இந்து மதத்தில் இடைச் செருகல்கள்

இந்து மதத்தில் இடைச் செருகல்கள் :

மனித மனம் எப்போதுமே தான், தன்னுடைய என்ற நிலையிலேயே இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எந்த ஒரு கருத்திலும் தனக்கு விருப்பமான பகுதிகளை அதிகப்படுத்தியும், மாற்றியும் புரிந்து கொள்கிறது.

இந்த இயல்பை உணர்ந்ததால்தான், சாதாரண மனிதனுக்கு ஆன்மீகக் கருத்துக்களைப் புரிய வைப்பதற்காக பலவகையான கதைகள் கட்டமைக்கப்பட்டன. இங்கு கதைகள், இலக்கியம் ஆகியவை, இலக்கை அடைய உதவும் கருவிகள்தான். அவையே இலக்கு ஆகிவிடாது. நாம் ஒரு பேருந்தில் ஏறுகிறோம். பேருந்து மிகவும் வசதியாக இருக்கிறது என்பதற்காக பேருந்தை விட்டு இறங்காமல், அது போகுமிடமெல்லாம் போய்க் கொண்டிருந்தால், இலக்கை அடைய முடியாது.  தில்லிக்குப் போகும் இரயிலில் ஏறி விட்டு ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி நின்று கொண்டிருந்தால், தில்லிக்குப் போக வெகு காலம் ஆகும். எனவே கருவியைக் கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த வகையில், இந்து மதத்திலும் ஏகப்பட்ட இடைச்செருகல்கள் புகுத்தப்பட்டுள்ளன. சில கருத்துக்கள் பக்தியின் மேலீட்டால் புகுத்தப்பட்டுள்ளன் என்று ஏற்றுக் கொள்ளலாம்.  ஆனால்  இடையில் வந்த சிலர், தங்களுடைய பிழைப்பிற்காக, சுய நலத்திற்காக, வாய்ப்புக் கிடைத்த இடங்களிலெல்லாம் வரப்பு வெட்டி வாய்க்கால் நீரைத் தங்கள் வயலுக்குப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள். தங்களைத்தாண்டி கடவுளை யாரும் தரிசனம் செய்யாதிருக்கவும், தங்களைத்தவிர வேறு யாரும் ஞானத்தை உணர்ந்து விடாதிருக்கவும் பல முன்னேற்பாடுகளையும் முட்களையும் பாதையில் போட்டு வைத்திருக்கிறார்கள்.

அவர்களின் சுயநலத்தையும், அவர்கள் செய்த துரோகங்களையும் பட்டியலிட்டால், நாமும் இந்தக் கட்டுரையின் இலக்கைத் தவற விட்டு விடுவோம் என்பதால் அவற்றைப் பின்னொரு நாளில் வேறு கட்டுரையில் அலசுவோம்.

இங்கு, பக்தி மேலீட்டால் நடந்த இடைச்செருகல்களையும், கருத்தை விளக்குவதற்காகச் சொன்ன கதைகள், சொல்ல வந்த கருத்தையே அமுக்கி விட்டு வெறும் புனைவுகளாகப் போன நிகழ்வுகளைப் பற்றியும் ஆராய்வோம்.

  • இந்து மதம் என்பது ஒரு மதம் அல்ல.

இன்று இந்து மதம் என்று குறிப்பிடுகிறோம், நாம் இந்துக்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறோம். ஆனால்  சில  அடிப்படை உண்மைகளை மறந்து விடுகிறோம். இந்து மதம் என்றொரு மதம் யாராலும் தோற்றுவிக்கப்படவில்லை. ஆதி காலத்தில் நாகரீகம் அடைந்த மனிதர்கள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு இடையில் இருந்த அடர்ந்த காடுகள், மலைகள் காரணமாக ஒரு கூட்டத்திற்கும் இன்னொரு கூட்டத்திற்கும் இடையில் தொடர்பு இல்லாமல் இருந்தது.

எப்போது உணவு உற்பத்தியில் தன்னிறைவு ஏற்பட்டதோ அப்போது ஓய்வு நேரமும் அதிகரித்தது. அந்த சமயத்தில் சிலர் தேசாந்திரிகளாக  திரிந்து கொண்டு இருந்தபோது / மற்றும் சிலர் Adventure tourism போன்ற காரியங்களில் ஈடுபட்டதன் மூலமாக ஒரு கூட்டத்திற்கும் இன்னொரு கூட்டத்திற்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது.  இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்ற காலப்பரிமாணம் இங்கு நமக்கு அவசியமில்லை. இந்த தொடர்பு மூலமாக  அவர்களின் வாழ்க்கையில், பண்பாட்டில் , பொருளாதார, தொழில் நிலைகளில் கலப்பு ஏற்பட்டது.

