Category Archives: ஆன்மீகத்தில் அரசியல்

திருப்புகழ் நெறியும் வைணவ வெறியும்

இந்து மதத்தில் இடை செருகல்கள் -2

முன்பகுதி: இந்து மதத்தில் இடை செருகல்கள் -1

 

விஷ்ணுவின் அடிப்பொடிகள் செய்த, செய்து வருகின்ற களியாட்டங்களைப் பற்றி முன் பதிவுகளில் நான் எழுதியதைப் படித்த நண்பர்கள் சிலர், நான் அதிகப்படுத்தி எழுதுகிறேனோ என்று சந்தேகம் கொண்டிருக்கலாம். கரையான் எப்படித் தான் இருக்கும் மரத்தையே அரித்துத் தின்கிறதோ அதுபோல இவர்கள் எப்போதும் தான் கைவைத்த அனைவற்றையும் கபளீகரம் செய்து, தங்களுக்கு ஏற்றவாறு இடைச்செருகல்களைப் புகுத்துதல், மாற்றுதல் என சிறிதும் கூச்சமின்றி செயல்படுபவர்கள் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன.  அவற்றில் ஒன்றை இப்போது பார்ப்போம்.

அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழின் பல பாடல்கள் ஒலி வடிவில், இணையத்தில்  http://www.kaumaram.com/thiru/index_n1.html என்ற சுட்டியில் கிடைக்கின்றன. கிடைக்கட்டுமே, நல்லதுதானே, அதற்கும் இந்தத் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?  தொடர்ந்து படியுங்கள்….

பல கலைஞர்கள் பாடியுள்ள பாடல்கள் இங்கு வலையேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக குருஜி என்று அழைக்கப்படும் திரு. ஏ.எஸ். இராகவன் மற்றும் குழுவினர் பாடிய பாடல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் 3 பாடல்கள்  மட்டும் பாடலின் முதல் வரியிலிருந்து ஆரம்பிக்காமல், இடையில் இருந்து பாட ஆரம்பிக்கிறார்கள். என்னடா எலி அம்மணத்துடன் ஓடுகிறதே என்று அந்த மூன்று பாடல்களை ஆராய்ந்தபோது , இவர்கள் சந்திலே சிந்து பாடுவதைக் கண்டுபிடித்தேன்.

விஷயம் இதுதான். இந்த பாடல்களில் இடையில்  விஷ்ணுவின் புகழைச் சொல்லும் வரிகள் வருகின்றன. அதுவும் ‘விஷ்ணுவின் மருமகனே’  என்று குறிப்பிட்ட  வகையில் வந்த வரிகள்தான் அவை. விடுவார்களா? ““ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைக்க வேண்டும்” அல்லவா? எனவே இவர்கள் பாட்டையே உல்டாவாக இடையில் எங்கு விஷ்ணுவைப் பற்றிக் குறிப்பு வருகிறதோ அங்கிருந்து பாட ஆரம்பிக்கிறார்கள்.

 

1.   பாடல் 29, “அனிச்சங் கார்முகம்” என்று ஆரம்பிக்கும் பாடல்.  (http://www.kaumaram.com/thiru_uni/tpun0029.html )

பாடலைக் கேட்க சுட்டி: http://www.kaumaram.com/audio_k/grtp0029.html

 பாடுபவர்கள் 5-ஆவது வரியில் இருந்து பாட ஆரம்பிக்கிறார்கள்.

இதில் 5-ஆவது வரியைப் பார்ப்போம் :

முனைச்சங் கோலிடு நீலம கோததி
அடைத்தஞ் சாத இராவண னீள் பல
முடிக்கன் றோர் கணை யேவும் இராகவன் …… மருகோனே

 

பொருள்: 

முனைச் சங்கு ஓலிடு நீல மகா உததி போர்முனைக்கு உரிய சங்குகள் ஒலிக்கின்ற நீல நிறம் கொண்ட பெரிய கடலை
அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல முடிக்கு அடைத்து இலங்கைக்குப் பாலம் கட்டி, அஞ்சுதல் இல்லாத இராவணனுடைய நீண்ட பத்து முடிகளும் (வீழ),
அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே அன்று ஒப்பற்ற அம்பைச் செலுத்திய இராமனுடைய மருகனே,

  

6-ஆவது வரியைப் பாருங்கள்.

