்பதையும், அதனால்தான்   அவர்கள் வர மறுக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறார். அந்த உரையாடலின்  ஒரு பகுதியைக் கீழே கொடுத்துள்ளேன்.
அவர்களைப்   பொறுத்தவரையில் ஒரு நோக்கத்தோடு உழைத்தார்கள். உனக்கு   எப்படி இந்த அலுவலகமோ அதே மாதிரி, அவங்களுக்கு   அந்தப் பண்னையார் வீடு. அவர்களுடைய உழைப்பின்   பலனை உன் முன்னேற்றத்தில் பார்த்திருக்கிறார்கள். இதுதான் அவர்களுக்குத்   தேவைப்பட்டதும். இந்தத் தேவை தீர்ந்ததில், அவர்களைப்   பொறுத்தவரையில் அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கை   வாழ்ந்திருக்கிறார்கள்.
அதே   சமயம் இது நிறைவேறக் காரணமாய் இருந்த பண்ணையார் மீது நன்றி   உணர்வும் இருந்திருக்கும். அவர்களிடம் போய், நீங்க   இது வரை வாழ்ந்த மோசமான வாழ்க்கை போதும்; என்   கூட வாங்க, வசந்தம் காட்டறேன்னு சொன்னா   அவங்களுடைய இத்தனை நாள் வாழ்க்கையைக் கேவலப்படுத்தியது   ஆகாதா?
வளர்ச்சிங்கறதுக்கு   அர்த்தம் முந்தைய நிலையைக் கேவலமா நினைக்கறது   அல்ல.
இந்தக் கதையில்   முத்தாய்ப்பாக இருப்பது  அந்த கடைசி வரிதான்.
ஏதோ   நாலு எழுத்துப் படித்து, ஒரு வேலை கிடைத்து , பேப்பர்   பேனாவுடன்  மேசையில் உட்கார்ந்து, கொஞ்சம் இரத்தம் ஊறிய  உடனே, “மரம் உடைக்கறவன் எல்லாம் ‘அய்யோ   பாவம்’, கோவணம்   கட்டிக்கிட்டு விவசாயம் பாக்கறவன் எல்லாம் ஒண்ணுக்கும் ஆகாத கேனப்பயல்”- என்று   நினைக்கும் மனப்போக்கு உள்ளவன் எல்லாம் இந்தக் கதையைக்   கட்டாயம் படிக்க வேண்டும்.
உழைப்பவன் மேல் பரிதாபப் படுவது போல் நாம் நடிக்கிறோம். அவனுடைய  உழைப்பை மதிக்காமல் கிண்டல் அடிக்கிறோம்,  நம்மை அறியாமலேயே அவனோடு   ஒப்பிட்டு  நம்முடைய ஈகோவை  நாமே   நக்கிக் கொடுத்துக் கொள்கிறோம்  என்பதுதான்   உண்மை.
நூல்   விவரம்:
தலைப்பு விதிக்கு  ஒரு விதி
எழுதியவர் பெ.நாயகி     (P.N. மாறன்)மேலும் அறிய: http://ta.wikipedia.org/s/tgq
பதிப்பகம் பாவை     பப்ளிகேஷன்ஸ்,142, ஜானி ஜான் கான் சாலை,இராயப்பேட்டை, சென்னை-600     014தொ.பேசி: 28482441,28482973
உரிமை பதிப்பகத்தார்
முதல்     பதிப்பு டிசம்பர்     – 2004
ISBN 81-7735-165-6
விலை 44/-     (நாற்பத்து நான்கு)
அணிந்துரை இல்லை
கிடைக்கும்     இடம் http://www.noolulagam.com/product/?pid=1114#details

தொடரும்..

துடிமன்னன்

நூல்கள் நுகர்வோம் -6

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

  1. நூல்கள் நுகர்வோம்-1
  2. நூல்கள் நுகர்வோம்-2
  3. நூல்கள் நுகர்வோம்-3
  4. நூல்கள் நுகர்வோம்-4
  5. நூல்கள் நுகர்வோம்-5
சென்ற பதிவில், தமிழில் ஏகப்பட்ட பேர் எழுதினாலும், விருது வாங்குவதில் மற்ற மொழிகளுக்குப்  பின்னால்  இருக்கிறோம் என்பதையும் அதற்கான  காரணங்களையும்  பார்த்தோம்.
எழுத்தைப் பொறுத்தவரை எண்ணிக்கை முக்கியம்  இல்லை,  தரம்தான் முக்கியம் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க முடியாது.  அதே நேரத்தில்  எழுத்து என்பது ஸ்விச்சைத் தட்டினால்  எந்திரத்தில்  இருந்து  வெளியே கொட்டுகிற விஷயம் இல்லை. அதனால் இது நல்லது, இது நல்லது இல்லை என்கின்ற குவாலிட்டி கன்ட்ரோல் எல்லாமே எழுதி முடித்து வெளியான பின்னால்தான் செய்ய முடியும்.
வெளி வந்த ஒன்று இரண்டு படைப்புகளை மட்டும்   வைத்து , இவன் வேலைக்காக   மாட்டான் , இவன் ‘கிழித்து’ விடுவான்   என்று ஆரூடம் எல்லாம் செய்யாமல்   இருப்பதுதான் ஒரு நல்ல விமர்சகனுடைய  கடமை. ஏனெனில் எந்தக் கருவிலும் எந்த உலகத் தலைவனும் பிறக்கலாம்.
சுருக்கமாகச்   சொல்லப் போனால்  ‘மொசப் புடிக்கற   நாய மூஞ்சியப் பாத்தாலே   தெரியும்’ என்னும் பழமொழி இங்கே செயல் ஆகாது. ஆகவும் கூடாது.
சித்திரமும்   கைப்பழக்கம் என்று சொல்றோம். சித்திரம்   மட்டும் இல்லை ,   எல்லாக் கலைகளுக்குமே இது பொருந்தும். பிறவிக்கலைஞர்கள்   மிகக் குறைவு. மற்றவர்கள்   எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி மேலே வந்தவர்கள்தான். அதற்குத் தேவையான காலத்தையும் வாய்ப்பையும் நாம் கட்டாயம்  தர வேண்டும்.
எழுதுபவனின்  தனிமனித குணத்துக்கும் எழுத்துக்கும்   தொடர்பு இருக்க வேண்டும் என்ற கட்டாயம்  எதுவும் இல்லை. இருக்கலாம், இல்லாமலும் போகலாம். (ஒரே எழுத்தாளர் சொந்தப் பெயரில் ஆன்மீக நூலும், புனைபெயரில்   காமரசம் சொட்டும் மர்ம நாவலும் எழுதியது உண்டு.)
ஆனால் எழுத்தாளனுக்கு   (எல்லாக் கலைஞர்களுக்கும்   தான்) ஒரு தார்மீகக் கடமை இருக்கிறது. சமூகம்  என்பது   காட்டாறு. எழுதுபவன் என்பவன் ஒரு மரம்.  மழைக்கும்  அவன் காரணமாக இருக்க வேண்டும், அதே நேரம் மழை அதிகமாகி வெள்ளம் வரும்போது மண் அரிக்காமலும் ,   கரை உடையாமலும் அவன்தான் காப்பாற்ற வேண்டும்.
இதை ஏன் சொல்கிறோம் என்றால், பொதுவுடைமை  என்னும் தத்துவம் நடைமுறைக்கு வந்ததற்கு எழுத்துதான் காரணம். அந்த   எழுத்துத்தான் லெனின் மாதிரியான ஆட்களைத்   தூண்டி புரட்சி செய்ய வைத்தது.
ஆனால் புரட்சி நடந்து ஆட்சி   கைக்கு வந்ததும், எழுத்தாளன், மண் அரிக்காமல் காப்பாற்றும் மரம் போல் இல்லாமல் போனதால்தான் ஸ்டாலின் காலத்தில் சர்வாதிகாரம் தலை தூக்கி,   யார் என்ன எழுத வேண்டும்,   என்ன எழுதக்கூடாது என்று  கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்கிற அளவுக்குப் போய்விட்டது. கட்சிக்கு (ஸ்டாலினுக்கு)ப்    பிடித்தது போல எழுதவில்லை என்றால்  சைபீரிய ஜெயில்தான்.   ஒருவேளை புகழ் அடைந்த எழுத்தாளனாக இருந்தால் விஷம்   வைத்துக் கொல்வார்கள் (கார்க்கி).
எழுத்தாளனின் படைப்பு எப்படி  மக்களால் உதாசீனம் செய்யப்படுகிறது என்பதை விவரிக்கும்  கவிதை ஒன்று தமிழ்-ஓடையில்  உள்ளது. அந்தக் கவிதையைக் கீழே தருகிறேன்.
மழை-7,துளி-2 : கவிதைப் புத்தகம்கைகாட்டி
மளிகைக் கடனுக்காய்
ஒதுக்கி வைத்திருந்த போனசுடன்,
ஒதுங்க இருந்த ஒரே குடிசையும்
கவிதைப் புத்தகமாய் உருமாற,
நான் மட்டுமே வாசகனாகி ,
ஏதோ பத்திரிக்கையில்
நான்கு வரி மதிப்புரை படித்தபோது
புரிந்தது,
அவரும் படிக்கவில்லையென.
பத்து ரூபாய்க்கு பயந்து
பலரும் திருப்பிக் கொடுக்க,
இலவசமாய்க்   கொடுத்தவை
அறுபது ரூபாய் பீருக்கும்,
பிளாக்கில் நூறு ரூபாய் காமசூத்ரா டிக்கெட்டுக்கும்
அலைமோதிய கனவான்களின்
கால்களில் மிதிபட,
‘ இன்னங் கொஞ்சம்
அகலமான பேப்பரில்
போட்டிருக்கக் கூடாதா ?   ‘
அங்கலாய்த்தவாறே,
குழந்தையின் அசிங்கத்தைத் துடைத்தெறிந்தாள்
அன்பு மனைவி.
( கவிஞர் சகாராவுக்காக)
Tag: [தினம் ஒரு கவிதை-716   (14-03-2002)]##(11-ஆகஸ்ட்-1998)
 ———–
எழுத்து, எழுத்தாளன், தமிழ் இலக்கியம் தொடர்பாக  மேலோட்டமான  கருத்துக்களை இதுவரை பார்த்தோம். அடுத்த பகுதியில் இருந்து  தனிப்பட்ட நூல்களை எடுத்துக்கொண்டு  அவை தனிமனித / சமுதாய  நடைமுறைகளை  ஒட்டி /வெட்டி  எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்று பார்ப்போம்.
[தொடரும்]
 -துடிமன்னன்