ஆன்மீகம் என்று பார்த்தால், மனிதனுக்குப் படைப்பைப் பற்றியும், படைத்தவனைப் பற்றியுமான ஒரு தேடல் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அவரவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த இயற்கைச் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு அவர்கள் வழிபாடுகளும் இருந்தன. தெற்கில், நீத்தாரைக் கடவுளாக வணங்குதல் இருந்தது. அதனால்தான் குலதெய்வம் என்ற கருத்து / சிறுதெய்வ வழிபாடு தெற்கில் ஆழமாக உள்ளது. வடக்கில் சிறு தெய்வங்கள் இல்லை.

அரசனையே தெய்வமாகப் போற்றி வணங்குதலும் இருந்தது. இதனால்தான் கோ-இல்=கோயில் என்ற இடம் அரசனுக்கும் இறைவனுக்கும் உரித்தான இடமாக இருந்தது. வழிபாட்டு முறைகளும் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒன்றாக இருந்தன.

இப்படியாக வாழ்ந்த கூட்டங்களில் (இனி இவர்களை நாடு என்று சொல்லலாம்) சிலர் தங்களது தீவிரமான தேடலின் பலனாக ஞானம் அடைந்து, அந்த ஞானத்தை மற்றவர்களுக்கும் அறியச் செய்வதற்காக பல கதைகளையும், இலக்கியங்களையும் உருவாக்கினர். புகழ் அடைந்த சிலர், மற்ற நாடுகளிலும் சென்று தங்கள் கருத்துக்களைப் பரப்பினர்.  ஏற்கனவே இருந்த கறிபிதங்களுடன் புதிய கருத்துக்களும் சேர்ந்து ஏகப்பட்ட குழப்பங்களும் ஏற்பட்டன.  எல்லாக் கருத்துக்களும் வாய் வழியாகவே கற்பிக்கப்பட்டதால், அவரவர்,  அவரவர் நலத்துக்கு ஏற்றவாறு குட்டையைக் குழப்பிக் கொண்டிருந்தனர். அறிந்தவர்கள் குறைவாகவும், அறியாதவர்கள் அதிகமாகவும் இருந்த சூழ்நிலையில் சிலர் தங்கள் சுயநலத்தையும் உட்செலுத்தினர். (விரிவாக வேறு கட்டத்தில்).

இப்படி இருந்த நிலையில் அந்நியர் படையெடுப்புகள் நிகழ்ந்தன. மொகலாயர் காலத்தில் , இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் , மொழி, பண்பாட்டில் வேறுபாடு இருந்தாலும், ஒரே நாடாக இணைந்துகொண்டன. அதற்குப் பின் வந்த ஆங்கிலேயர்கள், இந்த நாட்டிற்கு ஒரு பெயரையும் கொடுத்து, தாங்கள் ஆட்சி செய்வதற்கு வசதியாக அனைத்துப் பழக்கவழக்கங்களையும் இந்து என்ற ஒரே பரிமாணமாக அடையாளப்படுத்தினர்.

எனவே இந்தியா என்பதும், இந்து என்பதும், ஆங்கிலேயன் என்ற வண்டு உருட்டிய ஒரு மண் உருண்டை என்பதே உண்மை.

அதனால்தான் இன்று இந்து என்று அறியப்படுபவர்களை மதம் என்ற பெயரால் எந்தக் காரியத்திலும் ஒன்று சேர்க்க இயலாது.  அந்தக் காரியம் நல்லதாக இருந்தாலும் அதே நிலைதான்.

இந்த உண்மையை திறந்த மனதுடன் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுதான் அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவெடுக்கவேண்டும். இந்த உண்மையை இன்னும் உணராத [அல்லது உணர விரும்பாத], ‘தான் பெரியவன்’ , ‘தன் இனம் மட்டுமே உயர்ந்தது’ என்ற எண்ணங்களுடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்தால் எந்த நன்மையும் இந்து மதத்துக்கு விளையப்போவதில்லை. செக்குமாடு போல சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

[தொடரும்]

Leave a comment