Category Archives: அர்த்தமுள்ள இந்து மதம்

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -4

முன் பகுதிகளைப் படிக்க:

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -1

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -2

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -3

இந்து மதம் குறித்தும், ஆன்மீக வழிமுறைகள் குறித்தும் இணையத்தில் நிறையப்பேர் எழுதுகிறார்கள். இவற்றில் முக்காவாசிப் பதிவுகள், வேறு யாரோ என்றோ எதற்காகவோ சொன்னதை, அப்படியே சிறிதும் ஆராயாமல், அப்படியே வாந்தி எடுப்பதாகத்தான் உள்ளன.  இங்கெ குழு மனப்பான்மையும் கொடிகட்டிப் பறக்கிறது. இவர்கள் தங்களுக்குள் மாற்றி மாற்றி முதுகு சொறிந்து கொள்கிறார்கள். உண்மை என்ன என்பதைப் பற்றி அறிவதற்கு எந்தவிதமான முயற்சியும் செய்வதில்லை.

‘அவரே சொல்லிட்டார்’ என்பதால் எல்லாம் உண்மையாகிவிடாது.  ‘அவர்’ தானும் தன் சுற்றமும் பிழைப்பதற்காக பல உண்மைகளைத் திரித்து, அதை மதக் கோட்பாடாக மாற்றி முதுகில் மிளகாய் அரைத்து வந்தது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

எனவே இந்து மதம் / சமய வழிமுறைகளைப் பற்றி எழுதுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  இன்றைய காலகட்டத்தில்  மக்களுக்கு ஆன்மீகத்தேடல் மிகுந்து இருக்கிறது. என்பவெ இப்போது எழுத வேண்டிய தேவை இருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். ஆனால் , பக்தியின் மேலீட்டாலோ,  தன் சாதியின் நலன்களை முன்னிறுத்திக் கொள்வதற்காகவோ, வரலாற்றைத் திரிக்கும் போக்கு வேண்டாம். ஏனெனில் நல்ல சுவையான உணவை உண்ணும்போது, திடீரென பல்லில் சிக்கும் ஒரு கல், முழு உணவையும் சந்தேகிக்க வைக்கும். தன் சுயநலத்துக்காக உள்ளிடும் ஒரு பொய் பல உண்மைகளைச் சந்தேகத்திற்கு உள்ளாக்கும்.

புராணங்களோ, உபநிஷத்துகளோ, ஆரம்பத்தில் நல்ல கருத்துக்களைச் சொல்வதற்காக வந்திருக்கலாம். மறுப்பதற்கில்லை. ஆனால், தங்களுடைய சுயநலத்துக்காகக் காலப்போக்கில் அவற்றை பொது மக்களிடம் இருந்து பிரித்து, மறைத்து, அதில் ஏகப்பட்ட இடைச்செருகல்களை உட்புகுத்தி, ‘இதிலே இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது’  என்று வெளியிடும்போது  அதன் பின்புலத்தில் இயங்கும் அரசியல் வெளிப்படுகிறது.

பலபேரின் பதிவுகளில் வெற்றுக்கூச்சல்  காதைப் பிளக்கிறது.  செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், வருந்தாமல், திரும்பத் திரும்ப  தவறை நியாயப்படுத்துவதிலேயே காலம் தள்ளுகிறார்கள்.  அதிகம் கேள்வி கேட்டால், நாத்திகன் என்றோ தி,மு.க அனுதாபி என்றோ முத்திரை குத்தி வெளியில் தள்ளுகிறார்கள். சுய விமர்சனம் என்பது கிஞ்சித்தும் இல்லை.

‘நாற்றம் வீசுகிறது’ என்று சொன்னால், உனக்கு மூக்கிலே கோளாறு என்று சொல்வார்கள்.  ‘அரசனின் புதிய ஆடைகள்’ போல , அங்கே கொலுவீற்றிருக்கும் சில துதிபாடிகள் , உனக்குத்தான் ஞானம் போதாது என்பது போல நம்மீது பாய்வார்கள்.

இந்த ஆர்ப்பாட்டங்களைத் தாண்டி, முழுமையான அறிவை அடைவதுதான் நம் இலக்கு.  இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

[முடிந்தது]

 

மச்சி இன்னொரு குவார்ட்டர் சொல்லேன் ….