நூல்கள் நுகர்வோம் -5

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

  1. நூல்கள் நுகர்வோம்-1
  2. நூல்கள் நுகர்வோம்-2
  3. நூல்கள் நுகர்வோம்-3
  4. நூல்கள் நுகர்வோம்-4
/–எழுத்தாளன் என்றைக்குமே சமூகத்தை விட, குறைந்தது ஒரு தலைமுறையாவது தாண்டி முன்னோக்கி யோசிக்க வேண்டும். அப்போதுதான் அவனுடைய நல்ல கருத்துக்கள் உந்து சக்தியாக மாறி சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும். ஆனால் எழுதுபவனோ அல்லது மற்ற படைப்பாளியோ , எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்? –/
இவை  சென்ற பதிவில் நாம் எழுதிய வரிகள். இந்தப் பதிவை இந்தக்   கருத்தில் இருந்து ஆரம்பிப்போம்.
இன்றைய   தேதிக்கு, இந்திய மொழிகளிலேயே அதிகமாக புத்தகங்கள் வெளியாவது   தமிழில்தான் என்று  நினைக்கிறேன். என்னிடம் புள்ளி விவரம் கிடையாது. இருந்தாலும்  என் உள்ளுணர்வு சொல்கிறது.
இதற்கு   என்ன காரணம் என்று பார்த்தால், நம் எழுத்தறிவு தான். வெள்ளைக்காரர்கள்  தங்கள் பண்பாடு, கல்விமுறை மூலமாக அதிகமாக   பாதித்த மாநிலங்கள் வங்காளம், தமிழ்நாடு   இரண்டுதான். கேரளா, தமிழ்நாட்டில் இருந்து பிரிந்ததனால் அதைத் தனியாக   சேர்த்துக் கொண்டால் வங்காளம், தமிழ்நாடு, கேரளா  இந்த மூன்று மாநிலங்களையும் சொல்லலாம்.
இந்தியாவுக்கு   சுதந்திரம் கிடைத்த காலத்தில் நிர்வாகத்தை நடத்திக்கொண்டு இருந்த முக்கால்வாசி  சிவில் சர்வீஸ் அதிகாரிகள் இந்த மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். (இப்போது எல்லாம் மாறிவிட்டது)
இலக்கியம், சினிமா, இதழியல் போன்ற துறைகளில் வேகமாக முன்னேறியதும் இந்த மூன்று மொழிகள்தான். ஆனால், விருது   அடிப்படையில பார்த்தால் வங்காளி, மலையாளம்   அளவுக்கு தமிழின் தரம் பிரதிபலிக்கவில்லை.
ஞானபீட   விருது பட்டியல் : மொழிவாரியாக (2012 வரை)

எண்ணிக்கை மொழி விளக்கம்
9 ஹிந்தி 6-தனி, 3-பகிர்வு
8 கன்னடம் 6-தனி, 2-பகிர்வு
5 மலையாளம் 5 –ம்     தனியாக
5 பெங்காளி 5 –ம்     தனியாக
4 ஒரியா 3-தனி, 1-பகிர்வு
4 உருது 4-ம்     தனியாக
3 மராத்தி 3-ம்     தனியாக
3 தெலுங்கு 3-ம்     தனியாக
3 குஜராத்தி 2-தனி, 1-பகிர்வு
2 அஸ்ஸாமி 2-ம்     தனியாக
2 தமிழ் 2-ம்     தனியாக
2 பஞ்சாபி 1-தனி, 1-பகிர்வு

நன்றி: http://en.wikipedia.org/wiki/Jnanpith_Award

வெளிப்படையாக   சொன்னால் தமிழ் மொழி இருக்கும் இடமே தெரியவில்லை.
மேலோட்டமாகப்   பார்த்தால் தமிழில் எழுதப்படும் படைப்புகளின் தரம்  சரியில்லை அல்லது நமது   எழுத்துக்கள் வெளியே ரெஃப்லெக்ட் ஆகவில்லை, ஆகிய இந்த  இரண்டும் காரணமாக இருக்க முடியும் என்று நீங்கள் சொல்லலாம்.  இது மட்டும் இல்லாமல்  மொழிகளுக்கு இடையிலான அரசியல் என்றும் சொல்லலாம்.   அதிலும் உண்மை இருக்கிறது, இல்லை என்று சொல்லவில்லை.
நன்றாக யோசித்துப்   பார்த்தால், அரசியல் எங்குதான் இல்லை? தேவகவுடா   பிரதமராக இருந்தபோது,  இந்தியக் கிரிக்கெட் அணியில் 6 பேர்   கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். (டைட்டன் கப்-1996 : ஜவஹல்   ஶ்ரீநாத், அனில் கும்ப்ளே, சுனில்   ஜோஷி, ராகுல் திராவிட், வெங்கடேஷ்   பிரசாத், சுஜித் சோமசுந்தர்).  ஆனால் அதனால் சச்சின் டெண்டுல்கர்   வெளியில் தள்ளப்படவில்லையே?
தமிழ்   இலக்கியம் இப்படி நாறிப் போகக் காரணம் வேறு. மிக மிக முக்கியமான   காரணம்  உள்ளடி (சாதி) அரசியல்தான்.
இராமாயணத்தைத்   தழுவல் செய்து இராஜாஜி ‘சக்கரவர்த்தித்   திருமகன்’ எழுதினார்.  உடனே சாகித்ய அகாடமி (1958) பரிசு   கிடைத்தது.
சு.சமுத்திரம்    மாய்ந்து மாய்ந்து 300க்கும்   மேல சிறுகதைகள், 10-15 நாவல் எல்லாம் எழுதி,   1990-ல சாகித்ய அகாடமி பரிசு (‘வேரில்   பழுத்த பலா’ -நாவல்) வாங்கியபோது சிலர், ‘குய்யோ   முறையோ’  என்று எல்லோரும் கூப்பாடு போட்டார்கள்.  ‘சாகித்ய   அகாடமியிலயும் இட ஒதுக்கீடு  நுழைந்து விட்டது ‘  என்று எழுதி, புழுத்து, நாறிப்   போன  தங்கள்  மனப்பிறழ்வைக்  காட்டினார்கள்.
இராஜாஜி   தழுவல் செய்து எழுதினால் அது திறமை. சமுத்திரம்  உழைத்து முன்னுக்கு வந்தால் அது இட   ஒதுக்கீடு. இந்த மனப்போக்கு இருந்தால்,  நம்மை யார் சீந்துவார்கள்?
தமிழ்நாட்டில்   எழுத்தாளன்  எனப்படுபவன் ஒரு ஈ(ன)ப் பிறவி. அதுவும் எழுத்தையே முழு நேரமாகச்   செய்பவர்கள் எல்லாம்  பிழைக்கத் தெரியாத பைத்தியக்காரர்கள்.  கேரளாவில் ஒரு எழுத்தாளர்   செத்துப் போனால், எல்லா நாளிதழ்களிலும் (ஆங்கில நாளிதழ்கள் உள்பட) முதல் பக்கத்தில் படத்துடன் செய்தி வரும். தமிழ்நாட்டில் ?
[தொடரும்]

