திரு எம்பாவை – மறைக்கப்பட்ட மாணிக்கம் -1

திரு எம்பாவை – மறைக்கப்பட்ட மாணிக்கம்

நான் சிறு வயதில் புத்தகங்களில் படிக்கும்போது, ‘திருப்பாவை – திருவெம்பாவை’  என்று இரண்டு படைப்புக்களின் பெயர்களையும் சேர்த்தேதான் கேட்டிருக்கிறேன் – படித்திருக்கிறேன். ஆனால் படைப்பை நேரடியாகத் தேடியபோதும் , ஒவ்வொரு ஆண்டும்  மார்கழி மாதம் நெருங்கும்போதும், திருப்பாவைப் பாடல்கள் எல்லாவகை ஊடகங்களிலும் வெளியிடப்படும். ஆனால் திருவெம்பாவை காணக் கிடைக்காது.  இந்தப் பாராமுகம் ஏன் என்று வெகு காலமாக நான் வியந்திருக்கிறேன். ஆன்மீகம் / பக்திமார்க்கம் இவற்றில் அதிகம் தொடர்பும் ஆர்வமும் இல்லாமல் இருந்ததால் இந்த விஷயத்தை நான் ஆராயாமல் விட்டுவிட்டேன்.

சமீபத்தில் ஆன்மீகம் , இந்து மதம் குறித்து அறியப் புகுந்தபோதுதான், ஊடகங்களுக்கு ‘மதம்’ எப்படிப் பிடித்திருக்கிறது என்ற உண்மையை விளக்கமாக அறிய முடிந்தது. ‘நாம் எல்லோரும் இந்துக்கள்’ என்று கூறுவது மெருகூட்டி விற்பனை செய்யும் ஒரு தந்திரம் என்பதும் , இந்தத் தந்திரத்தின் அவசியம் என்ன என்பதைப்பற்றியும் ஆராய்ந்தபோது  ‘ நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன், இருவரும் ஊதி ஊதித் தின்னலாம்’  என்ற கோட்பாடுதான் தமிழ்நாட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்பதை அறிய முடிந்தது.

இந்த உள் உண்மைகளை அறிந்திருந்தபோதும் , யாரும் வெளிப்படையாக இதனைப் பற்றி எழுதவோ பேசவோ இல்லை.  பெரியார் என்ற பொது எதிரிக்கு பயந்து , எங்கே உண்மைகளை வெளியிட்டால், இருப்புக்கும் இடைஞ்சல் வருமோ என்ற பயத்தில், உள்ளே அடித்துக் கொண்டு வெளியில் வரும்போது கைகோர்த்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அரசியல்வாதிகள் மாதிரி ஆன்மீகவாதிகள் அமைதி காத்து வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

எல்லோரும் இந்து என்று சொல்லும்போது கடவுள்களுக்கு இடையிலும் ஏன் ஏற்றத் தாழ்வுகள் என்ற என் கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை.  திருநீறு இட்டவரும், திருமண் இட்டவரும்  எல்லாக் கோவில்களுக்கும் போகிறார்களா? போவதில்லை. ஏன்?

‘எல்லாக் கடவுள்களும் ஒன்றுதான், மக்களின் வசதிக்காக பல வடிவங்களில் வழிபாடு நடக்கிறது’ என்று வியாக்கியானம் செய்யும் அதே ஆள்தான் விடாப்பிடியாக வேறுபாட்டையும் கடைப்பிடிக்கிறார் என்ற உண்மையைப் பார்க்கும்போது எத்தனை தூரம் இந்த நோய் அழுகிப் போயிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

‘அப்படியெல்லாம் இல்லை, உனக்குத்தான் பார்வைக்கோளாறு’ என்று சொல்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள், நீங்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு, எல்லா ஒலி/ஒளி/பதிப்பு ஊடகங்களையும் ஆழ்ந்த விழிப்புணர்வோடு கவனியுங்கள்.  முக்கியமாக மார்கழி மாதத்தில் திருப்பாவை போலவே, திருவெம்பாவையும் எந்த பொது ஊடகத்திலாவது பேசப்படுகிறதா என்று பார்த்து விட்டுப் பிறகு வாருங்கள், பேசலாம்.

இந்த நிலையில், கீழ்க்கண்ட என் கேள்விகள் விடையில்லாமல் விழுந்து கிடக்கின்றன.

  1. ‘அரியும் அரனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு’  என்று கதை பேசலாம், ஆனால் நடைமுறையில் இது கடைப்பிடிக்கப் படுவதில்லை, ஏன்?
  2. எடுத்ததற்கெல்லாம் ‘பகவான் கிருஷ்ணன்’, ‘பகவத் கீதை’ என்றே மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு,  தமிழிலே கிடைக்கும் இத்தனை பக்தி இலக்கியங்கள் கண்ணில் தெரிவதில்லை ஏன்?
  3. பார்த்தனின் சாரதியைப் பற்றி மட்டும் பேசுகிற ஆள், பரமேசுவரனைப் பற்றிப் பேச மறப்பது ஏன்?
  4. எல்லா ஊடகங்களிலும் வைணவமும், வைணவக் கோவில்களும், வழிபாடுகளும் முன்னிறுத்தப்படுவது ஏன்?
  5. அம்பாளை ஏற்றுக்கொள்ளும் சிலர் அம்பாளின் கணவரை மறந்து போவது ஏன்?

[தொடரும்]

Tagged: ,

One thought on “திரு எம்பாவை – மறைக்கப்பட்ட மாணிக்கம் -1

Leave a comment