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -3

முன்பகுதிகளைப் படிக்க:

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -1 

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -2

ஒரு தமிழ் எழுத்தாளரைப் பற்றி நான் படித்த ஒரு விமர்சனம்  நினைவுக்கு வருகிறது. அவர் குடிப்பழக்கம் உள்ளவர்.  “அவருடைய கொள்கை என்று எதுவும் நிரந்தரம் கிடையாது.  அவருக்குக் கடைசி கிளாஸ் மதுவை யார் வாங்கிக் கொடுக்கிறாரோ அவருடைய கொள்கைதான் இந்த எழுத்தாளரின் கொள்கையும் “  என்பதுதான் அந்த விமர்சனம்.

இந்தப் புத்தகத்தின் கருத்துக்களைப் படிக்கும்போதும்  அந்த விமர்சனம் எனக்கு நினைவிற்கு வருகிறது. புத்தகத்துக்கு யார் அணிந்துரையும் ஆசியும் தருகிறார்களோ அவர்களது கருத்துத்தான் தனது கருத்தும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் கண்ணதாசன்.

எழுத்தாளர்களை வளைப்பதில், மவுனம் அடையச் செய்வதில், அடிபணியச் செய்வதில் ‘காந்த’த்தையே துருப்பிடித்த இரும்பாக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம் சிக்கிக் கொண்ட கண்ணதாசனை நினைத்து பரிதாபப்பட மட்டுமே முடிகிறது.

‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற நல்ல தலைப்பை வைத்து எத்தனையோ மறைக்கப்பட்ட / புதைக்கப்பட்ட விஷயங்களைப் பற்றி அவர் எழுதி இருக்கலாம், அதை விட்டுவிட்டு, யாரிடமிருந்து மதத்துக்குச் சுதந்திரம் தேவைப்படுகிறதோ அவர்கள் காலிலேயே விழுந்து பேனாவுக்கு மை வாங்கி எழுதினால், இப்படித்தான் நடக்கும்.

‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற அர்த்தமில்லாத நூலுக்கு அவருடைய திரைப்படப் பாடல்கள் எவ்வளவோ மேல்.

வள்ளுவனோ, பாரதியோ, பாரதிதாசனோ போற்றப்படுவது அவர்களது சுதந்திரமான கருத்துக்களால்தான். எழுத்தாளனுக்குச் சுதந்திரம் முக்கியம். சுதந்திரம் இல்லாமல் எழுதுபவன் எழுத்தாளன் இல்லை, அவன் வெறும் எழுத்தன்.

[தொடரும்]

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்….

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -2

முன்பகுதி:  அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -1

தனது நூலின் 7-ஆம் பாகத்தில் [ ‘சுகமான சிந்தனைகள்’  – அத்தியாயம்-10, பக்கம் 78-80]  ஒரு ‘மா’மனிதரைப் பற்றி புகழோ புகழ் என்று புகழ்கிறார் கண்ணதாசன்.  ஆனால் உண்மையோ வேறுமாதிரி இருக்கிறது.

இனி அவர் சொல்லும் புகழுரைகள் – மிகவும் சுருக்கமாக. [ஆவலைத் தூண்டும் பொருட்டு, அடையாளம் காட்டக்கூடிய வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அடையாளம் கடைசிச் சுட்டியில் தரப்பட்டுள்ளது]

/*——–

ஆகவே, இந்தக் கட்டுரையின் தலை நாயகனாக   ——- ஐ நான் எடுத்துக் கொள்கிறேன்.

இயற்கையான சிவப்புக் கோடுகளின்றிச் செயற்கையாகச் சிவக்காத அழகிய பிரகாசமாக கண்கள்.

உள்ளத்தை ஊடுருவும் தீட்சண்யமான பார்வை.

ஜோதிப் பிழம்பு போன்ற முகம்.

கறை படாத மருவில்லாத மேனி.

ஒரு காவி ஆடையிலேயே அத்தனை அழகும் பொங்கிப் பொலியும் அற்புத வடிவம்.

கறந்த பால் கறந்தபடி வைக்கப் பெற்ற தூய்மையான உள்ளம்.

இளம் பருவத்திலேயே முதிர்ந்த விவேகம்.

பருவ கால நிலைகளை மிகச் சுலபமாக வென்று விட்ட மனோதிடம்.

கங்கை பிரவாகம் போல் பொங்கிப் பொலியும் கருத்துக் கோவைகள்.

கல்லிலும், முள்ளிலும் நடந்து பழகிய காலணி இல்லாத கால்கள்.