முளைக்குஞ் சீதநிலாவொடு அரா விரி
திரைக் கங்கா நதி தாதகி கூவிள
முடிக்குஞ் சேகரர் பேரருளால் வரு …… முருகோனே  —-6

 

பொருள்:  

முளைக்கும் சீத நிலாவொடு அரா திருப்பாற்கடலில் தோன்றும் குளிர்ந்த பிறைச் சந்திரனோடு, பாம்பையும்,
விரி திரை கங்கா நதி தாதகி கூவிள விசாலமானதும் அலைகளை உடையதுமான கங்கை நதியையும், ஆத்திப் பூவையும், வில்வத்தையும்
முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே ஜடாமுடியில் தரிக்கும் சிவபெருமானின் பேரருளால் தோன்றிய முருகோனே.

ஏன் சிவனைப்பற்றி வரும் 6- வது வரியில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதுதானே? அது எப்படி ஆரம்பிப்பார்கள்? எது கிடைத்தாலும் அதைத் தமக்கேற்றவாறு மாற்றிக்கொண்டு, பின் “இதுதான் உண்மை” என்று ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் எத்தர்கள்தானே இவர்கள்? பின் எப்படி 6-ஆவது வரியில் இருந்து ஆரம்பிப்பார்கள்?

 

2.   அடுத்து பாடல் 529 (http://www.kaumaram.com/thiru_uni/tpun0529.html) ஐப் பார்ப்போம். இது  வரிசேர்ந்திடு சேல்  என்று ஆரம்பிக்கும் பாடல்.

பாடலைக் கேட்க சுட்டி: http://www.kaumaram.com/audio_k/grtp0529.html

இதனையும் 5-ஆம் வரியில் இருந்து பாட ஆரம்பிக்கிறார்கள். ஏன் என்பது பாடலின் வரிகளைப் பார்த்தால் புரிந்து விடும்.

கரிவாம்பரி தேர்திரள் சேனையும்
உடனாந்துரி யோதன னாதிகள்
களமாண்டிட வேயொரு பாரத …… மதிலேகிக்            ————-5
 
கனபாண்டவர் தேர்தனி லேயெழு
பரிதூண்டிய சாரதி யாகிய
கதிரோங்கிய நேமிய னாம் அரி …… ரகுராமன்      ———-6
 
திரைநீண்டிரை வாரியும் வாலியும் 
நெடிதோங்கும ராமர மேழொடு   
தெசமாஞ்சிர ராவண னார்முடி …… பொடியாகச்     ——7
 
சிலைவாங்கிய  நாரணனார் மரு
மகனாம் குகனே பொழில் சூழ்தரு
திருவேங்கட மாமலை மேவிய …… பெருமாளே.     ——–8

 

பொருள்:

கரிவாம்பரி தேர்திரள் சேனையும் யானைப்படையும், தாவும் குதிரைப் படையும், தேர்ப்படையும், திரண்ட காலாட்படையும்,
உடனாந்துரி யோதன னாதிகள் ஒன்றாகக் கூடியுள்ள துரியோதனாதியர்
களமாண்டிடவே யொரு பாரதம் அதிலேகி போர்க்களத்தில் இறந்தழிய, ஒரு பாரதப் போர்க்களத்தில் சென்று,
கனபாண்டவர் தேர்தனி லே பெருமைவாய்ந்த பாண்டவர்களின் தேரிலே,
எழுபரிதூண்டிய சாரதி யாகிய கிளம்பிப் பாயும் குதிரைகளைச் செலுத்திய தேரோட்டி ஆனவனும்,

