Category Archives: திபெத்

நாயடியேன் பெற்ற நற்பேறு

என் வாழ்க்கையில் சில நல்ல நிகழ்வுகள் , திட்டமிடாமலும் , எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென  நடந்தேறியதுண்டு. அவற்றில் ஒன்று, நேற்று (25-11-2012) நடந்தது.  புத்தரின் மறுபிறவியாகக் கருதப்படும் , திபெத்தியத் தலைவர் அருள்நிறை. தலாய் லாமா அவர்களை நேரில் சந்திக்கும் பேறு எனக்குக் கிடைத்தது.

கொச்சிக்கு வந்திருந்த அவர்  ‘Friends of Tibet  – Foundation for the Well Being’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘ The Art of Happiness’  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அந்தக் கூட்டத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது.  மிக அருகில் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்கும் பேறும்  கிட்டியது.

குழந்தை போன்ற அவரது வெள்ளை மனமும், அவருடைய ஆனந்தமான சிரிப்பும் இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கிறது.

திபெத்தின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதையும், அதனால் ஏற்படக்கூடிய சுற்றுப்புறச் சூழல் விளைவுகள் முழு ஆசியாக் கண்டத்தை  எப்படி பாதிக்கும் என்பதையும் விளக்கினார்.

நல்ல உடல் நலத்திற்கு , மன அமைதி எவ்வளவு முக்கியம் என்பதையும் விளக்கினார்.

ஆன்மீகம் என்றால் உடனே மலை உச்சியில் உட்கார்ந்து கொள்வது என்று மக்கள் நினைப்பது தவறு என்றும், ஆன்மீகத்தின் ஆரம்பப் படி என்பது  தன்னை, தன் வீட்டில் இருப்பவர்களை, தன் தெருவில் இருப்பவர்களை முழு மனதுடன் , தன்னைப் போலவே நினைத்து ஏற்றுக் கொள்வதுதான் என்றும் சொன்னார்.

அவருடைய பேச்சின் முழுமையான ஒலி / ஒளிக் காட்சி கிடைத்தால், இங்கு பகிர்வேன்.

திபெத் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்கும் கவிஞர் / எழுத்தாளர்  ‘டென்சின் சுன்டு’  (Tenzin Tsundue) என்பவரையும் நேரில் கண்டேன். வாய்ப்புக் கிடைத்தால், அவரது எழுத்துக்களை மொழிபெயர்த்து வெளியிடுவேன்.