சந்தியா காலத்துப் புஷ்பங்களைப் போல், தான் மலர்ந்திருப்பது மற்றவர்களுக்காகவே என்னும் தியாக சீலம்.

வேம்பின் கசப்பும், சர்க்கரையின் இனிப்பும் நாக்குக்கு ஒன்றே போல் தோன்றும் பக்குவம். வள்ளுவன் கூறிய துறவறத்திற்கு ஒரு தெள்ளிய இலக்கணம்.

இந்து தர்மத்தை நிலை நாட்டிய இந்தப் பீடமே, இந்தியாவில் உள்ள மத பீடங்களில் எல்லாம் தூய்மையானது என்பதை நிரூபித்திருக்கிறது.

அரசியல் கலப்பற்ற சுத்தமான பீடம் அது என்பதாலே தான், அரசு பீடமே இறங்கி வந்து வணங்கியது.

இந்து தர்மத்தின் துறவிகள் மீது இழிமொழிகளும், பழிமொழிகளும் ஏராளமாக வந்து விழுந்திருக்கின்றன.

அவற்றிற்குக் காரணமானோர் சிலரும் இருந்தார்கள்; இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுத்து விடமுடியாது.

ஆனால், சனீஸ்வரனைப் பார்த்த கண்ணால் பரமேஸ்வரனைப் பார்க்கக் கூடாது.

`இரண்டும் ஈஸ்வரன் தானேஎன்று கேட்கக்கூடாது.

பக்தி மார்க்கத்தில் தம்மை மறந்த மெய் ஞானிகள் பலருண்டு.

அவர்களிலே வணங்கத்தக்க இருவரிலே ஒருவர் ————–.

பல்லாயிரம் ஆண்டுகளாக அழிவில்லாமல் இயங்கும் ஒரு தருமத்திற்கு அவ்வப்போது விளக்கேற்றி வைக்கும் ஞானச் சுடர்களில் ஒருவர் ——————–.

ஜாதியின் பெயரால் அவரைப் புறக்கணிக்க முடியாது. அவர் ஜாதிகளைக் கடந்தவர். நீதியின் பெயரால் அவரை நெருங்கினால், அவர் நிர்மலமான சித்திரை வானம்.

சுயதர்மத்தை மனிதனுக்குப் போதிப்பதற்காகத் தனக்கென்று ஒரு தர்மத்தை வகுத்துக் கொண்டவர்.

தான் முழுமையாக நம்பும் மதத்தின் மீது எந்தத் தாக்குதல்கள் வீசப்பட்டாலும், இறைவனைப் போல அவற்றைத் தாங்கிக்கொண்டு தனது தர்மங்களை ஒழுங்கு நியதிகளோடு செய்து வருபவர்.

இத்தகைய பக்குவம் பெற்ற, புடம் போட்டு எடுக்கப்பட்ட தங்கங்களால் தான், இந்துமதம் தலை நிமிர்ந்து நிற்கிறது. (அய்யோ.. அய்யோ…)

இந்தியாவில் எல்லா மதங்களுக்குமே சம அந்தஸ்து உண்டு என்றாலும், இந்தியாவின் அஸ்திவாரம் இந்து தர்மமே. அந்த அஸ்திவாரத்திற்குப் பலமும் தெளிவான வடிவமும் கொடுத்தவர்கள் ஆதிசங்கரரும், ராமானுஜரும்.

அந்தப் பாரம்பரியத்தில் ஒரு தெய்விக தீபம்————————-.

அவர் இந்து தர்மத்தின் ஜீவசக்தி. நடமாடும் தெய்வ வடிவம், வேத ஆகமங்களின் பிரதிபலிப்பு, காஞ்சி காமாட்சியின் இன்றைய தலைமகன்.

இந்த தர்ம பூமி மேலும் தழைத்தோங்க அந்த ஞான குருவே வழிகாட்டி.

————-

*/

படித்ததும் புல்லரிக்கிறதா?

சரி ‘இப்படி’ இருப்பதாகக் கண்ணதாசனால் வர்ணிக்கப்பட்ட அந்த மனிதர் ‘எப்படி’ ஆகி விட்டார்?

அதனைத் தெரிந்து கொள்ளக் கீழ்க்கண்ட சுட்டிகள் உங்களுக்கு உதவக்கூடும்.

http://suunapaana.blogspot.in/2009/08/blog-post.html

http://tamil.oneindia.in/news/2004/11/30/anuradha.html

கூகிளில் தேடினால் உங்களுக்கு ‘எல்லா’ விவரமும் கிடைக்கும்.