கதிரோங்கிய நேமியனாம் அரி ரகுராமன் ஒளி மிகுந்த சுதர்ஸன சக்கரத்தை உடையவனுமான ஹரி, ரகுராமன், ஆகிய திருமாலும்,
திரைநீண்டிரை வாரியும் வாலியும் அலைகள் ஓங்கி ஒலிக்கும் கடலையும், வாலியையும்,
நெடிதோங்குமராமரம் ஏழொடு நீண்டு உயர்ந்த ஏழு மராமரங்களையும்,
தெசமாஞ்சிர ராவணனார்முடி பொடியாக பத்துத் தலைகளையுடைய ராவணனின் சிரங்களையும் பொடிபடும்படி
சிலைவாங்கிய நாரணனார் மருமகனாம் குகனே கோதண்ட வில்லை வளைத்த (ராமனாக வந்த) நாராயணனின் மருகனான குகனே,
பொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே. சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாம் திருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

 

3.   அடுத்து 870-ஆவது பாடல். (http://www.kaumaram.com/thiru_uni/tpun0870.html)

இந்தப் பாடல் “கரியகுழல் சரியமுகம்” என்று ஆரம்பிக்கிறது.

பாடலைக் கேட்க சுட்டி: http://www.kaumaram.com/audio_k/grtp0870.html

இந்தப் பாடலையும் 5-ஆம் வரியில் இருந்து பாட ஆரம்பிக்கிறாரகள். ஏன் என்பதற்குப் படலின் வரிகளைப் பாருங்கள்.

உரியதவ நெறியில்நம நாராய ணாயவென
ஒருமதலை மொழியளவி லோராத கோபமுடன்
உனதிறைவன்  எதனிலுள னோதாய டாவெனுமுன் ……உறுதூணில்  ——–5
 
உரமுடைய அரி வடிவ தாய்மோதி வீழவிரல்
உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
உவணபதி நெடியவனாம் வேதாவும் நான்மறையும் …… உயர்வாக   ———-6

 

பொருள்:

உரிய தவ நெறியில் நம நாராயணாய என சரியான தவ நெறியிலிருந்து, நமோ நாராயணாய என்று
ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன் ஒப்பற்ற குழந்தையாகிய (பிரகலாதன்) சொன்னதும், எண்ணமுடியாத கோபத்துடன்,
உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் உன்னுடைய கடவுள் எங்கு இருக்கிறான் சொல்லடா என்று கேட்டு முடியும் முன்னே,

உறு தூணில் உரமுடைய அரி வடிவதாய் அங்கிருந்த தூணில் வலிமை உள்ள சிங்கத்தின் உருவமாய் வந்து,
மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார்பீறி இரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து, நகங்களைப் புதைத்து மார்பைக் கிழித்துப் பிளந்து,
வாகை புனை உவண பதி நெடியவனும் வெற்றிக் கொடி ஏற்றினவரும், கருடனுக்குத் தலைவருமான நெடிய திருமாலும்,
வேதாவும் நான் மறையும் உயர்வாக பிரமனும், நான்கு வேதங்களும் மேன்மை பெறும்படியாக,

 

அப்பட்டமாக, தான் வணங்கும் விஷ்ணுவை முன்னிறுத்தும் பொருட்டு, பாடலையே மாற்றிப்பாடுவதற்கு இவர்கள் துணிகிறார்கள் என்றால், பழைய இலக்கியங்களில், பண்பாட்டில் எவ்வளவு தூரம் இவர்கள் இடைச்செருகல்களைப் புகுத்தி, தமக்குத் தேவையான மாதிரி மாற்றி இருப்பார்கள் என்பதை நாம் நன்றாக உணரலாம்.