துடிமன்னன்

நூல்கள் நுகர்வோம் -4

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

  1. நூல்கள் நுகர்வோம்-1
  2. நூல்கள் நுகர்வோம்-2
  3. நூல்கள் நுகர்வோம்-3
நான் படித்த, அட்டையில்லாத புத்தகங்களைப் பற்றி முன் பகுதிகளில் சொல்லி இருந்தேன். அட்டை இல்லாத , முன் பக்கங்கள் இல்லாத புத்தகங்கள் கூடப் பரவாயில்லை. புத்தகத்தின் நடை/கதைப் போக்கை வைத்து, முன்பகுதியில் என்ன இருந்திருக்கும் என்ற ஊகம் செய்யலாம். ஆனால் பின் பக்கங்கள் கிழிந்து போன நாவல் கிடைத்தால் என்ன செய்ய? [பெரும்பாலும் நாவல்களில் கடைசிப் பக்கத்தில்தான் கதையின் முடிச்சு அவிழும்]
கொஞ்சம் ஆழமாக யோசித்தால், நம் மனித வாழ்க்கையும் முதல் மற்றும் கடைசிப் பக்கங்கள் கிழிந்து போன ஒரு அட்டையில்லாத புத்தகம் தானே? எங்கே இருந்து வந்தோம் என்பது தெரியாது. எங்கே போகப்போகிறோம், என்ன ஆகப் போகிறோம் என்பதும் தெரியாது.இருந்தாலும் 99% மக்கள் எந்தக் கவலையும் இல்லாமல் தின்று, கழிந்து, அடுத்தவன் முதுகில் முள்ளைக் குத்தி, அவன் கஷ்டப்படுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டுதிரிகிறது.
நாம் சென்ற பதிவில் சிற்றிதழ்கள் பற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.
தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இந்த சிற்றிதழ்களின் பங்கு மிக மிக முக்கியமானது.
எத்தனையோ புகழ்மிக்க எழுத்தாளர்கள், கவிஞர்கள் இந்த சிற்றிதழ்களில் எழுத ஆரம்பித்துதான் பிற்காலத்தில் பெரிய ஆட்களாக ஆனார்கள். ஆனால் புகழ் வந்ததும் வெகுசனப் பத்திரிக்கைகளில் சேர்ந்துகொண்டு சிற்றிதழ்களைத் திரும்பிப்பார்க்காமல் அநாதையாக விட்டுவிட்டார்கள்.
இந்த மாதிரி சிற்றிதழ்களோட வளர்ச்சியைப் பார்த்துவிட்டு, வெகுஜனப் பத்திரிக்கைகள் கூட இலக்கிய இணைப்பு / தனி இதழ் வெளியிட ஆரம்பித்தார்கள். இந்தியா டுடே, கல்கி இதழ்கள் எல்லாம் தீபாவளி மலர் வெளியிடுவதெல்லாம் இப்படித்தான். குமுதம் இதழ் சார்பாக ‘தீராநதி’ என்ற பெயரில் ஒரு புத்தகம் 2002-ல இருந்து மாத இதழாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.
புதுக்கவிதை / கவிஞர்களை வளர்த்தெடுத்தது இந்த சிற்றிதழ்கள்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
இந்த சிற்றிதழ்களுக்கே உள்ள நோய் என்னவென்றால், சந்தா கிடைத்தால்தான் உயிர் வாழ முடியும். விளம்பரங்களுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதனாலேயே , பல இதழ்கள் ஆரம்பித்த ஓரிரண்டு ஆண்டுகளிலேயே நின்று போய் விடுகின்றன.
இன்னொரு காரணம், பெரும்பாலான சிற்றிதழ்கள் ஒன்று அல்லது இரண்டு எழுத்தாளர்களின் சுய முயற்சியில் வெளியாவதுதான். இது ஒரு நிறுவனமாக செயல்படாததால் , அந்தத் தனி மனிதர்களின் வாழ்க்கையில நிகழும் பல சம்பவங்கள் இதழ் வெளியீட்டை பாதிக்கின்றன.
சித்தூர் முருகேசன் அவர்கள் தனது கவிதை-07 வலைப்பதிவில் ‘நீங்களும் உங்க எதிரியும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதற்கான சுட்டி http://kavithai07.blogspot.in/2010/08/blog-post_1455.html. இந்தக் கட்டுரையில், புத்தகங்களின் தரம், எழுத்தாளர்களின் மனநிலை பற்றிய ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார்.
/–ஒரு குப்பை தொட்டி நிறைய புஸ்தவங்களை கிளறி புரட்டினா ஒரு பாக்கெட் டயரி ரொம்பினா சாஸ்தி. எழுதறவன்ல நிறைய பார்ட்டி தொடை நடுங்கிங்க. எஸ்கேப்பிஸ்டுங்க. கற்பனா வாதிங்க. வெறுமனே மூளையாலே சிந்திக்கிற பார்ட்டிங்க.–/
இது எவ்வளவு பெரிய உண்மை. இதை இன்னும் ஆழமாக ஆராய்ந்து பார்ப்போம்.
புகழ் அடைந்துவிட்ட எழுத்தாளர்கள் எழுதுகிற எல்லாமே நல்ல எழுத்து என்று சொல்ல முடியாது. இது சினிமாவுக்கும் பொருந்தும். எம்ஜிஆர் , சிவாஜி நடித்த எல்லாப் படங்களுமே நல்ல படங்கள் என்று சொல்லி விட முடியாது. இருந்தாலும் இவர்கள் புகழ் அடைந்த பின்னால், இவர்களின் எல்லாப் படைப்புகளையும் நல்ல படைப்புகளாக நம்மை அறியாமலே ஏற்றுக் கொள்கிறோம்.
இவ்வாறு புகழ் அடைந்த எழுத்தாளர்களின் பின்னால் பதிப்பாளர்கள் ஓடுவதால் மற்ற புதிய எழுத்தாளர்கள் / படைப்பாளிகள் எல்லாம் அரசமரத்துக்கு அடியில் முளைத்த செடி போல வளர முடியாமல் காய்ந்து போகிறார்கள்.
எழுத்தாளன் என்றைக்குமே சமூகத்தை விட, குறைந்தது ஒரு தலைமுறையாவது தாண்டி முன்னோக்கி யோசிக்க வேண்டும். அப்போதுதான் அவனுடைய நல்ல கருத்துக்கள் உந்து சக்தியாக மாறி சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும். ஆனால் எழுதுபவனோ அல்லது மற்ற படைப்பாளியோ , எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்?

/–

எழுதறவன்ல நிறைய பார்ட்டி தொடை நடுங்கிங்க. எஸ்கேப்பிஸ்டுங்க.–/

‘எழுதறவன்’ என்பதை இன்னும் விரிவாக ஆக்கினால் எல்லாப் படைப்பாளிகளுக்கும் இந்த விமர்சனம் பொருந்தும். பல திரைப்படங்களில் முக்கோணக் காதல் கதை இருக்கும், அதில் ஒரு பெண்ணைக் கடைசியில் கொன்று விடுவார்கள். ஏன் எனில் பலதாரமணம் நடந்ததாகக் காட்டக் கூடாது என்ற எண்ணம். ஆனால் இருதாரம் உள்ளவன் ஊருக்கு இரண்டு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சில திரைப்படங்களில் விதவையைக் காட்டுவார்கள். அவளுக்குத் திரும்பவும் திருமணம் ஆவதற்கான வாய்ப்புக் கூடி வருவது போலக் காட்டி இறுதியில் ஏமாற்றுவார்கள். (எ.கா. வைதேகி காத்திருந்தாள்). ஆனால் இங்கே வேடிக்கைக்குரிய விஷயம் என்ன என்றால், விதவைத் திருமணம் நடப்பது போன்ற கதைகள் 1950-60க்கு முன்னாலேயே வந்து விட்டன. மக்களும் ஏற்றுக் கொண்டுவிட்டனர். பின்னால் வந்த தொடை நடுங்கிகள், படம் ஓடாமல் போய்விடுமோ என்று தாங்களாகவே கற்பனை செய்துகொண்டு, பழைமைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தத் திரைப்படத்திலாவது, சந்தர்ப்பவசத்தால் கெட்டுப்போன பெண் வாழ்ந்ததாகக் காட்டவே மாட்டார்கள். அவள் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டு செத்து போவாள். ஏன் அய்யா, கற்பழிக்கப்பட்டவள், கணவனால் கைவிடப்பட்டவள், ஏமாற்றப்பட்டு கர்ப்பமானவள் இவர்கள் எல்லாம் வாழக் கூடாதா? 99% சினிமாவில் இவர்கள் எல்லாம் செத்துப் போவதாகக் காட்டுவது ஏன்? அதுதான் எஸ்கேபிஸம்.
இந்த விஷயத்தில் திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது, கதை / நாவல் எழுதுகிற எழுத்தாளர்களுக்குச் சுதந்திரம் அதிகம். ஏன் எனில், அவர் முதல் போட்டு வியாபாரம் செய்யவில்லை. அவருடைய கதையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவருக்கு நஷ்டம் குறைவு.
இந்த சுதந்திரம் இருந்ததால்தான் தி.ஜா (தி.ஜானகிராமன்) தைரியமாக, ஒரு வேசியைக் கதாநாயகியாக வைத்து ‘மரப்பசு’ நாவலை எழுதி வெளியிட முடிந்தது. தைரியமாக “இத்தோட 300 பேருக்கு மேல ஆச்சு” என்று வசனம் பேச வைக்க முடிந்தது. இந்த நாவலில் எங்குமே விரசமோ, காமத்தைத் தூண்டுகிற விவரிப்புகளோ இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.
அதே நேரத்தில், வேசியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து விரசம் இல்லாமல் யாராவது திரைப்படம் எடுத்திருக்கிறார்களா? அந்த மாதிரி திரைப்படங்களில் எப்படிப்பட்ட காட்சிகள் வந்தன என்பதை நான் இங்கே சொல்ல வேண்டியதே இல்லை. வியாபார நோக்கில் உருவாக்கப்படும் எந்தப் படைப்பும் இப்படித்தான் உயிரற்று இருக்கும்.