[தொடரும்]

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும்

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும்

கண்ணதாசன் எழுதிய ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலை நான் சிறு வயதில் படித்திருக்கிறேன். அதைத் திரும்பப் படிக்கும் ஒரு வாய்ப்பு பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பர் மூலம் வாய்த்தது. சிறு வயதில் படித்தபோது உண்டான ஒரு பிரமிப்பு இந்த முறை உண்டாக வில்லை. மாற்றாகப் பல கேள்விகள் எழுந்தன. பல பகுதிகளைப் படிக்கும்போது, தன்னுடைய சுய புராணத்தைப் பாடுவதற்கும், யாரோ சிலருடைய வில்லுக்கு அம்பாக மாறி யார் மீதோ கணை தொடுப்பதற்காகவுமே அவர் இதை எழுதியிருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

இந்த நூலைப் படிக்கும்போது ஏற்பட்ட எல்லா நெருடல்களையும் இங்கு எழுத முடியாது என்றாலும், சில கருத்துக்களுக்கான எதிர் வினைகளை இங்கு வைத்தே ஆக வேண்டும் என்றே நினைக்கிறேன். ஏனெனில் ‘கண்ணதாசனே சொல்லி இருக்கிறார்’ என்ற பரிந்துரையைக் கைக்கொண்டு இணையத்தில் சிலர் இந்து மத வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தான் விளம்பர மாடலாக நடித்த சாக்லெட்டில் புழு இருந்ததைப் பற்றி எப்படி ஒரு இந்தி நடிகருக்குக் கவலை இல்லையோ, அப்படியே தான் அவிழ்த்து விட்ட புழு(ளுகு)களைப் பற்றியும் கண்ணதாசன் கவலைப்படவில்லை. அங்கேயும் பணத்துக்கு விளம்பர மாடல். இங்கேயும் பணத்துக்காக இலக்கியச் சேவை!

எனவே அந்த நூலின் சில பகுதிகள் மீதான விமர்சனம் மட்டும் இங்கே.

எதிர்வினை-1-முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு:

கண்ணதாசன், தனது நூலின் இரண்டாம் பாகத்தில் , எட்டாவது தலைப்பில் ‘வள்ளுவர் ஓர் இந்து’ என்று வரிந்து கட்டிக் கொண்டு எழுதியிருக்கிறார்.

வள்ளுவர், திருக்குறள் நூலை அரங்கேற்ற இயலாமல் முட்டுக்கட்டைகள் பல போடப்பட்டன என்பதும், அவர் சாதி அடிப்படையில் பல நிந்தனைகளுக்கு ஆளானார் என்றும் , அவர் சாதி/வருண பேதங்களை எதிர்த்தவர் என்பதும் நமக்குக் கிடைக்கின்ற செய்திகள். அவரை அன்று வளர விடாமல் செய்த கூட்டம், அவர் எழுதிய நூல் உலகப் புகழ் பெற்ற பின்னால், அவருக்குச் சொந்தம் கொண்டாட எந்தவித வெட்கமும் இல்லாமல் திரிகிறது. பாரதி வாழ்ந்த காலத்தில் வசை பாடிய கும்பல், செத்த பின்பு அவரைத் தங்கள் ஆள் என்று சொந்தம் கொண்டாடியதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வள்ளுவர் வாழ்ந்த காலத்தையும், அவரது நூலில் இருந்த கருத்துக்களையும் வைத்து அவர் சமண மதத்தின் மீது பற்றுடையவர் என்று ஏற்கனவே நிரூபித்தாகி விட்டது. இன்றைக்கு சமண மதம் அதிகாரத்துடன் இல்லை என்பதாலும், சமண மதத்தை, இந்து மதம் தனக்குள் உள் வாங்கிக் கொண்டது என்பதாலும், சமண மத நூல்கள் அனைத்தும் இந்து மத நூல்களே என்று நிறுவி விடத் துடிக்கிறது ஒரு கூட்டம். விட்டால் சிலப்பதிகாரம், மணிமேகலை கூட இந்து மத நூல்கள்தான் என்றுகூட நாளைக் கதை விடக்கூடும். இந்த மாதிரி வேலைக்குக் கண்ணதாசன் துணைப் போவதுதான் வேடிக்கை.