இந்து மதத்தில் இடைச் செருகல்கள்

இந்து மதத்தில் இடைச் செருகல்கள் :

மனித மனம் எப்போதுமே தான், தன்னுடைய என்ற நிலையிலேயே இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எந்த ஒரு கருத்திலும் தனக்கு விருப்பமான பகுதிகளை அதிகப்படுத்தியும், மாற்றியும் புரிந்து கொள்கிறது.

இந்த இயல்பை உணர்ந்ததால்தான், சாதாரண மனிதனுக்கு ஆன்மீகக் கருத்துக்களைப் புரிய வைப்பதற்காக பலவகையான கதைகள் கட்டமைக்கப்பட்டன. இங்கு கதைகள், இலக்கியம் ஆகியவை, இலக்கை அடைய உதவும் கருவிகள்தான். அவையே இலக்கு ஆகிவிடாது. நாம் ஒரு பேருந்தில் ஏறுகிறோம். பேருந்து மிகவும் வசதியாக இருக்கிறது என்பதற்காக பேருந்தை விட்டு இறங்காமல், அது போகுமிடமெல்லாம் போய்க் கொண்டிருந்தால், இலக்கை அடைய முடியாது.  தில்லிக்குப் போகும் இரயிலில் ஏறி விட்டு ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி நின்று கொண்டிருந்தால், தில்லிக்குப் போக வெகு காலம் ஆகும். எனவே கருவியைக் கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த வகையில், இந்து மதத்திலும் ஏகப்பட்ட இடைச்செருகல்கள் புகுத்தப்பட்டுள்ளன. சில கருத்துக்கள் பக்தியின் மேலீட்டால் புகுத்தப்பட்டுள்ளன் என்று ஏற்றுக் கொள்ளலாம்.  ஆனால்  இடையில் வந்த சிலர், தங்களுடைய பிழைப்பிற்காக, சுய நலத்திற்காக, வாய்ப்புக் கிடைத்த இடங்களிலெல்லாம் வரப்பு வெட்டி வாய்க்கால் நீரைத் தங்கள் வயலுக்குப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள். தங்களைத்தாண்டி கடவுளை யாரும் தரிசனம் செய்யாதிருக்கவும், தங்களைத்தவிர வேறு யாரும் ஞானத்தை உணர்ந்து விடாதிருக்கவும் பல முன்னேற்பாடுகளையும் முட்களையும் பாதையில் போட்டு வைத்திருக்கிறார்கள்.

அவர்களின் சுயநலத்தையும், அவர்கள் செய்த துரோகங்களையும் பட்டியலிட்டால், நாமும் இந்தக் கட்டுரையின் இலக்கைத் தவற விட்டு விடுவோம் என்பதால் அவற்றைப் பின்னொரு நாளில் வேறு கட்டுரையில் அலசுவோம்.

இங்கு, பக்தி மேலீட்டால் நடந்த இடைச்செருகல்களையும், கருத்தை விளக்குவதற்காகச் சொன்ன கதைகள், சொல்ல வந்த கருத்தையே அமுக்கி விட்டு வெறும் புனைவுகளாகப் போன நிகழ்வுகளைப் பற்றியும் ஆராய்வோம்.

  • இந்து மதம் என்பது ஒரு மதம் அல்ல.

இன்று இந்து மதம் என்று குறிப்பிடுகிறோம், நாம் இந்துக்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறோம். ஆனால்  சில  அடிப்படை உண்மைகளை மறந்து விடுகிறோம். இந்து மதம் என்றொரு மதம் யாராலும் தோற்றுவிக்கப்படவில்லை. ஆதி காலத்தில் நாகரீகம் அடைந்த மனிதர்கள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு இடையில் இருந்த அடர்ந்த காடுகள், மலைகள் காரணமாக ஒரு கூட்டத்திற்கும் இன்னொரு கூட்டத்திற்கும் இடையில் தொடர்பு இல்லாமல் இருந்தது.