[தொடரும்]

துடிமன்னன்

நூல்கள் நுகர்வோம் -3

முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:

நூல்கள் நுகர்வோம்-1

நூல்கள் நுகர்வோம்-2

என் வாசக அனுபவங்களைப் பற்றி நூல்கள் நுகர்வோம்-1 பகுதியில் சொல்லி இருக்கிறேன். வெகுஜன இதழ்களுக்கு அப்பாலும் நூல்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள சில நூல்கள் உதவின. அவற்றுள் ஒன்று, நான் எட்டாம் வகுப்பு முடிந்து விடுமுறையில் படித்த ‘திராவிட இயக்க வரலாறு’ என்ற பழைய நூல்.
இது நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தொகுத்த புத்தகம். ஜஸ்டிஸ் பார்ட்டி எப்படி உருவானது , சுயமரியாதை இயக்கம் எப்படி ஆரம்பித்தது, திராவிடர் கழகம் எப்படி உருவானது, பெரியார் – அண்ணா  இரண்டு பேருக்கும் கருத்து வேற்றுமை எப்படி ஏற்பட்டது, தி.மு.க உருவானது எப்படி, டால்மியாபுரம் – கல்லக்குடி போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், இப்படி 1965 வரைக்கும் உள்ள சம்பவங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டிருந்தன.
அது வரை நமக்கு அரசியல் என்றால் என்ன என்று தெரியாது. இந்த நூலைப் படித்ததும், அது தொடர்பாக இங்கும் அங்கும் விசாரித்து , அண்ணா யார், கலைஞர் யார், எம்ஜிஆர் யார் என்ற விவரங்கள் எல்லாம்  தெரிந்து கொண்டேன்.
இப்படிப் ‘பழுத்துக்’ கொண்டு  இருந்தபோது எங்கள் அப்பாவுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ‘சோவியத் நாடு’  என்ற ஒரு இதழைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.  பொதுவுடைமை தொடர்பான வேறு சில புத்தகங்களும் கிடைத்தன.
  1. முதலாளி எல்லாரும் அநியாயமானவர்கள், கெட்டவர்கள்.
  2. தொழிலாளி எல்லாரும் மிகவும் நல்லவர்கள்.
  3. பணக்காரன் ஏழைகளைச்  சுரண்டுகிறான்.
  4. ஏழைகள் எல்லோரும் பத்தரை மாற்றுத் தங்கங்கள்

என்றெல்லாம் அந்த நூல்களில் எழுதி இருப்பார்கள்.

எங்களுக்கு விவசாயம்தான் தொழில். தோட்டம் / காட்டில் எல்லா வேலைக்கும் கூலிக்கு ஆட்கள் வருவார்கள். அவர்களுடைய செயல்களை நான் மிக நெருக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
தொழிலாளிகள்  எப்படி எல்லாம் வேலை செய்யாமல் ஏமாற்றுவார்கள், திருடுவார்கள், பொய் பேசி வேலைக்கு வருகிற மற்ற ஆட்களைக் கலைத்து விடுவார்கள்  என்ற எல்லாவற்றையும் நான் கண்ணால் பார்த்த பின்புதான்  புத்தகங்களில் எழுதப்படும் கதைகள் பெரும்பாலும் செயற்கையானவை, வலிந்து திணிக்கப்படுபவை என்பது புரிந்தது. சுரண்டல் என்பது இருமுனைக் கத்தி என்பதும், முதலாளி, தொழிலாளி இருவரில் யார் வலிமையாக இருக்கிறார்களோ அதற்குத் தகுந்த மாதிரி சுரண்டல் நடக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
இப்படியாக எனக்குக் கிடைத்த   புத்தகங்களும் , என்னுடைய ரசனையும் மாறிக்கொண்டு  வந்தபோதுதான்   சிற்றிதழ்கள் , புதுக்கவிதை எல்லாம் எனக்கு அறிமுகம் ஆனது.
சிற்றிதழ் என்றால் என்ன? அதற்கான அவசியம் என்ன வந்தது?
‘ஜனரஞ்சக’ப் பத்திரிக்கைகள் என்று சொல்லப்படுற ஆ.வி,   குமுதம், குங்குமம்,கல்கி இந்த மாதிரி வார/மாத இதழ்களில் சில எழுத்தாளர்கள்   மட்டுமே தொடர்ச்சியாக எழுதுவார்கள். அதனால்  புதுமுகங்களுக்கு எந்த வாய்ப்பும் தராமல் Monpoly நடக்கும்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன என்றால் புதிதாக எழுத வருகிற   எல்லோரும் பாரதியார் மாதிரி முதல் படைப்பிலேயே பிரகாசமாக ஜொலிக்க முடியாது.
எல்லாருக்குமே தன்னுடைய  முழுத் திறமையை வெளிப்படுத்த சிறிது காலம் பிடிக்கும், அது வரைக்கும்   அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இதற்கு திரையுலகத்தில் இருந்தே உதாரணம் காட்டலாம்.
எம்ஜிஆர்  1936-லேயே  திரையுலகில் நுழைந்து விட்டார். ஆனால் அவர் கதாநாயகனாக நடிப்பதற்கு  வெகு நாட்களாயின.   சிவாஜி கணேசனோ 1952-ல் நேராக கதாநாயகனாவே  திரையுலகில் நுழைந்தார்.
கமல் – ரஜினி கதையும் இதுவே.
முதல்படம் முடிந்ததுமே எம்ஜிஆர், ரஜினி  இருவரையும்   கழட்டி விட்டு , வாய்ப்புக் கொடுக்காமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவர்களின்  முழுமையான  திறமை வெளியே வந்திருக்காது   இல்லையா?
இது போலத்தான் பத்திரிக்கை உலகமும். ‘ஜனரஞ்சகப்’ பத்திரிக்கைகளும்   புது எழுத்தாளர்களுக்கு வாய்ப்புத் தருவதில் கஞ்சத் தனம் காட்டியதால் சில எழுத்தாளர்கள் தனியாகவோ, கூட்டாகவோ சில சிற்றிதழ்களை ஆரம்பித்தார்கள்.
 தமிழ் இலக்கியப் பாதையில் முக்கியப் பங்கு வகித்த   நிறைய இதழ்கள் முதலில் சிற்றிதழாக ஆரம்பிக்கப்பட்டவையே. பின்னால் புகழ் பெற்ற பல பெரிய   எழுத்தாளர்கள் உருவாக அவை காரணமாக இருந்தன. (எ.கா: மணிக்கொடி, வானம்பாடி, எழுத்து, கணையாழி).
தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகரித்து உள்ளதால், எழுத்தாளர்களும் அதிகரித்துள்ளனர்.  அவர்களுக்கு வெகுஜனப் பத்திரிக்கைகளில் இடம் கிடைக்காதபோது சிற்றிதழ்கள்  வழியாகத் தங்கள் எழுத்துக்களை வெளிக் கொண்டு வருகிறார்கள்.
 தற்போது சிற்றிதழ்களைப் போலவே இணையம் வழியாக   வலைப்பூ/வலைப்பதிவு  என்ற பெயரில் பல்கிப்   பெருகியிருக்கிறார்கள்.
 எனக்கு அறிமுகமான முதல் சிற்றிதழ் “பயணம்”  என்ற  பெயரில் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் வெளியாகிக் கொண்டிருந்த ஒரு சிற்றிதழ். புலியூர் முருகேசன் என்பவர்  அதனை நடத்திக் கொண்டிருந்தார்.  அவருடன் திரு பிச்சைமுத்து, திரு சகாரா ஆகியோரும் இணைந்தனர். பின்பு அது ‘பயணம் புதிது’ என்ற பெயர் மாறுதல் அடைந்து வெளிவந்தது.
 இது போல சிற்றிதழ் நடத்துகிற எல்லோருக்கும் , மற்ற ஊரில் சிற்றிதழ் நடத்துபவர்கள்  2 -3 பிரதிகள்  அனுப்புவார்கள். அதில் தேர்ந்தெடுத்த சில சிற்றிதழ்களுக்கு நான் சந்தா கட்டி வாங்கிப் படித்ததும் உண்டு.
 கவிதாசரண், முகம், நவீனவிருட்சம், காலச்சுவடு, சுந்தரசுகன், உயிர்மை, தமிழ்நேயம், சுபமங்களா, கதைசொல்லி,கனவு, சுற்றுச் சூழல் புதிய கல்வி, தமிழ்ப்பாவை, தமிழ்ச்சிட்டு, நற்றமிழ், பூங்குயில், புதிய புத்தகம் பேசுது – இவை எல்லாம் நான் படித்த  சில சிற்றிதழ்களின் பெயர்களாகும். இப்போது இந்த இதழ்கள் வெளிவருகின்றனவா என்று தெரியவில்லை.
சில சிற்றிதழ்கள் நிறுவனமாக மாறி, புத்தகம் பதிப்புச் செய்கிற அளவுக்கு முன்னேறி இருக்கின்றன.  எடுத்துக்காட்டு : காலச்சுவடு, உயிர்மை
 பொள்ளாச்சி நசன் என்கிற பெரியவர் ஒருவர், இந்த மாதிரி வந்த எல்லாச் சிற்றிதழ்களைப் பற்றியும் எழுதுவதற்கு என்றே  ‘சிற்றிதழ் செய்தி’ என்ற பெயரில் ஒரு சிற்றிதழ் நடத்திக் கொண்டு இருந்தார்.
தற்போது அவர் , தான் இதுவரை தொகுத்த எல்லா சிற்றிதழ்களையும்  பிடிஎஃப்  ஃபைகளாக  மாற்றி  இணையத்தில் ஏற்றி வைத்திருக்கிறார். ஆனால் ஏதோ சர்வர் பிரச்சினையினால்  தற்போது அட்டையை மட்டும் பார்க்கலாம். டவுன்லோட் செய்து படிக்க முடியாது.
சிற்றிதழ் மட்டும் இல்லாமல் வேறு புத்தகங்களை  யார் தொகுத்து வைத்திருந்தாலும்  அவற்றுக்கும் சேர்த்து பெரிய பட்டியல் ஒன்றைத் தயார் செய்து வைத்துள்ளார்..
 இனறைய தேதிக்கு 8,184 நூல்கள், 21,890 இதழ்கள் ஆக மொத்தம் 30,074 புத்தகங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தொகுக்கும் ஆசை அவருக்கு ஏன் வந்தது என்பதை அவரே சொல்கிறார்:
 /– “தொடக்கத்தில் வகைக்கு ஒரு இதழ் என்று சேகரிக்கத் தொடங்கிய நான், அந்த ஒரு இதழை வைத்துக் கொண்டு அந்த இதழின் முழுமை காட்ட முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பொழுது, இதழ்களை முழுமையாகத் திரட்ட வேண்டும் என்று விரும்பினேன். பல்வேறு  நெருக்குதல்களுக்கு இடையில் நிறைய இதழ்களைச் சேகரித்தேன். எழுதிக் கொண்டிருந்த நான் எழுதுவதை நிறுத்த வேண்டியதாயிற்று.
இப்படிச் சேகரித்த இதழ்கள் பெருகிக் கொண்டே இருந்தன. நான் திரட்டிய பல இதழ்கள்
அவற்றைச் சேகரித்தவரின் மறைவிற்குப் பிறகு அவர்களது உறவினர்களாலேயே பழைய புத்தகக் கடைக்கு விலைக்குப் போடப்பட்டவை தான். என்னுடைய தொகுப்பும், எனக்குப் பிறகு இப்படி பழைய புத்தகக் கடைக்குச் சென்று விடுமோ என்ற அச்சம் எனக்குள் தோன்றிக்
கொண்டே இருந்தது. எப்படியாவது இவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்த வேண்டும் என்ற உணர்வு கனன்று கொண்டே இருந்தது.
உடைந்த நிலையில் கிடைத்த பழைய இதழ்கள், தரமாகத் தொடர்ந்து கருத்து விதைக்கும் புதிய இதழ்கள், என்று குவிந்த, இந்த இதழ்களில் நான் படித்துச் சுவைத்த அருமையான செய்திகள், ஒவ்வொன்றையும் தொகுத்தேன். என் பார்வைக்கு வந்த இதழ்களிலிருந்த கருத்துகளை  சுவைத்த பக்கங்கள் என்று இணையத்தில் இணைக்கத் தொடங்கினேன். “ —/
இந்தப் பட்டியலில் இல்லாத புத்தகம் ஏதாவது உங்களிடம் இருந்தால், ஸ்கேன் செய்து அவருக்கு அனுப்பலாம்,அவருடைய  மின்னஞ்சல் முகவரி :பொள்ளாச்சி நசன் – pollachinasan@gmail.com பேச:(04259)221278 அலைபேசி : 9788552061,
சிற்றிதழ் பட்டியல் உள்ள  தளத்துக்கன சுட்டி: http://www.thamizham.net/
[தொடரும்]