வள்ளுவன் இந்து என்பதை நிரூபிப்பதற்காக கண்ணதாசன் திருக்குறளில் இருந்து ‘இறைவன்’, ‘கடவுள்’, ‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ போன்ற சில வார்த்தைகளை எடுத்துக் கொண்டு விளையாடுகிறார்.

இது மட்டும் அல்லாமல், தனது நூலின் 3-ஆம் பகுதியில், (அத்தியாயம்-9, பக்கம்-64)  “மகா நிர்வாணத்தை, இந்துத் தத்துவங்களில் இருந்தே பவுத்தம் எடுத்துக் கொண்டது” என்றொரு புருடா விடுகிறார்.

நாம் இங்கு உணர வேண்டியது – இந்து மதம் என்றொரு தனி மதம் இருக்கவேயில்லை. மக்கள் தங்கள் புரிதலுக்கும், பண்பாட்டுக்கும் இயற்கைச் சூழலுக்கும் தக்கவாறு பல்வேறு நம்பிக்கைகளை, வழிபாட்டு முறைகளைக் கைக்கொண்டிருந்தனர். நீத்தாரை வழிபடுதல், இயற்கையை வழிபடுதல் பெரிதும் பின்பற்றப்பட்டன.

பிற்காலத்தில் தன்னை உணர்ந்த (உணர்ந்ததாகச் சொல்லிக்கொண்ட) சிலர் இங்கும் அங்குமாய்ச் சிதறிக்கிடந்த பல நம்பிக்கைகளை, வழிமுறைகளை ஒன்று சேர்த்து, அதனை ஒரு மதமாகக் கட்டமைத்தனர் என்பதே உண்மை.

இந்தக் கட்டமைப்புக்கான அவசியம் ஏன் ஏற்பட்டது? அந்நியர்களின் படையெடுப்பால் மக்கள் தங்கள் மதத்தை மாற்றாதிருக்கும் பொருட்டும், அந்நியர்களுக்கு எதிராக மக்களை அணி சேர்க்கும் நோக்கத்துடனும் இது ஒரு மதமாகக் கட்டமைக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் புத்தம், சமணம் போன்று திரும்பவும் புதிய மதங்கள் இங்கு தோன்றுவதைத் தடுப்பதும் இதற்கான அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும்.

அவ்வாறு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த கோட்பாடுகளை ஒன்று சேர்த்து உருவாக்கும்போது, ஏற்கனவே உருவாகியிருந்த மாற்றுக் கோட்பாடுகளும் உள்வாங்கிக் கொள்ளப்பட்டன. இந்த உள்வாங்கும் (கபளீகரம் செய்யும்) தன்மையால்தான், இங்கே உருவான எல்லா மதங்களும் காணாமல் போயின.

எதிரிக்குப் பெண்ணைக் கட்டிவைத்து உறவாக்கிக் கொள்வது காலகாலமாய் , இந்தியாவில் இருந்த அரசர்களிடையே நடந்து வந்த தந்திரம்தான். அந்த வழிமுறை இந்து மதக் கட்டமைப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.

இந்து மதமானது சமண, புத்த மதங்களை உள்வாங்கும்போது, அதில் பயன்பாட்டில் இருந்த வார்த்தைகள், கடவுள் பெயர்கள் ஆகியவையும் உள்வாங்கப்பட்டன. சிவனின் பெயர்களாகச் சொல்லப்படும் பல வார்த்தைகள் ஏற்கனவே சமண மதத்தில் பயன்பாட்டில் இருந்தவையே. (எனக்கும் ஆள் பலம், படை பலம் இருந்தால், சிவனையே சமண சமயக்கடவுள் என்றொரு நூல் எழுதலாம் என்றொரு ஐடியா இருக்கிறது… )

IT துறையில் இருப்பவர்களுக்குத் தெரிந்த விஷயம் ஒன்று. COMPAQ என்றொரு வன்பொருள் நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனத்தை HP என்ற மற்ற நிறுவனம் வாங்கித் தனக்குள் சேர்த்துக் கொண்டது. அதுவரை COMPAQ என்ற பெயரில் வந்து கொண்டிருந்த பொருட்கள் எல்லாம் HP என்ற பெயரில் வர ஆரம்பித்தன். COMPAQ PROLIANT என்ற பெயரில் SERVER-கள் வந்து கொண்டிருந்தன. அவை பின்னால் HP PROLIANT என்ற பெயரில் வர ஆரம்பித்தன.