எப்போது உணவு உற்பத்தியில் தன்னிறைவு ஏற்பட்டதோ அப்போது ஓய்வு நேரமும் அதிகரித்தது. அந்த சமயத்தில் சிலர் தேசாந்திரிகளாக  திரிந்து கொண்டு இருந்தபோது / மற்றும் சிலர் Adventure tourism போன்ற காரியங்களில் ஈடுபட்டதன் மூலமாக ஒரு கூட்டத்திற்கும் இன்னொரு கூட்டத்திற்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது.  இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்ற காலப்பரிமாணம் இங்கு நமக்கு அவசியமில்லை. இந்த தொடர்பு மூலமாக  அவர்களின் வாழ்க்கையில், பண்பாட்டில் , பொருளாதார, தொழில் நிலைகளில் கலப்பு ஏற்பட்டது.

ஆன்மீகம் என்று பார்த்தால், மனிதனுக்குப் படைப்பைப் பற்றியும், படைத்தவனைப் பற்றியுமான ஒரு தேடல் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அவரவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த இயற்கைச் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு அவர்கள் வழிபாடுகளும் இருந்தன. தெற்கில், நீத்தாரைக் கடவுளாக வணங்குதல் இருந்தது. அதனால்தான் குலதெய்வம் என்ற கருத்து / சிறுதெய்வ வழிபாடு தெற்கில் ஆழமாக உள்ளது. வடக்கில் சிறு தெய்வங்கள் இல்லை.

அரசனையே தெய்வமாகப் போற்றி வணங்குதலும் இருந்தது. இதனால்தான் கோ-இல்=கோயில் என்ற இடம் அரசனுக்கும் இறைவனுக்கும் உரித்தான இடமாக இருந்தது. வழிபாட்டு முறைகளும் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒன்றாக இருந்தன.

இப்படியாக வாழ்ந்த கூட்டங்களில் (இனி இவர்களை நாடு என்று சொல்லலாம்) சிலர் தங்களது தீவிரமான தேடலின் பலனாக ஞானம் அடைந்து, அந்த ஞானத்தை மற்றவர்களுக்கும் அறியச் செய்வதற்காக பல கதைகளையும், இலக்கியங்களையும் உருவாக்கினர். புகழ் அடைந்த சிலர், மற்ற நாடுகளிலும் சென்று தங்கள் கருத்துக்களைப் பரப்பினர்.  ஏற்கனவே இருந்த கறிபிதங்களுடன் புதிய கருத்துக்களும் சேர்ந்து ஏகப்பட்ட குழப்பங்களும் ஏற்பட்டன.  எல்லாக் கருத்துக்களும் வாய் வழியாகவே கற்பிக்கப்பட்டதால், அவரவர்,  அவரவர் நலத்துக்கு ஏற்றவாறு குட்டையைக் குழப்பிக் கொண்டிருந்தனர். அறிந்தவர்கள் குறைவாகவும், அறியாதவர்கள் அதிகமாகவும் இருந்த சூழ்நிலையில் சிலர் தங்கள் சுயநலத்தையும் உட்செலுத்தினர். (விரிவாக வேறு கட்டத்தில்).

இப்படி இருந்த நிலையில் அந்நியர் படையெடுப்புகள் நிகழ்ந்தன. மொகலாயர் காலத்தில் , இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் , மொழி, பண்பாட்டில் வேறுபாடு இருந்தாலும், ஒரே நாடாக இணைந்துகொண்டன. அதற்குப் பின் வந்த ஆங்கிலேயர்கள், இந்த நாட்டிற்கு ஒரு பெயரையும் கொடுத்து, தாங்கள் ஆட்சி செய்வதற்கு வசதியாக அனைத்துப் பழக்கவழக்கங்களையும் இந்து என்ற ஒரே பரிமாணமாக அடையாளப்படுத்தினர்.

எனவே இந்தியா என்பதும், இந்து என்பதும், ஆங்கிலேயன் என்ற வண்டு உருட்டிய ஒரு மண் உருண்டை என்பதே உண்மை.