-துடிமன்னன்

நூல்கள் நுகர்வோம் -2

தமிழில் உரைநடையில் புத்தகங்கள் வெளியானது 20-ஆம் நூற்றாண்டு   ஆரம்பத்தில்தான். அதுவரைக்கும் வெளிவந்த எல்லா இலக்கியங்களுமே பாடல்கள்தான். (பைபிள்   மொழிபெயர்ப்புத் தவிர).
உரைநடை அறிமுகம் ஆன பின்பு எத்தனையோ எழுத்தாளர்கள் தமிழில்  எழுதி இருக்கிறார்கள். ஆனால் துக்கத்துக்குரிய விஷயம் என்னவென்றால், அதில்  80%  எழுத்தாளர்களின்  படைப்புகள்   எங்கே போயின என்று யாருக்கும் தெரியாது.
சில படைப்புகள் ஒரு வேளை அரசு நூலகங்களில் இருக்கலாம்.   அதுவும்  பட்ட மேற்படிப்பு / ஆய்வு செய்பவர்கள்  ஒருவேளை ஒவ்வொரு நூலகமாக ஏறி இறங்குவார்கள். ஆனால்   பழைய புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு சாமான்யனின் கதி என்ன?
புதிதாக எழுதுகின்ற பல எழுத்தாளர்கள்  தங்கள் நூல்களை 1000 அல்லது 2000 பிரதிகள் மட்டும்   அச்சடிக்கின்றனர். அவை விற்றோ, விற்காமலோ  காணாமல் போய்விடுகின்றன.  பிற்காலத்தில் அந்த எழுத்தாளர்கள்  புகழ் அடைந்தால், அவர்களுடைய பழைய படைப்புகளுக்கு   மறு-அச்சு (Re-Print)  அல்லது மறு பதிப்பு (New Edition) வெளி வரும்.
இதையும் உறுதியாகச் சொல்ல   முடியாது.  நிறைய எழுத்தாளர்கள் புகழ் அடைவதற்கு முன்னாலேயே  மரணம் அடைந்து விடுகிறார்கள்.
20-ஆம் நூற்றாண்டில் எழுதியவர்களில் எழுத்தையே முழுநேரத் தொழிலாகக்   கொண்டவர்கள் நிறையப் பேர். அவர்களில், ஏழ்மையிலேயே நோய் பிடித்துச் செத்துப் போனவர்களும் உண்டு.   அவர்களுக்குச் சிலர் நண்பர்களாகவோ / சீடர்களாகவோ இருந்து பின்னால் அவர்களுடைய படைப்புகளை   வெளியிட்டுப் புண்ணியம்  செய்திருக்கிறார்கள்.
பாரதியார், புதுமைப்பித்தன் – இவர்களுடைய முக்கால்வாசிப்   படைப்புகள் அவர்களுடைய  மறைவிற்குப் பின்னால்தான்  தொகுக்கப்பட்டன.
அந்த மாதிரி நண்பர்களோ / சீடர்களோ கிடைக்காதவர்களின் படைப்புகளின்   கதி என்ன ஆயிற்று என்று சொல்லத் தேவையில்லை.
இது மட்டும் அல்லாமல், பஞ்சம், இயற்கைச் சீரழிவு, தொழில், அரசியல் காரணங்களால்  இடம் பெயர நேர்ந்ததால் பல எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகள் காணாமல் போயிருக்கின்றன.
ஏழ்மையில் இருந்து செத்துப்போன எழுத்தாளர்களின் வாரிசுகளும்   ஏழ்மையிலேயே வாடி ஒன்றும் செய்யமுடியாமல் போயிருக்க 99% வாய்ப்பு இருக்கிறது. (கோடிகளில்   குளித்துக் கொண்டிருந்த பல பழைய நடிகர்களின் வாரிசுகள் இன்றைக்கு சோற்றுக்கு இல்லாமல் க‌ஷ்டப்படுவதைப் பற்றி  குமுதத்தில் ஒரு தொடர் கூட வந்தது. அவர்களுக்கே அந்த நிலைமை என்றால், ஏழை எழுத்தாளர்களின் வாரிசுகளின் கதி?)
அரசு / தனியார் வேலையில் இருந்துகொண்டு பகுதி நேரமாக எழுதிய   பலருடைய படைப்புகள் இப்பபோதும் மறு பதிப்பாகக் கிடைக்கின்றன.  இதற்கு  அவர்களின் நிதி நிலைமையும்  நிச்சயமாக  உதவி இருக்கும் என்பதைச்  சொல்லத் தேவை இல்லை.
உருப்படியான படைப்பாக இருந்தால், மறு பதிப்பு தானாக வந்திருக்கும் என்று   நீங்கள் முனகுவது கேட்கிறது. மறு பதிப்பு வெளிவராமல் முடங்கிப் போனதெல்லாம் நல்ல படைப்பு இல்லை என்று    சொல்லி விட முடியாது. மறு பதிப்பு வெளி வந்தவை எல்லாமே நல்ல படைப்புகள் என்றும் சொல்ல முடியாது.
வசதி , வாய்ப்பு இருக்கிற சில எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளுக்குத்   தாங்களே முட்டுக் கொடுத்து பிரபலம் ஆகிவிடுகிறார்கள். தமிழ் சினிமாவில்  சில டைரக்டர்கள் / தயாரிப்பாளர்கள்   / நடிகர்கள் அவர்களுடைய வாரிசுகளை வைத்து தொடர்ச்சியாகப் படம் எடுத்து  அவர்களை சினிஃபீல்டில்  நிற்க வைத்துள்ளார்கள்,   இல்லையா?
தமிழில் இலக்கியம் என்பது மோர் மாதிரி. கூவிக் கூவி விற்றால்தான் மக்கள் வாங்குவார்கள். மற்ற புத்தகங்களெல்லாம் (பாக்கெட் நாவல், சினிமாச் செய்திகள்) ‘கள்’ மாதிரி மக்களே தேடி வந்து வாங்கிக் கொள்வார்கள். இப்படிக் கூவிக் கூவி விற்க தெம்பு இல்லாதவர்கள் தலையில துண்டைப் போட்டுக்கொண்டு போயிருப்பார்கள்.
 இன்னும் ஒன்றும் கவனித்தீர்களானால், பழைய புத்தகங்களில் எழுத்தாளரைப் பற்றி எந்த விவரமும் இருக்காது. எந்த ஊர்க்காரர், அவரோட இயற்பெயர் என்ன, அவருடைய  மற்ற படைப்புகள் என்ன  என்ற  எந்த விவரமும் சொல்ல மாட்டார்கள்.
வெகுஜனப் பத்திரிக்கைகளில் தொடராக வெளியான பல படைப்புகள் தொகுக்கப்படாமலேயே காணாமல் போய்விட்டன.  இப்போது அவற்றையெல்லாம் எங்கேயும் தேடிக் கண்டு பிடிக்க முடியாது. முந்தைய பதிவில்  நாம் பார்த்த  தினமணி கதிரில் வெளியான படைப்புகளே இதற்குச் சாட்சி.
 இவ்வாறு  நிலைமை இருக்கும்போது, இப்போது புதிதாக உருவாகியிருக்கிற வாசகர்கள் நல்ல புத்தகங்களை, நல்ல எழுத்தாளர்களை எவ்வாறு அடையாளம் தெரிந்து கொள்வார்கள்? நல்ல எழுத்தாளன் என்று பேர் வாங்கும் முன்னேயே மரணம் அடைந்த துரதிர்ஷ்டசாலிகளைப் பற்றிய விவரங்களை இவர்கள் எங்கே தேடிப் படிப்பார்கள்?.
இதற்காகத்தான் – நாம் படும் கஷ்டத்தை – இலக்கியத்தைத் தேடிப் படிக்கின்ற வேறு யாரும் படக்கூடாது என்று  நினைத்துத்தான் இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுகிறேன்.
குறைந்த பட்சம் நான் இது வரைக்கும் படித்த நூல்களைப் பற்றி / எழுத்தாளர்களைப் பற்றி ஒரு A-4 சைஸ் பக்கத்தில் பாதி பக்கம் வருகிற அளவுக்காவது எழுதலாம் என்று  நினைக்கிறேன்.
இதற்கிடையில் ஆன்லைனில் நூல்கள் வாங்க உதவக்கூடிய சில தளங்களின் விவரங்களை இங்கு தருகிறேன்.
ஆன் லைனில் புத்தகம் வாங்குவதற்கு பல தளங்கள் உள்ளன.  அவற்றில் சில தளங்களைப் பற்றிய விவரங்களைக் கீழே காணலாம்.
1. நூல் உலகம்