ஒரு 500 வருடம் கழித்து, PROLIANT என்ற வார்த்தையை வைத்து , அந்தப் பொருள் HP-க்குச் சொந்தமானது என்றோ, அதனை HP-தான் உருவாக்கியது என்றோ ஏதோ ஒரு கூட்டம் சொன்னால் அது எவ்வளவு பெரிய கூமுட்டைத்தனம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

இந்தக் காரியத்தை, சினிமாவில் பாட்டெழுதியதால் புகழ் பெற்ற கண்ணதாசன், தனக்கு சம்பந்தமில்லாத இன்னொரு துறைக்குள் புகுந்து செய்கிறார். இல்லை –இல்லை அவர் யாரோ ஒருவருடைய தூண்டுதலினால் அந்தக் காரியத்தைச் செய்கிறார். யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவருடைய நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரையைப் படித்தால் விளங்கும் .

கேரளாவில் கிறித்துவர்கள் கடவுளை ஈஸ்வரன் என்றே அழைக்கிறார்கள். 90% சர்ச்சுகளில், கோவில்களில் இருப்பது போலவே கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது. மேரி மாதா அல்லது ஏசுவின் சிலைக்கு சிலர் விளக்கேற்றியும் வழிபடுகிறார்கள். (எர்ணாகுளத்தில் கலூர் என்றொரு இடத்தில் செயின்ட் ஆண்டனி சர்ச் உள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை அன்று சென்று பார்த்தால் தெரியும்).

ஒருமுறை என் மலையாள நண்பர் ஒருவர் ‘SPIRITUAL’ என்ற தலைப்பில் ஒரு ஆடியோ சி.டி கொண்டுவந்தார். அதனைக்கேட்கும்போது அது இந்து மதச் சொற்பொழிவு போன்றே தோன்றியது. ‘ஈஸ்வரனின்’ கருணையைப் பற்றி அடிக்கடி சொன்னார்கள். இறுதியில் ‘ஆமென்’ என்று சொல்லி முடிந்தபோதுதான், அது கிறித்துவ மதச் சொற்பொழிவு என்றே கண்டுபிடிக்க முடிந்தது. ‘ஈஸ்வரன்’ என்ற வார்த்தையைக் கொண்டு, கண்ணதாசனின் லாஜிக் படி அதை இந்து மதம் என்று நாம் கூற முடியுமா?

தமிழ், பாலி போன்ற மொழிகளில் இருந்து ஏராளமான சொற்களை உள்வாங்கி ‘உருவாக்கப்பட்ட’ சமற்கிருதம், பின்னாளில் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற காரணத்தால், மற்ற மொழிகளுக்கு மூலமொழி என்று எவ்வாறு புனைந்து உரைக்கப்பட்டதோ, அதற்கு என்ன நோக்கமோ அதே முறையில்தான் வள்ளுவர் ஓர் இந்து என்ற புனைகதையும், அதன் நோக்கமும் ஆகும்.

தமிழ்நாட்டின் சாபக்கேடு என்னவெனில், தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதுபோல, இங்கு எழுதத் தெரிந்தவனெல்லாம் ஆராய்ச்சியாளன் ஆகி விடுகிறான். ஏற்கனவே இந்து மதத்தில் நிறைய அழுகிப்போய் நாற்றம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதைச் சரி செய்வதுதான் உண்மையான தொண்டாக இருக்க முடியும். திருக்குறளைப் படித்து அதில் சொல்லப்பட்ட அறநெறிகளைப் பயன்பாட்டில் கொண்டு வருவதன்மூலம் அதனைச் சாதிக்க முடியும். அதனை விட்டுவிட்டு, அந்த நாற்றத்தைப் புனுகு பூசி மறைத்துக் கொண்டு, வெட்டியாய் வள்ளுவனுக்கு மதச் சாயம் பூசுவது தவறு.

வள்ளுவன், புத்தன், ஏசு, காந்தி போன்றவர்களின் பணியைப் புரிந்து கொள்வதும், மனித இனத்தின் மீது அவர்கள் கொண்ட அன்பை உணர்ந்து போற்றுவதுமே நலம் தரும். மனித நேயம் கொண்டு, மனிதர்களின் கடைத்தேற்றத்துக்காக இயங்கிய  மாமனிதர்களை மதத்துக்குள் இழுப்பது சூரியனைக் குடத்துக்குள் அடக்க முயற்சிப்பது போல வீண் வேலை ஆகும்.

[தொடரும்]