அதனால்தான் இன்று இந்து என்று அறியப்படுபவர்களை மதம் என்ற பெயரால் எந்தக் காரியத்திலும் ஒன்று சேர்க்க இயலாது.  அந்தக் காரியம் நல்லதாக இருந்தாலும் அதே நிலைதான்.

இந்த உண்மையை திறந்த மனதுடன் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுதான் அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவெடுக்கவேண்டும். இந்த உண்மையை இன்னும் உணராத [அல்லது உணர விரும்பாத], ‘தான் பெரியவன்’ , ‘தன் இனம் மட்டுமே உயர்ந்தது’ என்ற எண்ணங்களுடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்தால் எந்த நன்மையும் இந்து மதத்துக்கு விளையப்போவதில்லை. செக்குமாடு போல சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

[தொடரும்]

விஷ்ணுவின் அவதாரங்களும் விபரீதமான சில உண்மைகளும்.

திரு எம்பாவைமறைக்கப்பட்டமாணிக்கம் – 2

முன்பகுதி: திரு எம்பாவைமறைக்கப்பட்டமாணிக்கம் – 1

விஷ்ணுவின் அவதாரங்களும் விபரீதமான சில உண்மைகளும்.

1. மச்ச அவதாரம் & கூர்ம அவதாரம் – மனுவைக் காக்க – நால் வருணத்தைக் காக்க. [கூர்ம புராணம்தான் ‘நால்வருண’த்தின் கடமைகளைப் பற்றிப் பேசுகிறது].
2. கிருஷ்ணனின் பன்றி அவதாரத்தால் கொல்லப்பட்ட ஹிரண்யாக்சனும், நரசிம்ம அவதாரத்தால் கொல்லப்பட்ட ஹிரண்யகசிப்பும் – பிரம்மனின் அருள் பெற்ற சிவ பக்தர்கள்.(பார்க்க படம்-1: திருநீறு இட்டிருக்கும் சிவபக்தனான ஹிரண்யனை, நாமமிட்ட நரசிம்மன் கொல்லும் காட்சி),
ஹிரண்யன்

திருநீறு இட்டிருக்கும் சிவபக்தனான ஹிரண்யனை, நாமமிட்ட நரசிம்மன் கொல்லும் காட்சி

படம்-2 : சிவபக்தனான ஹிரண்யாக்சன், பன்றி அவதாரத்துடன் போரிடும் காட்சி

சிவபக்தனான ஹிரண்யாக்சன்,  பன்றி அவதாரத்துடன் போரிடும்  காட்சி

சிவபக்தனான ஹிரண்யாக்சன், பன்றி அவதாரத்துடன் போரிடும் காட்சி

3. வாமன அவதாரத்தில் கொல்லப்பட்ட மகாபலி ஒரு சிவபக்தன் என்று சொல்கிறது கந்த புராணம். (பார்க்க படம்:3)

mahabali

மகாபலி

king-mahabali

மகாபலி

4. பரசுராம அவதாரம் என்பது சத்திரியர்களை நசுக்கி, பிராமணர்களின் மேலாண்மையை நிலை நிறுத்துவதற்காக உருவான ஒன்று. பரசுராமனால் கைகளும் தலையும் வெட்டப்பட்ட ‘கார்தவீர்ய அர்ஜுனா’ வழிபட்ட கடவுள் சிவனின் அம்சமாகச் சொல்லப்படும் ‘தத்தாத்ரேயா’ (யோக வழிமுறையின் ஆதி குரு) ஆவார். எனவே கார்தவீர்யனும் சைவன். (பார்க்க படம்-4:)

திருநீறு இட்டிருக்கும் சிவபக்தனான கார்தவீர்ய அர்ஜுனன்

திருநீறு இட்டிருக்கும் சிவபக்தனான கார்தவீர்ய அர்ஜுனன்

5. ராமனின் எதிரியாகக் காட்டப்படும் இராவணன் ஒரு சைவன் என்பது அனைவரும் அறிந்ததே.