இது ஜீவா புத்தகாலயத்தின் புத்தக விற்பனைத் தளம். ஸ்டாக் இருக்கிறதா இல்லையா என்று தளத்திலேயே தெரிந்து கொள்ளலாம், அதற்குத் தகுந்த மாதிரி ஆர்டர் செய்யலாம். 500 ரூபாய்க்கு மேல புத்தகங்கள் வாங்கினால் டெலிவரி செலவு இல்லாமல்  இலவசமாக அனுப்புகிறார்கள். பணம் செலுத்த நெட்பேங்கிங், க்ரெடிட் கார்ட், டெபிட் கார்டு  உள்பட எல்லா வழிகளும்  இருக்கின்றன.

ஒரு ஆர்டர் கன்பார்ம் செய்துவிட்டால், அதற்குப்பின்  நாம் புத்தகம் Add செய்தால் , அது தனி ஆர்டராக பதிவு ஆகும். அதனால் ஒரே நாளில் எத்தனை ஆர்டர்கள் வேண்டுமானாலும் தனித்தனியாகப் போடலாம். கூரியரின் டாக் நம்பரும் தருகிறார்கள். அதை வைத்து ட்ராக் செய்யலாம்.
 தளத்தின் சுட்டி: http://www.noolulagam.com/
2. சென்னை ஷாப்பிங். காம்

இது ஏறக்குறைய நூல் உலகம் போலவேதான். 300 ருபாய்க்கு மேல் புத்தகம் வாங்கினால் ஃப்ரீ டெலிவரி செய்கிறார்கள்.

தளத்தின் சுட்டி: http://www.chennaishopping.com/

3. உடுமலை. காம்

இவர்கள் பெரும்பாலும் பதிவு அஞ்சல் வழியாக புத்தகம் அனுப்புகிறார்கள். நாலைந்து புத்தகங்கள் சேர்த்து வாங்கினால், போஸ்ட்மேன் கொண்டு வந்து தரமாட்டார். நாம்தான் போஸ்ட் ஆபீஸ் போய் வாங்கிக்கொண்டு வர வேண்டிய தொல்லை இருக்கிறது.

இன்னொரு பிரச்சினை புத்தகம் ஸ்டாக் இருக்கிறதா, இல்லையா என்று கன்ஃபார்மாகத் தெரியாது. ஆர்டர் போட்டு பணம் செலுத்திய பிறகு ஃபோன் வரும். ‘அந்த புத்தகம் இல்ல சார், மிச்ச பணத்துக்கு வேற புத்தகம் வாங்குங்க’- என்று  சொல்வது உண்டு.

ஒரு ஆர்டர் போட்டபின் அது ப்ராசஸ் ஆகி முடியும் வரை வேறு புத்தகம் வாங்க முடியாது. நீங்கள் Cart—ல் Add செய்யும் புத்தகம் எல்லாம் பழைய ஆர்டரில் போய் Add ஆகும். அதனால் ஒரே  சமயத்தில் ஒன்றுக்கு மேல் ஆர்டர் போட முடியாது.

அதனால் உடுமலை.காம்  என்பது ஒரு முழுமையான ஆன்லைன் புத்தகக் கடை என்று சொல்ல முடியாது. ஃபோன் வழியாகவோ, மெயில் வழியாகவோ கான்டாக்ட்  செய்துதான் ஆக வேண்டும்.

தளத்தின் சுட்டி: http://www.udumalai.com

4. காந்தளகம்
 இந்தத் தளத்தில் , புத்தகங்கள் பட்டியலைப் பார்த்துவிட்டு மெயில் வழியாக Contact செய்தால்,  அனுப்ப வேண்டிய பணம் எவ்வளவு, பேங்க் அக்கவுண்ட்  எண் போன்ற விவரங்களைத்  தருவார்கள்.  அந்த  பேங்க் அக்கவுண்ட்டில் பணத்தை அனுப்பிய பிறகு,  திரும்பவும் மெயில் அனுப்பினால், புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள்.
இவர்கள் தளத்தில் கொடுத்திருக்கிற புத்தகத்தின் விலைக்கும்  உண்மையான விலைக்கும் சம்பந்தம் இருக்காது. தளத்தில் கொடுத்திருக்கிற புத்தகத்தின் விலை, பெரும்பாலும் பழைய பதிப்பின் விலையாக இருக்கும்.

இவர்கள் ஃப்ரீ டெலிவரி செய்வது கிடையாது. 500 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கினால், 100 – 150 ரூபாய் வரை டெலிவரி + பேக்கிங் + ஹேண்ட்லிங் சார்ஜ்  வரும். ஊரைப் பொருத்து டெலிவரி சார்ஜ் மாறும்.