படம்-5: இராவணன்

படம்-5: இராவணன்

 

6. கிருஷ்ணனின் எதிரியான கம்சன் சிவனின் ஒரு வடிவமான கால பைரவரின் பக்தன். (பார்க்க, படங்கள் 6,7,8)

kamsa2

படம்-6: கம்சன்

Kamsa1

படம்-7: கம்சன்

kamsa-iskcon

படம்-8: கம்சன்

                       

மேலும், தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் எல்லாப் புராணக் கதைகளின் தொடர்களில் ‘அசுரர்கள்’ என்று காட்டப்படுபவர்கள் அனைவரும் திருநீறு அணிந்தவர்களாக இருப்பார்கள்.

ஆக, ‘பகவான்’ கிருஷ்ணனின் எதிரிகள் எல்லோரும் சைவர்கள் / பிரம்மனை வழிபட்டவர்கள் என்பது தெளிவாகிறது, எனவே, இந்து மதத்தில் இருக்கும் பல இலக்கியங்களில் காட்டப்படுவது தேவ – அசுரப் போராட்டம் அல்ல என்பதும், அது இரு வழிபாட்டு நம்பிக்கைகளுக்கு இடையிலான போர் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெளிவாகத் தெரிகிறது.

அந்த வெறுப்பும் , வேறுபாட்டு உணர்ச்சியும் இன்றைய அளவிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நான் சந்தித்த, நான் பழகிய வைணவர்களின் போக்கில் இருந்து , அவர்கள் சைவத்தை சமமாக மதிக்காமல் மிதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உணர முடிந்தது. எனவே வைணவர்கள் சிவன் கோயில்களைத் தீண்டப்படாத இடமாக நினைப்பதும், சைவ நூல்களை மூடி மறைப்பதிலும் வியப்பேதுமில்லை. இதனால்தான் திருவெம்பாவை அனைவராலும் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.

இப்படியாக அதிகம் பயன்படுத்தப்படாமல் மறைக்கப்பட்ட திருவெம்பாவை நூலைப்பற்றியும், திருப்பாவை, திருவெம்பாவை இரண்டுக்குமான அடிப்படை வேறுபாடு என்ன என்பதையும் அடுத்த பகுதியில் காண்போம்.

[தொடரும்]

திரு எம்பாவை – மறைக்கப்பட்ட மாணிக்கம் -1

திரு எம்பாவை – மறைக்கப்பட்ட மாணிக்கம்

நான் சிறு வயதில் புத்தகங்களில் படிக்கும்போது, ‘திருப்பாவை – திருவெம்பாவை’  என்று இரண்டு படைப்புக்களின் பெயர்களையும் சேர்த்தேதான் கேட்டிருக்கிறேன் – படித்திருக்கிறேன். ஆனால் படைப்பை நேரடியாகத் தேடியபோதும் , ஒவ்வொரு ஆண்டும்  மார்கழி மாதம் நெருங்கும்போதும், திருப்பாவைப் பாடல்கள் எல்லாவகை ஊடகங்களிலும் வெளியிடப்படும். ஆனால் திருவெம்பாவை காணக் கிடைக்காது.  இந்தப் பாராமுகம் ஏன் என்று வெகு காலமாக நான் வியந்திருக்கிறேன். ஆன்மீகம் / பக்திமார்க்கம் இவற்றில் அதிகம் தொடர்பும் ஆர்வமும் இல்லாமல் இருந்ததால் இந்த விஷயத்தை நான் ஆராயாமல் விட்டுவிட்டேன்.