தளத்தின் சுட்டி: http://www.tamilnool.com/  ஈ மெயில் : tamilnool@tamilnool.com

5. நியூ ஹரிஜான் ( கிழக்கு பதிப்பகம்)

இங்கு புதிதாக வெளியான புத்தகங்கள் நிறையக் கிடைக்கின்றன. ஆனால் புத்தகத்தைத் தேடிக் கண்டு பிடிப்பது அவ்வளவு எளிது கெடயாது. இடையில் பேஜ் எக்ஸ்பைர் ஆகிப் போகும்.

250 ரூபாய்க்கு மேல் வாங்கினால் ஃப்ரீ டெலிவரி என்று சொல்கிறார்கள் – ஆனால்  India Post வழியாகத்தான் அனுப்புவார்கள். அதனால 1-2 புத்தகம் வாங்கினால் ஓ.கே. மொத்தமாக வாங்கினால் போஸ்ட் ஆஃபிஸ் சென்று டெலிவரி வாங்க மெனக்கெட வேண்டி இருக்கும்.

தளத்தின் சுட்டி: https://www.nhm.in/shop/cart.php

6. ஃப்லிப் கார்ட்
ஃப்லிப் கார்ட்-ல் தமிழ் நூல்கள் மிகவும் குறைவு. நான் ஒரு முறை ஆங்கிலப் புத்தகம்  ஒன்று வாங்கினேன்.  அது  ஒரு வெளிநாட்டு எழுத்தாளரின் புத்தகம். புத்தகம் வந்த பின்னால் பார்த்தால் அது ஒரிஜினல் இல்லை. கலர் ஜெராக்ஸ் போட்டு ஒப்பேத்தி இருந்தார்கள்.மற்றபடி டெலிவரி வேகமாக செய்கிறார்கள். டிஸ்கவுண்ட் உண்டு.

தளத்தின் சுட்டி: http://www.flipkart.com/

7. நியூ புக் லேண்ட்ஸ்
இவர்களுடைய தளத்தில் ஆன்லைனில்ஆர்டர் போட்டால் ஆர்டர் நம்பர் எதுவும் வராது. பணம் தனியாக  வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும். தளத்தில் காடும் விலை உண்மையான விலை கிடையாது. ஸ்டாக்கும் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது.
விடாப்பிடியாக ஃபால்லோவ் அப் செய்ய வேண்டும். பொறுமை உள்ளவர்கள் வாங்கக் கடவர்கள்.
மேலே குறிப்பிட்ட தளங்கள் தவிர, பெரும்பாலான பதிப்பாளர்களே அவர்களுடைய தளங்களில் இருந்து நேரடியாக விற்பனை செய்கிறார்கள். விகடன், லிஃப்கோ, கண்ணதாசன் போன்றவை அவற்றுள் சிலவாகும்.
 விகடன் தளத்திற்கான சுட்டி: http://www.vikatan.com/
லிஃப்கோ தளத்திற்கான சுட்டி: http://www.lifcobooks.com/
கண்ணதாசன் பதிப்பகம் தளத்திற்கான சுட்டி: http://kannadasanpathippagam.com/
பழைய எழுத்தாளர்களைப் பற்றிய பல விவரங்கள் கீழ்க்கண்ட தளங்களில் கிடைக்கின்றன . அத்தளங்களுக்கான  சுட்டிகள்:
http://solvanam.com/
http://s-pasupathy.blogspot.in/

[தொடரும்]

-துடிமன்னன்

நூல்கள் நுகர்வோம் -1

திரு முருகேசன் அவர்கள் , ‘புத்தகங்கள்’ – என்னும் தலைப்பில் தளங்களின் தளமான கன்னிமாராவில், எழுதியிருந்த கட்டுரையைப் பற்றிச் சொல்லி இருந்தோம்.
அக்கட்டுரையில் இருந்த சில வரிகள்:
/–ஆனால் மனித குட்டி அப்படி அல்ல. தன் பெற்றோரின்,முன்னோரின் அனுபவ செல்வங்களை பெற்று அவர்கள் விட்ட இடத்திலிருந்து தன் பயணத்தை துவங்க முடிகிறது. மனிதன் தன் மூளையில் தான் சேகரித்த அனுபவங்களை பதிவு செய்து வைக்க ஆரம்பித்தது ஒரு பெரிய டர்னிங் பாய்ண்ட்.–/
/–புத்தகங்கள் மனித குல வரலாற்றின் பிரிக்கமுடியாத அங்கங்கள். ஏன் மனித குல வரலாறே ஒரு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதால் தான் இன்று நாம் அதை தொட்டு பேசமுடிகிறது.–/
தான் சொல்ல வந்த கருத்தின் மையத்தை வெகு எளிதாகத் தொட்டுக் காட்டியிருக்கிறார்.
இன்றைய தேதிக்கு, நூல்களைப் படிப்பவர்கள் (பாடநூல்கள் தவிர்த்து)  மிகவும் குறைவு.
நூல் படிக்கும் பழக்கம் கொண்ட ஒருவருக்கும் அந்தப் பழக்கம் இல்லாத ஒருவருக்கும் எண்ணம் , சிந்தனை எல்லாவற்றிலும் நிச்சயமாக வேறுபாடு இருக்கும். இது அவர்களின் பேச்சிலேயே தெரியும்.
 நமக்குப் புத்தகங்கள் அறிமுகம் ஆனது  மிகவும் சிறிய வயதில். (7-8 வயதில்)
எங்கள் அப்பாவுக்கு ஒரு பழைய இரும்புக்கடை இருந்தது. ( ‘பழைய இரும்பு’க் கடை அல்ல). அந்தக் கடையில தினமணி செய்தித்தாள் வரும். அதனுடன்  ஞாயிற்றுக் கிழமை அன்று  தினமணி கதிர் இணைப்பு வரும்.
அப்போது தினமணி கதிருக்கு, திரு. கஸ்தூரி ரங்கன் பொறுப்பு ஆசிரியராக இருந்தார்.
அபோது வெளியான கதைகள்  நமக்குப் புரியாது. இருந்தாலும் எங்கள் அம்மாவுக்கு நானும் என் அக்காவும் படித்துக் காட்டுவோம், அப்படியே கொஞ்சம் நமக்கும் புரிய ஆரம்பித்தது.  அவ்வளவுதான், எனக்குப் புத்தகப் பைத்தியம் பிடித்துக் கொண்டது.
எங்கள் கடைக்குப் பக்கத்தில் ஒரு பெட்டிக்கடை இருந்தது, அங்கு ஒரு அக்கா நிறைய புத்தகங்கள் வாங்கிப் படிப்பார். அவரிடம் நாங்கள் கடன் வாங்கிப் படிப்போம்.
 குட்டை டாக்டர் என்ற பெயரில் ஒரு டாக்டர் இருந்தார்.  அவரும் புத்தகப் பைத்தியம்தான். ( அவரிடம் இருந்து வாங்கி வருகின்ற புத்தகம் எல்லாம் மருந்து வாடை அடிக்கும்).
அம்புலிமாமா, பூந்தளிர்,பாலரத்னா  போன்ற சின்னப் பிள்ளைகள் படிக்கும் புத்தகங்கள் மட்டும் அல்லாது கீழே பட்டியலில் காணும் புத்தகங்கள் எல்லாம் படித்தோம். அப்போது  நான் 4/5-ஆம் வகுப்புத்தான் படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன்.
1.மாலைமதி,
2.ராணி,
3.ராணிமுத்து,
 4.தாய்,
5.இதயம் பேசுகிறது,
6.குமுதம்,
7.குங்குமம்,
8.கல்கண்டு,
9.முத்தாரம்,
10.ராணி காமிக்ஸ்,
11. குங்குமச் சிமிழ்
12. சினிமா எக்ஸ்பிரஸ்
13. ஓம் சக்தி
14. சாவி
15. சோவியத் நாடு.
இவை மட்டும் அல்லாது, அப்போது வெளியாகிக் கொண்டிருந்த பாக்கெட் நாவல்கள்- இராஜேந்திர குமார், இராஜேஷ் குமார், ஆர்னிகா நாசர், புஷ்பா தங்கதுரை, சுபா  போன்றவர்கள் எழுதிய நாவல்கள் எல்லாம் படித்தோம். கொலை செய்வது என்றால் என்ன அதைத் துப்பறியறிவது எப்படி போன்ற ‘விஷய ஞானம்’ எல்லாம் பெற்றோம்.
மாலையில், பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போகும்போது, இந்தப் புத்தகங்களில் ஏதாவது ஒன்றைப் படித்துகொண்டே நடந்து போவோம். (5 கிலோ மீட்டர்)
ஆனால் இந்தப் புத்தகங்கள் எல்லாம் தொடர்ச்சியாகப் படிக்கக்  கிடைக்கவில்லை– நமக்குத் தொடர்ச்சியாகக்  கிடைத்தவை ,  தினமணி நாளிதழுடன் துணையாக வெளியான தினமணி கதிர், வெள்ளிமணி, தினமணி சுடர் –தமிழ்மணி ஆகியவை மட்டும்தான்.
இவற்றில் வெளியான பல நல்ல தொடர்கதைகள், கட்டுரைகள் தொகுக்கப்படாமலேயே போயின.
இபோது அவற்றைத் திரும்பப் படிக்கலாம் என்று நினைத்தால் அவை கிடைக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
எனக்கு நினைவில் வருகின்ற சில தொடர்களை மட்டும் கீழே தருகிறேன்.
1. ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ – தொடர்கதை -கஸ்தூரி ரங்கன் – தொகுக்கப்படவில்லை

2. சிந்தா நதி – லா.ச.ரா  – இது நூலாக வெளி வந்துள்ளது. சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. 1985-ல் தொடராக வந்தது என்று  சொல்கிறார்கள்.