சமீபத்தில் ஆன்மீகம் , இந்து மதம் குறித்து அறியப் புகுந்தபோதுதான், ஊடகங்களுக்கு ‘மதம்’ எப்படிப் பிடித்திருக்கிறது என்ற உண்மையை விளக்கமாக அறிய முடிந்தது. ‘நாம் எல்லோரும் இந்துக்கள்’ என்று கூறுவது மெருகூட்டி விற்பனை செய்யும் ஒரு தந்திரம் என்பதும் , இந்தத் தந்திரத்தின் அவசியம் என்ன என்பதைப்பற்றியும் ஆராய்ந்தபோது  ‘ நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன், இருவரும் ஊதி ஊதித் தின்னலாம்’  என்ற கோட்பாடுதான் தமிழ்நாட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்பதை அறிய முடிந்தது.

இந்த உள் உண்மைகளை அறிந்திருந்தபோதும் , யாரும் வெளிப்படையாக இதனைப் பற்றி எழுதவோ பேசவோ இல்லை.  பெரியார் என்ற பொது எதிரிக்கு பயந்து , எங்கே உண்மைகளை வெளியிட்டால், இருப்புக்கும் இடைஞ்சல் வருமோ என்ற பயத்தில், உள்ளே அடித்துக் கொண்டு வெளியில் வரும்போது கைகோர்த்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அரசியல்வாதிகள் மாதிரி ஆன்மீகவாதிகள் அமைதி காத்து வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

எல்லோரும் இந்து என்று சொல்லும்போது கடவுள்களுக்கு இடையிலும் ஏன் ஏற்றத் தாழ்வுகள் என்ற என் கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை.  திருநீறு இட்டவரும், திருமண் இட்டவரும்  எல்லாக் கோவில்களுக்கும் போகிறார்களா? போவதில்லை. ஏன்?

‘எல்லாக் கடவுள்களும் ஒன்றுதான், மக்களின் வசதிக்காக பல வடிவங்களில் வழிபாடு நடக்கிறது’ என்று வியாக்கியானம் செய்யும் அதே ஆள்தான் விடாப்பிடியாக வேறுபாட்டையும் கடைப்பிடிக்கிறார் என்ற உண்மையைப் பார்க்கும்போது எத்தனை தூரம் இந்த நோய் அழுகிப் போயிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

‘அப்படியெல்லாம் இல்லை, உனக்குத்தான் பார்வைக்கோளாறு’ என்று சொல்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள், நீங்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு, எல்லா ஒலி/ஒளி/பதிப்பு ஊடகங்களையும் ஆழ்ந்த விழிப்புணர்வோடு கவனியுங்கள்.  முக்கியமாக மார்கழி மாதத்தில் திருப்பாவை போலவே, திருவெம்பாவையும் எந்த பொது ஊடகத்திலாவது பேசப்படுகிறதா என்று பார்த்து விட்டுப் பிறகு வாருங்கள், பேசலாம்.

இந்த நிலையில், கீழ்க்கண்ட என் கேள்விகள் விடையில்லாமல் விழுந்து கிடக்கின்றன.

  1. ‘அரியும் அரனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு’  என்று கதை பேசலாம், ஆனால் நடைமுறையில் இது கடைப்பிடிக்கப் படுவதில்லை, ஏன்?
  2. எடுத்ததற்கெல்லாம் ‘பகவான் கிருஷ்ணன்’, ‘பகவத் கீதை’ என்றே மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு,  தமிழிலே கிடைக்கும் இத்தனை பக்தி இலக்கியங்கள் கண்ணில் தெரிவதில்லை ஏன்?
  3. பார்த்தனின் சாரதியைப் பற்றி மட்டும் பேசுகிற ஆள், பரமேசுவரனைப் பற்றிப் பேச மறப்பது ஏன்?
  4. எல்லா ஊடகங்களிலும் வைணவமும், வைணவக் கோவில்களும், வழிபாடுகளும் முன்னிறுத்தப்படுவது ஏன்?
  5. அம்பாளை ஏற்றுக்கொள்ளும் சிலர் அம்பாளின் கணவரை மறந்து போவது ஏன்?

[தொடரும்]