3.‘ஜூலேகா’ – எழுதியவர் பெயர் ஞாபகம் இல்லை, தொகுக்கப்படவில்லை
4.சைவ நாயன்மார்கள் பற்றி ஒரு தொடர்- தலைப்பு நினைவில் இல்லை, தொகுக்கப்படவில்லை
5. மருக்கொழுந்து மங்கை – வரலாற்றுத் தொடர்கதை-ர.சு நல்ல பெருமாள் (இந்தத் தொடர்கதை தொகுக்கப்பட்ட நூலாகக் கிடைக்கிறது – Contact : Kaanthalakam [mailto:tamilnool@tamilnool.com]  ). இந்நூலைப் பற்றி பின்னால் எழுதுவோம்.
6.க.நா.சுப்ரமண்யம் எழுதிய பல கட்டுரைகள்
7.கி.பி.2084 – அறிவியல் தொடர்கதை- கஸ்தூரிரங்கன் (2084 / 2034 / 2134 தலைப்பு சரியாக நினைவில் இல்லை) – தொகுக்கப்படவில்லை
8.வீர வாஞ்சி / ஆஷ் கொலை வழக்கு – ரகமி- தொகுக்கப்படவில்லை
9.புகழ் பெற்ற தீர்ப்புகள் – நீதிபதி ஒருவர் (ஜஸ்டிஸ் ரத்னவேல் பாண்டியன்?) எழுதிய தொடர்- தொகுக்கப்படவில்லை
10.அறந்தை நாராயணன், தமிழ் சினிமா பற்றி எழுதிய கட்டுரைத் தொடர்கள் – தொகுக்கப்படவில்லை
11.தமிழ் நாட்டுக் கோயில் சிற்பங்கள் / கல்வெட்டுக்கள் பற்றிய தொடர் – முனைவர் கலைக்கோவன் – தொகுக்கப்படவில்லை
12.மீ. ப. சோமு எழுதிய பாம்பாட்டிச் சித்தர் பற்றிய தொடர்.- தொகுக்கப் படவில்லை
13.சுஜாதா எழுதிய ‘சிலிகனின் சில்லுப் புரட்சி’ – கணினி அறிவியல் பற்றிய தொடர் -தொகுக்கப்படவில்லை
14.மலர் மருந்துகள் – ஹோமியோபதி மருந்து பற்றிய தொடர்- எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. தொகுக்கப்படவில்லை
15.‘சூப்பர் தும்பி’ – படக்கதை – கதை கேயார் – சித்திரம் பாலாஜி / செல்லம் –  தொகுக்கப் படவில்லை
16.குருஜி என்பவர் எழுதிய ஒரு நகைச்சுவைத் தொடர்கதை. தலைப்பு நினைவில் இல்லை. தொகுக்கப் படவில்லை
17.ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் – சுஜாதா – நூலாகத் தொகுக்கப் பட்டுள்ளது.
18.இந்தியாவில் 19-20-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து சமூகப்பணி / ஆன்மீகப்பணி ஆற்றியவர்களைப் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் வந்தது.  தலைப்பும் எழுதியவர் பெயரும் நினைவில் இல்லை.
19.‘நியாயப்படுத்தப்பட்ட கொலைகள்’ – தொடர்கதை- செ. யோகநாதன் – நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
20.நாகப்பட்டினத்தில் விவசாயிகளுக்கு உதவிய கம்யூனிஸ்ட் மணியம்மை பற்றிய ஒரு தொடர்கதை – தலைப்பு , எழுதியவர் பெயர் நினைவு இல்லை.
21.‘கோதை சிரித்தாள்’ – தொடர்கதை-க.நா.சுப்ரமண்யம் – இது நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
22.‘வானம் வசப்படும்’ –தொடர்கதை- பிரபஞ்சன் – இது நூலாகத் தொகுக்கப்பட்டு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது.
23.மாருதி, ம.செ, ராமு, உமாபதி போன்ற ஓவியர்களின் ஓவியங்கள்.
24. கணிதமேதை இராமனுஜம் வாழ்க்கை வரலாறு-ரகமி-தொகுக்கப்படவில்லை
25. ‘உடோபியா’  கட்டுரைத் தொடர்-எழுதியவர் பெயர் நினைவில் இல்லை – தொகுக்கப்படவில்லை.
மேலே சொன்னவையெல்லாம் தினமணி கதிரில் வெளியானவை. இவை மட்டும் அல்லாமல் தினமணி சுடர் என்ற  பெயரில் சனிக்கிழமை அன்று ஒரு இணைப்பு வந்தது. அதில்  தமிழ்மணி , அறிவியல்மணி  என்ற  இரண்டு பகுதிகள் இருந்தன.
அதில் வெளியான பல பயனுள்ள கட்டுரைகள் தொகுக்கப்படவே இல்லை என்றே நினைக்கிறேன். அந்த வகையில் தினமணி நிர்வாகம் எந்த முயற்சியும் செய்ததாகவே தெரியவில்லை.
தினமணி சுடர் – தமிழ் மணியில் வெளியான சில படைப்புகள்:
  1. தமிழண்ணல் எழுதிய ‘வளர் தமிழ் – உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற கட்டுரைத்தொடர் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.  Contact : Kaanthalakam [mailto:tamilnool@tamilnool.com]
அறிவியல் பகுதியில் வெளியான தொடர்கள் -தொகுக்கப்படவில்லை

  1. கம்ப்யூட்டர் தொடர்பாக திரு.என். இராமதுரை எழுதிய கட்டுரைகள்
  2. எஸ்.குரு என்பவர் எழுதிய பல புகழ்பெற்ற இலக்கிய / ஓவியர்/சிற்பிகள் பற்றிய தொடர்
  3. நெல்லை. சு. முத்து எழுதிய அறிவியல் கட்டுரைகள், அறிவியல் வினா – விடைகள்
தமிழ் மணி வரலாற்றைப் படிக்க இந்த சுட்டியை அழுத்துங்கள்:http://www.varalaaru.com/Default.asp?articleid=886
அய்ராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்தபோது  தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான ஏகப்பட்ட கட்டுரைகள் வெளிவந்தன. பின்னால் வந்த ஆசிரியர்கள் வணிக நோக்கத்தில் செயல்பட்டதால் தினமணி கதிர் / சுடர் எல்லாவற்றின் தரம் குறைந்து போனது. நானும் தினமணி படிப்பதை விட்டுட்டேன்.
தொடரும்

-துடிமன்னன்

நூல்கள் நுகர்வோம் – புதிய தொடர்

அறிமுகம்:

தளங்களின் தளமான கன்னிமாராவில், திரு முருகேசன் அவர்கள் , ‘புத்தகங்கள்’ – என்னும் தலைப்பில்  ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.  அதைப் படித்ததுமே அதன் தொடர்ச்சியாக ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
அதன் விளைவாக கன்னிமாரா தளத்தில் , ‘புத்தகங்களும் நானும்’ என்ற தலைப்பில், நான் படித்த பல நூல்களைப் பற்றி ஒரு தொடர்  எழுத ஆரம்பித்தேன். அந்தத் தொடர் கட்டுரைகள், சிறிதளவு மாற்றங்களுடன் இங்கு தொடராக வெளியிடப்படுகின்றன.
இந்தக் கட்டுரைத் தொடரில், நான் படித்த பல நூல்களைப் பற்றிய விவரங்களுடன், சிறிதளவு திறனாய்வும் சேர்த்து, எழுதுகிறேன். முடிந்த அளவு எந்த ஒரு தனிமனிதரைப் புகழ்வதோ, இகழ்வதோ இல்லாமல், கட்டுரைக்காக எடுத்துக்கொண்ட நூலின் உள்ளடக்கத்தோடு ஒட்டித் தேவையான அளவுக்கு விமர்சனம் கலந்து எழுதுகிறேன்.
நான் எந்த ஒரு தனிப்பட்ட  அரசியல் இயக்கத்தின் உறுப்பினனோ அல்லது ஆதரவாளனோ அல்ல. அதே நேரத்தில்,  நூலோடு தொடர்புடைய அரசியல் நிகழ்வுகளைப் பற்றியும், அதன் பொருட்டு , அரசியல் இயக்கங்கள் செய்த / செய்கின்ற தவறுகளையும் அவற்றால் சமுதாயத்தில் ஏற்பட்ட / ஏற்படும் விளைவுகளை ஆங்காங்கே சுட்டிக்காட்டுவதும் எனது கடமையாகும்.
இனி கட்டுரைத் தொடருக்குள் சந்திப்போம்.